புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2013




             காவல்துறையில் தற்போது மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பவர் உளவுத்துறை ஐ.ஜி.அம்ரேஷ் பூஜாரிதான். இவர் முதல்வர் ஜெ.வை தினமும் சந்திக்கக் கூடியவர்.


அதிகாரிகள், அரசியல்வாதிகள், எதிர்க்கட்சி பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியும் கிடைக்கும் தகவல்களை ஜெ.வின் கவனத்துக்கு இவர் அன்றாடம் எடுத்துச் செல்லக்கூடியவர். உளவுத் துறை, நாட்டு நடப்பு குறித்து அன்றாடம் போடும் "நோட்'டையும் ஜெ.வின் பார்வைக்கு கொண்டு செல்பவரும் இவர்தான். எனவே இவரைப் பார்த்து துறையே மிரள்கிறது.

இப்படி காவல்துறையின் பவர் புள்ளியாக இருக்கும் உளவுத்துறை ஐ.ஜி.அம்ரேஷ் பூஜாரி பற்றிய விமர்சனங்களும் பொருமல்களும், சமீபத்தில் நடந்த புதிய கமிஷனர் அலுவலகத் திறப்பு விழாவிலேயே பரவலாக எதிரொலித்ததை நம்மால் கேட்க முடிந்தது.

கலைஞராட்சியில் ஃபண்ட் ஒதுக்கி உருவாக்கப்பட்ட 10 மாடிக் கட்டிடமான கமிஷனர் அலுவலகம், 90 சத பணிகள் முடிந்திருந்த நிலையிலும் கட்டி முடிக்கப்படாம லேயே போட்டு வைக்கப்பட்டிருந்தது. காவல்துறை அதிகாரிகளின் ஆதங்கத்துக்கு விடிவு ஏற்படும் வகையில், அந்தக் கட்டுமானப் பணிகளை 95 சத அளவிற்கு நிறைவு செய்து, கடந்த 11-ந்தேதி ஜெ.வால் திறந்து வைக்கப்பட்டது.

ஏறத்தாழ ஐந்தரை ஏக்கரில் 25.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழுந்து நின்ற புதிய கமிஷனர் அலுவலகத்தைப் பார்க்கும் போதே பிரமிப்பு தட்டியது. கட்சி மாநாடு நடப்பது போல் அ.தி.மு.க. கொடி தோரணங்களை யும் ப்ளெக்ஸ் போர்டுகளையும் ஏராளமாய்க் கட்டி ஏரியா முழுக்க அமர்க்களப்படுத்தியிருந்தனர் ர.ர.க்கள்.



அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் காலை 11 மணிக்குள் வந்து அசெம்பிள் ஆகியிருக்க, விழாப் பந்தலுக்கு எதிரே போடப்பட்ட ஷாமியா னாவின் முதல் வரிசையில் ஓய்வு டி.ஜி.பி.க்களான லட்சுமி நாராயணன், அலெக்சாண்டர், தேவாரம், நடராஜ், லத்திகா சரண் ஆகியோர் அமர்ந்திருந் தனர். அடுத்த வரிசையில் பணியில் இருக்கும் ஏ.டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் உட்கார்ந்திருந்தனர்.

நடராஜும், லத்திகாசரணும் சகஜமாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, கமிஷனர் ஜார்ஜும் அடிஷனல் கமிஷனர் ராஜேஷ்தாசும், தனியே நின்று கொண்டிருந்தனர். கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி. அசோக்குமார் ஆகியோர் நின்ற இடத்தில் உளவு ஐ.ஜி. அம்ரேஷ் பூஜாரியும் பக்காவாக தோரணையுடன் நின்று கொண்டிருந்தார்.

கமிஷனர் ஜார்ஜோடு இருந்த கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாஸ் அடிக்கடி உளவு ஐ.ஜி. அருகே வந்து ஏதோ பேசுவதும் பின் பழைய இடத்துக்கே திரும்புவதுமாக இருந்தார்.

ஷாமியானாவின் கீழ் அமர்ந்திருந்த அதிகாரிகளின் பார்வை அடிக்கடி உளவு ஐ.ஜி. அம்ரேஷ் பூஜாரிப் பக்கம் போய் போய் மீண்டு வந்த நிலையில், அவர்களின் பேச்சும் அவரையே மையங்கொண்டு நிற்க, காதைத் தீட்ட ஆரம்பித் தோம். இரண்டு ஐ.பி.எஸ்.அதிகாரிகளின் உரை யாடல் கீழ்க்கண்டபடி இருந்தது.

