புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2020

யாழ்ப்பாணத்திற்கு ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்து நிறுத்திய வட மாகாண சுகாதாரப் பிரிவு

யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து சுவிஸ் போதகருடன் பழகியவர்களை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும், அவர்களை தனிமைப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை நீடித்ததுமே இன்று பாரிய சேதத்தைத் தடுக்க கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 15இற்கு உட்பட்டவர்களுடன் யாழ்ப்பாணத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

உண்மையில் நாம் அனைவரும் எமது சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்தோம் என பெருமைகொள்ளக் கூடிய நிலையில் யாழ்ப்பாணத்தை கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

ஆயினும், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். அவர்களுக்கும் கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்க பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும் மதகுருவுடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் மீள் பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பாடசாலைகள், பல்கலைக்கழகம் மீள் ஆரம்பிக்கும் திகதியையும் மீளாய்வு செய்தல் வேண்டும். 12 நாட்களின் பின்னர் யாழில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதற்குக் காரணம் நாங்கள் போதியளவிலான பரிசோதனைகளை செய்யாமலும், பரிசோதனை செய்து தொற்றில்லாதவர்களை மீள பரிசோதிக்காமையுமே காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் கூறியபடி மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்ய வேண்டும். முதல் தொடர்புடையவர்களை மட்டுமல்ல இரண்டாம், மூன்றாம் தொடர்புடையவர்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். யாழ்ப்பாணத்தில், ஊரடங்கு தளர்த்துவது சம்பந்தமாக மாகாண பணிப்பாளர் தனது ஆளணியினருடன் மீளாய்வு செய்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்த 14 பேருக்கும் 12 நாட்களின் பின்னரே இப்பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் வைத்தியசாலைகளில் மீண்டும் அவசியமற்ற சேவைகளை ஆரம்பிக்கும்போது உள்ள ஆபத்துக்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். எனவே, ஒரு நாளைக்குச் செய்கின்ற பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்தல் இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாகும்

ad

ad