புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014





நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர் தமிழின உணர்வாளர்கள்.

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலையாளன் ராஜ பக்சேவின் இந்திய வருகையை ஒவ்வொரு முறையும் தமிழர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனாலும் முக்கிய நிகழ்வுகளுக்காக இந்தியாவுக்கு வந்துபோய்க் கொண்டுதானிருக்கிறார் ராஜபக்சே. இந்திய அரசும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பைக் கொடுத்துக் கொண்டு தானிருக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் அரசு வீழ்ந்து புதிய அரசாக தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றிருக்கிறார். மோடி பதவியேற்பு வைபத்தில் கலந்துகொள்ள இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர் களுக்கு அழைப்பு அனுப்பியது இந்திய அரசு. இந்த அழைப்பின் பேரில் டெல்லிக்கு வந்து மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர் ராஜபக்சேவும் அவரது சகாக்களும்.

இந்தச் சூழலில், இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை உணர்வுபூர்வமாக நடத்தினர் தமிழர் அமைப்பினர். பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ, மோடியையும் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து, ""ராஜ பக்சேவுக்கான அழைப்பை திரும்ப பெறுங்கள். தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். மன்மோகன் அரசு செய்த தவறை நீங்களும் செய்யா தீர்கள். ராஜபக்சேவின் வருகை தடுக்கப்படாவிட்டால் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் நான் ஆர்ப்பாட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அந்த சூழலுக்கு என்னைத் தள்ளிவிடாதீர்கள்'' என்று தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்கவில்லை பா.ஜ.க. தலைவர்கள்.


இந்நிலையில், 26-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினருடன் ராஜ பக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் வைகோ. "ரத்தவெறி பிடித்த ராஜபக்சேவே திரும்பிப் போ... திரும்பிப் போ...! அனுமதிக்காதே... அனுமதிக்காதே... ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே!' என்றெல்லாம் ஆவேசமாக முழக்கமிட்டனர் வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர். அதேசமயம், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க.வினர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்து ஆவேச முழக்கமிட்டனர். 

அனைந்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் திருமலை தலைமையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பரித்தனர். "சாஸ்திரி பவனை அடித்து நொறுக் குங்கடா' என்று இளைஞர் ஒருவர் குரல் கொடுக்க... ஆவேசத்துடன் பவனை நோக்கி விரைந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸுக் கும், இளைஞர் பெருமன்றத் தினருக்குமிடையே மோதல் வெடித்தது. அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு சற்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள போலீஸார் நினைத்த மாத்திரத்தில்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், "ராஜபக்சேவே திரும்பி போ! சென்னையா? கொழும்புவா? மோடியே முடிவெடு!, இனப்படுகொலை பங்குதாரர்களே...' என்கிற பதாகைகளை ஏந்தியவாறு சாஸ்திரிபவனை முற்றுகையிட வர... அந்த பகுதி மீண்டும் பதட்டமானது. அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த, பா.ஜ.க.வையும் ராஜபக்சேவையும் கண்டித்து வீர முழக்கமிட்டனர் மாணவர்கள். அதேசமயம் இதே இயக் கத்தின்  மாணவர்கள் பலர், சென்னையிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு மோடியை கண்டித்து ஆவேசப்பட்டனர். சென்னை சேப்பாக்கத்தில், ஆயிரக் கணக்கான தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். சுட் டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கைக்குழந் தையுடன் பெண்கள் பலரும் கலந்துகொண்டது அவர் களின் உணர்வுகளை வெளிப்படுத்தியது. "வெளி யேறுடா... வெளியேறுடா...கொடுங்கோலன் ராஜபக்சேவே வெளியேறுடா! பா.ஜ.க. அரசே... பா.ஜ.க. அரசே... பகல் வேசம் போடாதே! பச்சைப்படுகொலையாளன் ராஜபக்சே மீது பாசம் காட்டாதே!' என்று ஆர்ப்பரித்தனர். 


ஆர்ப்பாட்டத்தில் மைக் பிடித்த வேல்முருகன், ""ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவழைத்து தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார் மோடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று வாய்கிழிய பேசினார்கள் பா.ஜ.க.வினர். ஆனால், ராஜபக்சே விசயத்தில் காங்கிரஸுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று நிரூபித்து விட்டார் மோடி. அவர் நினைத்திருந்தால் ராஜபக்சேவை தடுத்திருக்க முடியும். இந்திய வெளியுறவு கொள்கையே தமிழினத்திற்கு விரோதமான கொள்கைதான். ராஜபக்சேவை மகிழ்விப்பதற்காகவே அவரது தோழி சுஷ்மாசுவராஜுக்கு வெளியுறவுத் துறை ஒதுக்கப் பட்டிருக்கிறது. ஈழத்தமிழினத்திற்கும் தமிழகத்திற்கும் துரோகமிழைத்த காங்கிரசை வேரறுத்தோம். இனி பா.ஜ.க.வை வேரறுப்பதுதான் உணர்வுள்ள தமிழர்களின் பணியாக இருக்க வேண்டும்'' என்று ஆவேசப்பட்டார் வேல்முருகன்.

அதேபோல, சீமானின் நாம் தமிழர் கட்சி, திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம், தமிழருவி மணியனின் காந்திய மக்கள் கட்சி,  ராஜாஸ்டாலினின் உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், வேலுமணியின் தமிழர் எழுச்சி இயக்கம், கு.பாரதியின் தென்னிந்திய மீனவர் இயக்கம், கபடி மாறனின் தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் மற்றும் பல்வேறு வழக் கறிஞர்கள், மாணவர் இயக்கங்கள் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் கறுப்புக்கொடி போராட்டங் களையும் வீரியமாக நடத்தின. இதனால், மோடி பதவியேற்ற 26-ந் தேதி தமிழகம் முழுவதும் போராட்டங்களால் பதட்டமடைந்திருந்தது.  

இத்தகைய எதிர்ப்புகள், உளவுத்துறையினர் மூலம் மோடி அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து எவ்வித பதட்டமும் அடையவில்லை மோடி அரசு. ராஜபக்சே வை மையப்படுத்தி பா.ஜ.க.விற்கு எதிரான தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து பா.ஜ.க.வின் தேசிய செயலர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசியபோது, ""ராஜபக்சேவின் வருகை ஈழத்தமிழர்களின் நலனுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்திவிடாது. மோடியின் பதவியேற்பில் ராஜ பக்சே கலந்துகொள்வதால் தமிழர்களுக்கு எதிரான இலங்கை யின் நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. எந்த சூழலிலும் ஈழத் தமிழர்களின் நலனையோ, தமிழக மீனவர்களின் பாதுகாப்பை யோ பா.ஜ.க. அரசு விட்டுக்கொடுக்காது'' என்கிறார்.

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல்  பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக எதிரொலிக்கிறது.

ad

ad