""புத்தூர் டெரர் ஆபரேசனை சக்ஸசா முடிச்சி, தன்னை ஹீரோன்னு டி.ஜி.பி.ராமானுஜம் நிரூபிச்சிட்டார்''.



""இருந்தும் என்ன பிரயோஜனம், அவர் ஹேப்பியா இல்லையே! அதுக்குக் காரணம் யார் தெரியுமில்லே... இதோ நிக்கிறாரே உளவு ஐ.ஜி. அவர்தான்''.


""அப்படியா?''

""என்ன அப்படியா? எதுவுமே தெரியாத மாதிரி கேட்கறீங்க. துறையில் தன்னை விட பெரிய அதிகாரிகள் முதல், கீழே இருக்கும் அதிகாரிகள் வரை ஏறுக்கு மாறா செய்தியை சி.எம்.கிட்ட கொண்டு போய்டுறார். சி.எம்.மும் இதை க்ராஸ் செக் பண்ணாம சம்பந்தப்பட்ட அதிகாரிகளை காய்ச்சி எடுத்துடறாங்க. அநியாயமா அந்தப் "பூசாரி' போட்டுக் கொடுத்துட்டாரேன்னு சம்பந்தப் பட்டவங்க புலம்பறாங்க. ஐ.ஜி.கிட்ட இருக்கும் ஃபால்ட் என்ன தெரியுமா? ஒருத்தரைப் பத்தி ஒரு தகவல் தன் காதுக்கு வந்ததுன்னா, அதை விசாரிச்சி உறுதி செய்யாமலேயே சி.எம்.கிட்ட கொண்டு போய்டறார். அதுக்குப் பிறகு அந்தத் தகவலை ஐ.ஜி.யே விசாரிக்கும் போது, அது ஃபால்ஸ் நியூஸ்ன்னு தெரிய வரும். இதை மறுபடி அவர் சி.எம். கவனத்துக்குக் கொண்டு போக மாட்டார். கொண்டு போனா இவருக்கில்ல டோஸ் விழும். அதனால கமுக்கமா இருந்துடுவார்''.

""இப்படி மற்ற அதிகாரிகளைப் பத்தி போட் டுக் கொடுக்குறதில் அவருக்கு என்ன பிராஃபிட்?''.

""பிராஃபிட் என்ன? எல்லாரும் தன்னைக் கண்டு பயப்படணும்ங்கிற ஒரு வகை ஈகோதான். சி.எம். ஆபீஸ்ல இருந்து அவங்க செயலாளர் பேசினாக் கூட, டபார்ன்னு சீட்ல இருந்து எழுந்து... சி.எம்.மாம் லைன்ல வர்றாங்கன்னு சொல்லிக்கிட்டே எழுந்து போவது அவரோட இயல்பா இருக்கு. உளவுத் துறை ஏ.டி.ஜி.பி. பதவி காலியா இருந்தப்ப, அதை டி.ஜி.பி. ராமானுஜம்தான் கவனிச்சிக்கிட்டு இருந்தார். அந்த உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பதவிக்கு சி.பி.ஐ.யில் இருந்து அசோக்குமாரை கொண்டு வந்து உட்கார வச்சாங்க. இப்ப அவர், "எனக்கு எந்த ரிப்போர்ட்டும் வரமாட்டேங்குது. எல்லாத்தையும் நேரா ஐ.ஜி.யே சி.எம்.கிட்ட கொண்டு போய்டறார். பிறகு எதுக்கு இங்க என்னைக் கொண்டு வந்தாங்கன்னு தெரியலையேன்னு புலம்பிக்கிட்டிருக்கார்''.

""அப்ப டி.ஜி.பி.யில் இருந்து ஏ.டி.ஜி.பி.க்கள், கமிஷனர்ன்னு எல்லோரையும் பொரும வச்சிக்கிட்டிருக் கார் உளவு ஐ.ஜி.ன்னு சொல்லுங்க''.

""ஆமாம் கமிஷனர் ஜார்ஜ் மீதே அவரோட பெர்ஃபார்மன்ஸ் சரியில்லைன்னு நாலஞ்சு தடவை ரிப்போர்ட் பண்ணியிருக்கார்''.

