புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014




""ஹலோ தலைவரே... … ஊழல் இப்படிக் கொடூரமா அப்பாவி உயிர்களைப் பறிக்கும்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை. சென்னையிலே 11 மாடி கட்டடம் சீட்டுக் கட்டு மாதிரி சரிஞ்சி விழுந்து பலரைக் காவு வாங்கியிருக்கிறதை நெனைச்சா நெஞ்சு பதறுதுங்க தலைவரே.''…

""ரொம்பக் கொடுமைப்பா.. இந்தக் கட்டடம் கட்டுவதில் ஏற்பட்ட விதிமீறல்களுக்குக் காரணமானவங்க, ஒத்து ழைப்பா இருந்தவங்க, ஆதாயம் அடைஞ் சவங்க எல்லோரையும் தண்டிக்கணும். பலியான அப்பாவிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்.''

""இந்தக் கொடூரம் நடந்து மீட்பு முயற்சிகள் நடந்துக்கிட்டிருக்கிறப்பதான், ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கைக்கோள் பறக்கவிடுறதைப் பார்க்கிறதுக்காக, பிரதம ரான பிறகு முதன்முதலா சென்னைக்கு வந் தாரு நரேந்திர மோடி. அவரை ஏர்போர்ட்டில் ஜெ. நேரில் வரவேற்றார். கவர்னர் ரோசய்யா இருந்தாரு. மத்திய இணை யமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றாரு. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் மோடியை அன்பா வரவேற்று, சென்னையில் பெய்கிற மழையும் உங்களை வரவேற்குதுன்னு சொல்லியிருக்காரு. க்ளைமேட் போலவே மோடியும் ஜில்லுன்னு ஆயிட்டாராம்.''

""மோடியை வரவேற்க ஜெ. நேரில் சென்றது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தோடு பேசப்படுதே?''

""ஆமாங்க தலைவரே... மன்மோகன்சிங் பிரதமரா இருந்தப்ப அவர் சென்னைக்கு வந்தாருன்னா ஓ.பி.எஸ் போன்ற மந்திரிகளைத்தான் வரவேற்க அனுப்புவார் ஜெ. ஆனா, மோடி வரும்போது அவரே நேரில் போய் வரவேற்ற தோடு, மோடி திரும்பிப்போகும்போதும் அவரை ஏர்போர்ட்டில் வழியனுப்பி வச்சிட்டுத்தான், தன்னோட ஸ்ரீரங்கம் தொகுதியில் திட்டங்களைத் தொடங்கக் கிளம்பினார் ஜெ. பிரதமரிடம் முதல்வர் பேசுவதற்கு தமிழக மீனவர் விவகாரம், காவிரி விவகாரம், மாநிலத்திற்கான நிதி, பெங்களூரு வழக்கு, கச்சத்தீவுன்னு நிறைய இருக்குதே!''

""அப்படியிருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்றக் கோரி மோடிக்கு மறுபடியும் லெட்டர்தான் எழுதியிருக்காரு ஜெ. ஏர்போர்ட்டில் வரவேற்றபோது, 5 நிமிடம் பிரதமரிடம் ரகசியம் பேசியதா செய்திகள் வெளியானதே?''

""டெல்லி வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே... தன் மீதான வருமான வரி வழக்கு பற்றித்தான் ஜெ. பேசினதா சொல்றாங்க. இந்தக் கேஸ் சட்டப்படி நடந்தால் ஜெ.வுக்கு கஷ்டம்தான்னு  வக்கீல்கள் தரப்பு சொல்லுது. அதிலிருந்து மீளணும்னா, வோட ஃபோன் கம்பெனி சம்பந்தமான 29 ஆயிரம்கோடி ரூபாய் வருமான வரி வழக்கில் அப்ப இருந்த காங்கிரஸ் அரசு பார்லிமெண்ட் டில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, எந்தத் தேதியிலிருந்து அந்த நிறுவனம் வரி கட்டவில்லையோ, அந்தத் தேதியி லிருந்து இச்சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதாகத் திருத்தம் செய்தது. அதாவது, வரி பாக்கியைக் கட்டி தண்டனையிலிருந்து தப்பிக்க இந்தத் திருத்தம். அதுபோல ஜெ.வுக்குத் தண்டனை கிடைக்காமலிருக்கும் வகையில், முன்தேதியிட்ட ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வர அருண்ஜெட்லியோட நிதித் துறை டெல்லியில் ஆலோசனை நடத்துதாம். ஜெ-மோடி 5 நிமிட சந்திப்போட பலன் இது தான். திங்கட்கிழமையன்னைக்கு சென்னையில் இந்த வருமானவரி வழக்கு வந்தப்ப, ஜெ. ஆஜ ராகலை. வரி கட்டப்போறதா அவரோட வக்கீல் சொல்லியிருக்காரு. வழக்கு விசாரணையும் 24-ந் தேதிக்குத் தள்ளிப் போடப்பட்டிருக்குது.'' 

