புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015



சூப்பர் ஸ்டார் ரஜினியை வெள்ளித்திரை உலகுக்கு கண்டுபிடித்து கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். எங்கோ இருந்த சிவாஜிராவை ரஜினியாய்ச் செதுக்கிய பெருமை இவருக்கே உண்டு. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி இந்த உலகம் முழுக்க கோடிக்கணக் கான ரசிகர்களை இன்று தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார். வாலிப முறுக்கோடு தமிழக மண்ணில் அடியெடுத்து வைத்த ரஜினி முப்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாளுக்கு நாள் இளமையாக, கம்பீரமாக, துடிப்பாக, ஸ்டைலாக புகழின் உச்ச உச்சங்களை நோக்கி நகர்ந்தபடியே இருக்கிறார். ரஜினியின் இதயத்தை, ரசனையை, அவரது பலம்- பலவீனத்தை முழுமையாக அறிந்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசானான இயக்குனர் சிகரம் பாலசந்தர். சூப்பர் ஸ்டார் பற்றிய கேள்விகளோடு அவரை நாம் அணுகினோம். உடல்நலக் குறைவுக்கு மத்தியிலும் "இனிய உதயம்' வாசகர்களுக்காக ரஜினி குறித்த எண்ணங்களை உற்சாகமாகவே பகிர்ந்து கொண்டார் பாலசந்தர். அவரது இந்த பேட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு பிறந்தநாள் பரிசாக வழங்கி "இனிய உதயம்' பெருமைகொள்கிறது.


 தமிழ்த் திரையுலகில் பல சிகரப் படைப்புகளையும், பல சிகரப் படைப்பாளி களையும் தந்தவர் நீங்கள். அதில் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி உங்களால் திரையுலகுக்குக்  கிடைத்த வெகுமதி. அவரை முதலில் எங்கு பார்த்தீர்கள்? எப்படிப் பார்த்தீர்கள்? அவரை நடிக்கவைக்க முடியுமென்று எப்படி நினைத்தீர்கள்?




திரைப்படக்கல்லூரிக்கு என்னோட நண்பர்- லெக்சரர் ஒருத்தர் அழைச்சிருந்தார். கன்னடத்தைச் சேர்ந்த, திரைப்படக் கல்லூரி மாணவர் ஒருவர் என்னைச் சந்திக்க ஆசைப் படறதா சொன்னார். நான் அவரை அப்படித்தான் முதன்முதலா பார்த்தேன். ரொம்ப ஸ்டைலிஷா இருந்தார். அவருக்கு உள்ளுக்குள்ள பயம் இருந்துச்சு. இருந்தாலும் பயத்தை வெளிக் காட்டாம நடிச்சுக் காட்டினார்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. அப்புறம் ஒரு நடிகனுக்கு முக்கியமான விஷயம் என்னனு என்கிட்ட கேட்டார். ""சினிமாவுக்குள்ள நடிக்கணும். வெளிய நடிக்கக் கூடாது'னு சொன்னேன். அதைக் கேட்டதும் அவர் சிரிச்சார். அதை அவர் இன்னைக்கு வரை பாலோ பண்றார். அவர் பொய் சொல்றதே யில்லை. ஒரு நிலைப்பாடு எடுத்தார்னா அப்புறம் மாறுறது இல்லை. அந்த நிலையை எட்டுறதுக்கு பலபேர் உதவியா இருந்திருப்பாங்க. கூடவே தெய்வீக சக்தியோட உதவியும் அவருக்கு இருக்கு. பொய் சொல்லக் கூடாது, எப்பவும் நல்லதே செய்ய ணும்னு சில பண்புகள் அவருக்குள் ஊறிப்போயிருக்கு. அந்தமாதிரி குணங்கள்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டுபோனது. அதுதான் அவரோட வெற்றி ரகசியம்.

அவரோட கேரியர் கிராப் நீங்க பார்த்துக் கிட்டு இருப்பீங்க. அதைத் தொடங்கிவைத்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?


நான் முதல் படத்துல இருந்து அவரைப் பார்த்துக்கிட்டிருக்கேன். வரிசையா ஏணிமேல ஏணி வெச்சது மாதிரி அவர் உச்சத்துக்குப் போய் விட்டார். நான் அண்ணாந்து பார்க்குமளவு உச்சத்தை அவர் அடைஞ்சிட்டார். இருந்தாலும் அவர் என்னைதான் குருநாதரா நினைக்கிறார்.

நான் இல்லைனாலும் அவர் நடிகனாயிருப்பார். எனக்குப் பதில் இன்னொருத்தர் வாய்ப்பு தந்திருக்கலாம். இல்லை கன்னடத்துல நடிகரா ஆகியிருக்கலாம். அவர் வாழ்க்கை சாதாரணமா ஆகியிருக்கலாம்; இல்லை இதைவிட அசாதாரணமா ஆகியிருக்கலாம்.

ஆனா நான் என் படத்துல வாய்ப்புத் தந்ததுக்கொரு வேல்யூ இருக்கு. கமல்ஹாசன், ஸ்ரீவித்யா நடித்த படம். அதுல நடிச்சதுல அவருக்கொரு பெயர். நான் வாய்ப்புத் தரும்போதே இது கடைசி வரை வர்ற ரோல் இல்லை. ஆனா இது உங்களை அடையாளம் காட்டும்னு முதல்லயே சொன்னேன். அது மாதிரிதான் "பேசும் படம்' பத்திரிகைல, "இப்படி ரஜினி காந்த்னு ஒருத்தரை அறிமுகப்படுத்தி யிருக்கேன். அவரை கவனிக்கணும். கவனீப்பீங்க'னு எழுதினேன். பெரிய இடத்துக்கு வரும் திறமை அவருக் குண்டு'னு எழுதினேன்.



