1 ஜன., 2015

ஒருதலை காதல்; பிளஸ் 2 மாணவி கழுத்தறுத்து கொலை; வாலிபர் சிறையில் அடைப்பு

கோவை மாவட்டம், சூலுாரை அடுத்த மதியழகன் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன். இவருடைய மகள் ரூபா (வயது- 17). இவர் காங்கயத்தில் உள்ள ஒரு கிறிஸ்துவ நிறுவனத்தின் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்த இவரை, பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் பெயிண்டர் தொழில் செய்துவரும் சுரேஷ் (வயது-22) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை மறித்த சுரேஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளான். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சுரேஷ் தான் வைத்திருந்த கத்தியால், மாணவியின் குரல்வளையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, நேற்று முன் தினம் இரவு மாணவி இறந்தார்.

சூலுார் போலீசார் வழக்குப்பதிவு நேற்று காலை செங்கத்துறையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சுரேசை கைது செய்தனர். சுரேஷ் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தன்னுடன் பழகி விட்டு, தனது மதுபழக்கத்தை காரணம் காட்டி, திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தான் மாணவி ரூபாவை கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளான். இதைதொடர்ந்து, போலீசார் நேற்று அவனை நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.