புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

சாமானியன் மீது சுமத்தப்பட்ட வீண் பழி இது! - ராஜீவ் படுகொலை கைதியின் வாக்குமூலம்-விகடன் 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 1970-ம் ஆண்டு பிறந்தேன். அப்பா தமிழக அரசின் வேளாண் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தார். அம்மா இல்லத்தரசி. 1983-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
நம் மக்களுக்காக உணர்வுபூர்வமாகப் பலரும் உதவ முன்வந்த காலம் அது. அந்த உணர்வுபூர்வமான எழுச்சி எனக்குள்ளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
வீட்டைவிட்டு வெளியேறி இராமேஸ்வரம் சென்றேன். அங்கு ஓர் அகதி இளைஞனின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் அகதிகள் படகொன்றில் 'மன்னார்’ சென்றடைந்தோம்.
அதற்கடுத்த வாரம் விடுதலைப் புலிகளின் பாசறையில் மிகுந்த மன விருப்பத்தோடு போய் சேர்ந்தேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1986-ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து 1989-ம் ஆண்டு இறுதி வரை உறுப்பினராக இருந்தேன்.
அதன்பின் இயக்கத்தில் இருந்து விலகி தமிழகம் திரும்பி 'தமிழ் தேசிய மீட்பு முன்னணி’ என்ற பெயரில் ஓர் அரசியல் - சமூக அமைப்பைத் தோற்றுவித்தேன். அப்போது நான் தமிழகத்தில் புலிகளின் ஆதரவாளன் மட்டுமே.
அந்த சமயத்தில்தான் 21 மே 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புத்தூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்தி தேசத்தையே உலுக்கியது. எல்லோரையும் போல எனக்கும் அந்த செய்தி ஊடகங்கள் வழியாகத்தான் தெரிந்தது.
சம்பவம் நடந்து இரண்டு தினங்கள் கழித்து, சிவராசன் என்னிடம் அடைக்கலம் நாடி வந்தார். அவருக்கு உதவி புரிந்தேன். இவர் எதற்காக என்னிடம் அடைக்கலம் கேட்டார் என்பதுகூட அப்போது எனக்குத் தெரியாது. ஒரு மனிதாபிமான அடிப்படையில்தான் உதவி புரிந்தேன்.
ஆனால், என்மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை எல்லாம் சி.பி.ஐ. அவிழ்த்துவிட்டது. ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் சிறையில் அடைப்பட்டு இருக்கும் இந்த 22 ஆண்டுகளாக, என்ன சொல்ல வருகிறேன் என்று யாரும் காது கொடுத்து கேட்க முன்வரவில்லை.
அன்று சி.பி.ஐ-யால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் அதற்கான தண்டனையும் வழங்கப்பட்டது.
உலகின் சக்தி வாய்ந்த ஒருவரின் மீதான கொலைப் பழியை, சதித்திட்டத்தை, என்னைப் போன்ற சாமானி யர்களின் தலையில் சுமத்தியிருப்பது எப்படி நியாயம்?
ராஜீவ் காந்தி கொலைச் சதியைப் புரிந்தவர்கள், பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், இலங்கை போன்ற நாடுகளும், இந்தியாவின் காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்பூர், நக்சல் தீவிரவாதிகளும்தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியும்.
அவற்றுக்கான ஆவணங்கள் ஜெயின் கமிஷனில் குவிந்து கிடந்தன. நரசிம்மராவ், சந்திரா சுவாமி, சுப்பிரமணியன் சுவாமி குழுவினர் மீதான புகார்கள், சான்றாவணங்கள் இருக்கின்றன. ஆனால், இன்று வரை அவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை, உரிய பதில் கிடைக்கவும் இல்லை. நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டேன்.
ஆனால், 'ஃபைல்கள் அனைத்தும் தொலைந்துவிட்டன’ என எனக்கு பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சகமும் பதில் அனுப்பி இருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு மேலாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துவிட்டு இன்னும் உண்மைச் சதியாளர்கள் யார், ராஜீவைக் கொன்ற வெடிகுண்டைத் தயாரித்தது யார், அது எங்கிருந்து, யாரால், யாருக்காக அனுப்பப்பட்டது என்பது 'துளி’ கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்போது பேரறிவாளனின் வாக்குமூலத்தை, தான் மாற்றி எழுதியதாக சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் சொல்லி இருக்கிறார். அவர் எழுதிய இந்த பொய்யான வாக்குமூலத்தால்தான் நாங்கள் இப்போது தண்டனை அனுபவித்து வருகிறோம்.
இந்த வழக்கில் தமிழ் உணர்வாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து என்னைப் போன்ற 26 பேருக்கும் கை கொடுத்த ஒரே சந்தர்ப்பம் 1998-ம் ஆண்டு நிகழ்ந்தது.
 26 பேருக்கும் தூக்கு என தீர்ப்பு சொன்ன போது ஐயா பழ.நெடுமாறன் தலைமையில் 26 பேர் உயிர் காப்பு இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டு, மக்களிடம் நிதி சேகரித்து மூத்த வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
அதன் காரணமாக 19 பேர் விடுதலையாகி, மேலும் நால்வரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைந்தது. முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் நாங்கள் விடுதலைக் காற்றைச் சுவாசிக்க முடியும். எனக்கு ஆயுள் தண்டனை கிடைத்து இத்தனை ஆண்டுகள் நாங்கள் சிறை வாழ்க்கையின் இருளிலேயே இருந்துவிட்டோம்.
விடுதலை என்றுதான் கிடைக்குமோ? வெளிச்சம் ஏற்படுமா?' என்று கேட்கிறார் ரவிச்சந்திரன்.
நீதிமன்றமும் மத்திய மாநில அரசுகளும் பதில் அளிக்க வேண்டிய கேள்வி இது!

ad

ad