""அதற்குள்ளே சட்டத்திருத்தம் வந்தாலும் வரலாம்னு சொல்லு.. பெங்களூரு வழக்கில் நீதிபதியை மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பது பற்றி நம்ம நக்கீரனில் கவர் ஸ்டோரி போட்டிருந்தாங்க. ஜெ.வின் விருப்பத்தை டெல்லி நிறைவேற்றி வைக்குமா?''’’

""முயற்சி மேல் முயற்சி தொடர்ந்து கிட்டிருக்குது. அவரை மாற்றணும்னா கர்நாடகா ஹைகோர்ட் நீதிபதிகள் கமிட்டி ஒப்புதல் தரணும். அவங்க ஒப்புதல் தரலைன்னா, புரமோஷன்ங்கிற பேரில் ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியை ஹைகோர்ட் நீதிபதியா அனுப்புவதற்கும் காய்கள் நகர்த்தப்படுதாம். சீனியாரிட்டிப்படி எட்டாவது இடத்தில் இருக்கிறார் மைக்கேல் டி குன்ஹா.''

""அவருக்கு முன்னால இருக்கிறவங்களை ஓவர்லுக் பண்ணி இவரை ஹைகோர்ட் நீதிபதி யாக்க முடியுமா?''

""நீதிபதி சதாசிவம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியா இருந்தப்ப, சென்னை ஹைகோர்ட்டில் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்ங்கிற முறையில் ஒருவருக்கு சீனியாரிட்டியைக் கடந்து நீதிபதி பதவி கொடுக்கப் பட்டது. அதுபோல மைக்கேல் டி குன்ஹாவுக்கும் தர முடியுமான்னு காய்கள் நகர்த்தப்படுதாம். ஜெ.வோட அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய வழக்குங்கிறதால அவருக் காக கவர்னர் ரோசய்யா உட்பட பலரும் கர்நாடக மாநிலத்தில் மூவ் பண்ணிக்கிட்டிருக்காங்க.''

""தி.மு.க ஏரியாவுக்கு வாப்பா.. ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் மேலே அடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும்னு கலைஞரோட மூவ்களைப் பற்றி போன முறையே நாம பேசியிருந்தோம். அது நக்கீரனில் வந்த மறுநாள், கலைஞரும் தன்னோட நிலையை உடன்பிறப்புகளுக்கு கடிதமா எழுதிட்டாரே?''

""ஆமாங்க தலைவரே... நானும் படிச்சேன். உயர் நிலை செயல்திட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி குழு அமைக்கப்பட்டதோடு, பல தரப்பிலிருந்து வந்த புகார்களையும் பரிசீலித்து, குழுவின் பரிந்துரைப் படி 33பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிற கலைஞர், அவர்களை கட்சிப் பொறுப்பிலிருந்துதான் தற்காலிகமாக நீக்கியிருக் கோம்னும், நிரந்தரமாக நீக்குவதா கூடாதா என்பது பற்றி அவர்களிடம் விளக்கம் கேட்டிருப்பதையும், 33 பேரில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் விளக்கம் கொடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்காரு.'' 

""அப்படின்னா?''

""தவறுக்கு மன்னிப்பு கேட்பவர்கள் நீடிப்பாங்கன்னு போன முறை சொன்னோமே அதுதான் இதில் தெரியுது. தி.மு.கவில் நடக்கிற ஒவ்வொரு மூவ்வையுமே அ.தி.மு.க தலைமை தொடர்ந்து கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்குது. அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை வளைப்பதற்கு வசதியா லிஸ்ட் எடுக்கப்படுவது பற்றி ஏற்கனவே பேசியிருக்கோம். நடவடிக்கைக்குள்ளான கல்வ ராயன்மலை ஒ.செ. சக்திவேல். கள்ளக்குறிச்சி தொகுதியின் எல்லா ஒன்றியங்களிலும் 5000 ஓட்டுகளுக்கு மேல் லீடிங் காட்டிய அ.தி.மு.க கல்வராயன் மலையில் 800 ஓட்டு மட்டும்தான் அதிகமா வாங்கியது. ஆனாலும் சக்திவேல் நீக்கப்பட்டுவிட்டாரு. அவரைத் தொடர்புகொண்டு பேசிய மந்திரி மோகன் அ.தி.மு.கவுக்கு சக்தி வேலைக் கொண்டு போயிட்டாரு. நிர்வாகிகளை மட்டுமில்லாமல், தி.மு.கவில் அதிருப்தியா இருக்கிற தலைமைக்கழகப் பேச்சாளர்களை வளைக்கவும் அ.தி.மு.க ரெடியாகுதாம்.'' 

