புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014


தோட்டங்களை கிராமங்களாக மாற்றும் திட்டத்திற்கு செயல்வடிவம்

அடுத்த இலக்கை நோக்கி இ. தொ. கா செயற்படும்
தொண்டமான் பிறந்ததின விழாவில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்


தோட்டங்களை படிப்படியாக கிராமங்களாக மாற்றியமைக்கும் திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுப்பதே இ. தொ. காவின் அடுத்த இலக்கு. இது ஒரு பொறுப்பு வாய்ந்த சமூக அரசியல் நிறுவனம் என்பதால் மற்றவர்களைப் போல நாம் வாய்ச் சவடாலில் ஈடுபட்டிருக்க முடியாது. தொலைநோக்கு சிந்தனையுடன் மட்டுமே நாம் செயல்பட முடியும் என பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் 50வது பிறந்த தினத்தையொட்டி கொழும்பு செளமிய பவன் இ. தொ.கா. தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற பிறந்த தின வைபவத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் முத்து சிவலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பூஜை, இ. தொ. கா. நிறுவனர் செளமியமூர்த்தி தொண்டமான் உருவப்படத்துக்கு மாலை அஞ்சலி, பிறந்த தின கேக் வெட்டுதல் மற்றும் வந்திருந்தோருக்கான காலை உணவு என்பன நிறைவுற்ற பின்னர் அமைச்சர் முத்து சிவலிங்கம் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். மலையக சமூகம் படிப்பறிவு கொண்ட சமூகமாக மாறி வருவதால் பெருந்தோட்ட கைத்தொழில்துறை பாதிப்பை எதிர்¦நோக்கியுள்ளது. சிறு தோட்டத்துறை வளர்ச்சி கண்டு வருகிறது. இந் நிலையில் இச்சமூக மாற்றத்துக்கு மிகத் திறமையாக நாம் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே இத்தோட்டங்களை கிராமங்களாக்கி தொழிலாளர் சமூகத்தை கிராமிய சமூகமாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடர்பாக நாம் அரசுடனும் ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
‘நாள் ஐம்பது வருடகால அரசியல் அனுபவம் கொண்டவன் என்கின்ற முறையிலும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் 15 வருட காலம் பணி புரிந்தவன் என்ற வகையிலும் அவரது தலைமைத்துவத்தை நான் மெச்சுகிறேன். அவருடைய அணுகுமுறைகள் வித்தியாசமானவை. முன்னர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வேலைகொள்வோரை நாடிச் சென்று பேசவேண்டியிருந்தது. தொண்டமான் இந்த நடைமுறையை மாற்றினார். இப்போது கம்பனி பிரதிநிதிகள் எங்களை நாடிவந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இலங்கையில் வாழும் தாய்வழிச் சந்ததியினருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டபோது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த மூன்று லட்சம் வம்சாவளி மக்கள் நாடற்ற நிலைக்காகினர், அப்பிரச்சினையைத் தீர்க்கும்படி அன்றைய பிரதமர் ரணிலிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெற்ற நிலையில் அப்பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். அப்போது அவர் காட்டிய தீவிரத்தையும் விடாமுயற்சியையும் கண்டு தான் வியந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், இந்தியாவின் பா. ஜ. க அரசை தாம் வரவேற்பதாகவும் இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மலையகத்துக்கும் விஜயம் செய்து நேரடி அனுபவங்களைப் பெற்றிருக்கும் சுஷ்மா ஸ்வராஜ் வெளிவிவகார அமைச்சராக நியமனம் பெற்றிருப்பதை ஒரு சாதாரணமான அம்சமாகத் தான் பார்ப்பதாகக் கூறிய அமைச்சர், இந்திய அரசினால் அமைக்கப்பட்டு வரும் நோர்வூட் கிளங்கன் மருத்துவமனை திறப்பு விழாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இல்லை என்றும் குறிப்பிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஆறுதலாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் கூறினார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்தியாவில் இருந்து நாடு திரும்பாததால் இப்பிறந்த தின விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பாக அமைச்சர் முத்து சிவலிங்கமே கேக் வெட்டியதோடு, தொண்டமான் சிறப்பிதழாக வெளிவந்திருக்கும் காங்கிரஸ் சஞ்சிகையையும் வெளியிட்டு வைத்தார்.
மலையகத்தின் பல இடங்களில் மக்களின் ஏற்பாட்டில் பூஜை வழிபாடு, அன்னதானம் போன்ற நிகழ்வுகள் ஆறுமுகன் தொண்டமானின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்றதாக அறிய முடிகிறது.

ad

ad