அப்போது அவர்களின் உரையாடலில் நுழைந்த இன்னொரு ஐ.பி.எஸ்., ""ஐ.ஜி. பூஜாரி நார்த்ல இருந்து வந் தாலும் அவர் நெருங்கிப் பழகுறது பூராவும் கேரளக் காரங்க கூடத்தான். திடீர் திடீர்னு அவங்கக் கூட ஜாலியா கிளம்பிடுவார். சிட்டியில் இருக்கும் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, கவர்மெண்ட் வீட்ல முறைகேடா தங்கியிருக்கும் இவரைப் பத்தி யாரும் சி.எம்.முக்கு நோட் போட மாட்டாங்களா?'' -இப்படியாக உளவு ஐ.ஜி. பற்றி காரசார உரையாடல்கள் அங்கே எதிரொலித்தன. ஜெ. கான்வாய் அப்போது வந்ததால் உரையாடல்கள் முற்றுப் பெற்று பரபரப்பு தொற்றிக் கொண்டது. பாண்டு வாத்தியம் முழங்க, குதிரைப்படை வீரர்கள் வரவேற்க, ஜெ.வின் கார், ராகுகாலம் முடிந்து 12.11-க்கு வந்து சேர்ந்தது. 

12.15-க்கு ரிப்பனை வெட்டி புதிய கமிஷனர் அலுவலகத்தை ஜெ. திறந்து வைத்தார். குத்துவிளக்கை ஏற்றி வைத்துவிட்டு, 8-வது மாடியில் இருக்கும் கமிஷனரின் அறையைப் பார்வையிடச் சென்றார் ஜெ.

இதன்பின் கீழே புகைப்படம் எடுக்கும் வைபவம் தொடங்கிய நிலையில் டி.ஜி.பி. இல்லாததால் எங்கே என்பதுபோல் ஜெ. புருவம் உயர்த்தி காத்திருக்க, பதட்டமான கமிஷனர் ஜார்ஜ், விறுவிறுவென சென்று லிப்டில் இருந்து இறங்கிய டி.ஜி.பி.யை அழைத்து வந்தார். இதன்பின் போட்டோ படலம் அரங்கேறியது.

ஜெ. புறப்பட ஆயத்தமானபோது சந்தடி சாக்கில் ""மேடம் இன்னும் பர்னிச்சர்ஸ் எதுவும் இல்லை'' என ஜெ.விடம் சொல்ல, ஜெ.வோ ""அதுக்கு 5 கோடி ஒதுக்குகிறேன்'' என்றபடி கிளம்பிச் சென்றார்.
அடுத்த கொஞ்ச நேரத்தில் 10-வது மாடி யில் லிப்ட் சிக்கிக்கொள்ள, லிப்ட் ஆபரேட்டர் ""7 பேருக்கு மேல ஏறாதீங்க. லிப்ட் தாங்காதுன்னா யாருமே கேட்கறதில்லை'' என அலுத்துக் கொண்டார். அதேநேரம் மின்சாரம் நின்று போக, லிப்ட் அப்படியே நின்றது.

""நல்லவேளை சி.எம். லிப்டில் இருக்கும் போது மின்சாரம் போகாம இருந்ததே'' என நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் அதிகாரிகள். அடுத்து சைவ, அசைவ உணவு வகைகளுடன் விருந்து வைபவம் தொடங்கியது. விருந்தைப் புறக்கணித்து முத்துக்கருப்பன் கிளம்ப ""சார், சைவமும் இருக்கு. வாங்க சார்'' என்று கூப்பிட, ""அட விடுங்கப்பா'' என்றபடி கிளம்பி விட்டார். இந்த நிலையில் அந்த அலுவல கத்தைச் சுற்றி வந்தோம். பல அறைகள் கட்டுமானப் பணி நிறைவடையாமல் புழுதியோடு பரிதாபமாகக் காட்சியளித்தது. அதேபோல் அங்கிருந்த அறைகளில் இணைப்பு கொடுக்கப்படாத கணினிகளும் தொலை பேசிகளும் வயர்களும் இறைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. முழுமையடையாத கட்டிடத்தை அவசர கதியில் ஜெ. திறந்து வைத்து சாதனை புரிந்திருக்கிறார்.

இந்த விழாவில் காக்கி அதிகாரிகள் பலரின் கவனமும் ஜெ.விடம் செல்வாக்காக இருந்து, தங்களைப் போட்டுக் கொடுக்கும் உளவு ஐ.ஜி.அம்ரேஷ் பூஜாரி மீதே இருந்தது. அவர் மீதான பார்வையில் காரமும் இருந்தது.

ad

ad