1 ஜன., 2015

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் மட்டும் மொத்தம் 83 விபத்துக்கள்

சென்னையில் புதன்கிழமை இரவு மட்டும் 83 இடங்களில் நடந்த விபத்துக்களில் ஒரு மூதாட்டி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். 52 பேர் படுகாயம்
அடைந்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் சாமிநாதன் நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், தனது நண்பர் ஸ்ரீதருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே தாறுமாறாக வந்த ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் ராஜேஷ், ஸ்ரீதர் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதேபோன்று கீழ்ப்பாக்கம் தோட்டச்சாலை பகுதியில், சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த லட்சுமி என்ற மூதாட்டி மீது வேகமாக வந்த ஆட்டோ மோதியதில் உயிரிழந்தார். இந்த இரண்டு விபத்துக்களையும் ஏற்படுத்தியது ஒரே ஆட்டோவாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சென்னையில் மட்டும் மொத்தம் 83 விபத்துக்கள் நிகழ்ந்ததில், 53 பேர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச்சை பெற்று வருகின்றனர்.