புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014


பேரறிவாளன் உட்பட மூவரை விடுவிக்க வேண்டாமென்று மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறதே? கலைஞர் பதில்!
தி.மு.க. தலைவர் கலைஞர் 06.02.2014 வியாழக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களில் முடிவு எடுக்க கால தாமதம் கூடாது என்று உச்சநீதிமன்றம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்த பிறகும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் வழக்கில் மத்திய அரசு அவர்களை விடுவிக்க வேண்டாமென்று மனு செய்திருக்கிறதே?
கலைஞர் :- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தண்டனையை உச்சநீதிமன்றம் 2000ஆம் ஆண்டு உறுதி செய்தது. அதன் பின்னர் தி.மு. கழக அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள், குடியரசுத் தலைவரிடம் 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்த பிறகு 2011ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன.

தங்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் அலுவலகம் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்தது என்ற காரணத்தைக் காட்டி, தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று இவர்கள் மூவரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் “கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் காட்டப்பட்ட மிதமிஞ்சிய தாமதம், விவரிக்கப்படாத தாமதம், தண்டனைக் குறைப்புக்குத் தகுதியானது” என்று கூறி வீரப்பன் நண்பர்கள் நான்கு பேர் வழக்கு உள்ளிட்ட 13 பேர் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட 15 பேரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து 21-1-2014 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பினையொட்டி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவ் கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றிருக்கிறது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சித்தார்த் லூத்ரா வாதாடுகையில், கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க ஏற்பட்ட கால தாமதத்தைக் குறிப்பிட்டு அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் தேவை என்றும், வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார். அப்போதுதான் நீதிபதிகள் குறுக்கிட்டு, “அண்மையில் எங்களால் வழங்கப்பட்ட தீர்ப்பில் கருணை மனுவின் மீது முடிவெடுக்க தேவையற்ற காலதாமதம் எடுத்துக் கொண்டதை விமர்சித்திருக்கிறோம். எனவே இந்த மனு மீதான விசாரணையை தாமதப்படுத்த முடியாது. ஜனவரி 21ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ளமாட்டோம் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா?” என்று கேட்டு, வழக்கினைத் தள்ளி வைத்தார்கள். தற்போது அவர்களை விடுவிக்க வேண்டாமென்று மத்திய அரசு மனு தாக்கல் செய்திருப்பதாக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

ad

ad