""அ.தி.மு.கவின் தாக்குதலை சமாளிக்கவே தி.மு.கவுக்கு நேரம் போதாது. எதிர்த்தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்குதா?''

""இத்தனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் அந்த வேலையும் தி.மு.க வில் நடக்குதுன்னு எனக்கு தகவல் வந்திருக்குது. எம்.பி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பா அ.தி. மு.க வேட்பாளர்கள் மேலே பல இடங்களிலும் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்குது. ஃபோட்டோ ஆதாரங்கள்கூட இருக்குது. இந்த வழக்குகளையெல்லாம் வேகப்படுத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவைத்து, நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வரணும்னு தி.மு.க வழக்கறிஞர் அணிக்கு கட்சித்தலைமையால் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்குது.''


 லாஸ்ட் புல்லட்!

அண்ணா அமைச்சரவையில் கலைஞர் மந்திரியானபோது அவரிடம் குட்டி பி.ஏவாக சேர்ந்தவர் சண்முகநாதன். அதற்குமுன், தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாஞ்சிலார் உள்ளிட்ட தலைவர்களின் மேடைப் பேச்சுகளைக் குறிப்பெடுத்து போலீசுக்குக் கொடுக்கும் அந்தத் துறை யின் சுருக்கெழுத்தாளராக இருந்தவர் சண்முகநாதன். இதை கடந்த ஞாயிறன்று நடந்த சண்முகநாதன் தம்பி இல்லத் திருமணத்தை நடத்திவைத்து தெரிவித்த கலைஞர், அந்தக் குறிப்புகளைப் படித்தபோது, நான் உள்ளிட்ட தி.மு.கவினர் பேசியது அப்படியே இருந்தது. அதன்பிறகு அவரையே எனக்கு பி.ஏவாக வைத்துக் கொண்டேன் என்றவர், சம்பளத்துக்காக இல்லாமல் இயக்க உணர்வோடு என்னிடம் இப்போதும் பணியாற்றும் சண்முகநாதன், நான் உறங்கிவிட்டாலும் என் தூக்கத்தைக் கலைக்கக்கூடாது என்ற கவனத்துடன் என் பேச்சுகளையெல்லாம் முழுமையாக எழுதி, டைப்செய்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார் என்று சண்முகநாதனின் அயராத பணியை மனதாரப் பாராட்டினார்.

பா.ஜ.க அரசின் ரயில்கட்டண உயர்வை எதிர்த்து தமிழக காங்கிரஸ் சார்பில் ஜூன் 27 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஞானதேசிகன் தலைமையில் வாசன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் 500 தொண்டர்களே திரண்டிருந்தனர். மோடி அரசின் கட்டண உயர்வு அளவுக்குக்கூட தொண்டர்கள் எண்ணிக்கை உயர லையே என்று ஒரு கதர்ச்சட்டைக்காரர் சொல்ல, பத்து வருசமா ரோட்டுக்கே வராமல் இருந்துட்டோம்ல, கூட்டத்தைக் காட்டும் கலை மறந்துபோயிடிச்சி. இனிமேதான் பழகணும் என்றார் இன்னொரு கதர்ச்சட்டைக்காரர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்த ராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது விதிகளுக்குப் புறம்பானது என அவரது நியமனத்தை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம். நாவலர் நெடுஞ்செழியனின் மருமகளான கல்யாணி, கோர்ட்டில் தனக்கெதிராக வழக்கு என்றவுடனேயே ராஜினாமாவுக் குத் தயாராக இருந்தாராம். மேலிடமோ, ராஜினாமா செய்யவேண்டாம். கோர்ட் தீர்ப்பு எதிராக வந்தால் அப்பீலுக்குப் போகலாம் எனச் சொல்லிவிட்டதாம்.

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுமார் 400 பேர் திரண்ட கூட்டத்தில் தமிழ்த்  தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டு அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பழ.நெடு மாறன். நீலம்-மஞ்சள் நிறத்திலான கொடியும் அறிமுகப் படுத்தப்பட்டது. பல்வேறு தமிழுணர்வு அமைப்புகள் ஒருங்கிணைந்த இந்த நிகழ்வில் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு அழைப்பில்லை. தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியினரை அழைத்தும் வரவில்லை. தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பினர், ஈழத்தை எதிர்க்கும் இடதுசாரிகளுக்கு எம்பி. தேர்தலில் நெடுமாறன் எப்படி பிரச்சாரம் செய்யலாம் எனக் கேள்வி எழுப்பினர். 

ad

ad