ஒருத்தொருக்கொருத்தர் நண்பர்களா புதுசா சந்திக்கும்போது, இவர் புத்திசாலியா இருக்காரே'னு பலர் நினைக்கலாம். அப்படி அடையாளம் கண்டுகொள்கிற உணர்வு எனக்குண்டு. ரஜினி நிச்சயமா பெரிய ஆளா வருவார்னு எனக்கொரு எண்ணம் இருந்தது. அதனாலதான் முதல்லயே மூன்று படத்துக்கும் சேர்த்து அட்வான்ஸ் கொடுத்தேன். "அபூர்வ ராகம்', "மூன்று முடிச்சு', "அவர்கள்'- மூன்று படத்துலயும் அவரை மூன்றுவிதத்துல போர்ட்ராய்ட் பண்ணியிருந்தேன். ஜனங்க மனசுல அவரைப் பதியவெச்சேன். நடுவுல மத்தவங்களும் அவரை வெச்சுப் பண்ணினாங்க. "இதுமாதிரி ஒரு வாய்ப்பு வருது. நடிக்கலாமா சார்'னு என்கிட்ட வந்து கேட்பார். "தாராளமா நடிக்கத்தான வந்திருக்கே' சொல்வேன்.

அவரை மாதிரி ஒரு மனிதரை, தங்கமான குணமுள்ளவரைப் பார்க்க முடியாது. அவர்மேல எனக்கொரு அபிமானம் உண்டு. அதே போல அவருக்கும் என்மேல மிகப்பெரிய அபிமானம் உண்டு. பயம் உண்டு. உணர்வுகள்ல நாங்க ரெண்டு பேரும் நெருக்கமானவங்க. அதனாலதான் அவரை நல்ல நடிகனா ஆக்கணும்னு "மூன்று முடிச்சு' படத்துல அருமை யான வில்லன் கேரக்டரை உருவாக்கினேன்.

கறுப்பா இருக்காரே ஹீரோ வுக்கு சரிப்பட்டு வரமாட்டார்னு பேசுனாங்க. அப்புறம் என் படத்துல ஆண்டி ஹீரோவை போட்டதைப் பார்த்து, அந்த நம்பிக்கைல ஏ.வி.எம் அவரை வெச்சு படமெடுத்தது. அப்புறம் எல்லாரும் படமெடுக்க முன் வந்தாங்க.

அப்புறம் ஒவ்வொரு படத்து லயும் நல்ல பெயர் வாங்கினான். கூடவே நல்ல குணம், மனிதாபி மானம் இருந்துச்சு. நடுவுல ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அவருக் கொரு இக்கட்டு வந்துச்சு. அந்த நேரம், நான்தான் அவருக்கு பாதுகாப்பா இருந்தேன். "அவ்ளோ தான் ரஜினி தொலைஞ்சார்'னு நிறைய பேர் எழுதினாங்க. அதையும் மீறி உருவாகி வந்தார்.

"இவர் தேறமாட்டார்'னு நினைச்சு எப்பவாச்சும் அவர் மேல கோபப்பட்டு பேசியிருக்கீங் களா?


அவர் என்னால் உருவாக்கப் பட்டவர். ஒரு குருவுக்கு கோபித் துக்கொள்கிற உரிமை கிடையாதா? "அவர்கள்' படத்துல ஒரு காட்சி. திரும்பத் திரும்ப நடிச்சுக் காட்டியும் ரஜினிகாந்துக்கு அந்த காட்சி சரியா வரலை. ஒரு குழந்தையை வெச்சுக்கிட்டு நடிக்கணும். குழந்தை அவர்மேல மூத்திரம் போற மாதிரி காட்சி. அதை ஃபீல் பண்ணி நடிக்கணும். எத்தனையோ முறை பண்ணியும் சரியா வரலை. உனக்கு நடிக்கவே வராதானு கோவிச்சுக்கிட்டு பேக் அப் சொல்லி$$ட்டேன். அதான் அவரைக் கொஞ்சம் கோவிச்சுக் கிட்டது. அற்புதமா அவர் வரணும்கிற ஒரு ஐடியாவுலதான் அப்படிச் சொல்றோம். அவருக்கும் அது தெரியும். இந்த சம்பவத்தை அவரே இன்டர்வ்யூல சொல்லியிருக்கார்.

உங்களுக்கிடையிலான குரு- சிஷ்யன் உறவு எத்தகையது?

எனக்கும் அவருக்குமான அட்டாச்மெண்ட் வேற யாருக்கும் வராது. அன்னையிலிருந்து இன்னைக்கு வரை ரெண்டு பேருக்கும் ஒரு நெருக்கம் இருக்கு.

நான் அவரை பார்க்கணும்னு வீட்டுக்கு வர்றேன்னு சொல்வேன். இல்ல இல்ல நானே வர்றேன்னு சொல்வாரு. இல்லடா வர்ற வழிதான். நானே வர்றேன்னாக்கூட கேட்கமாட்டார். அவரை சிஷ்யன்னு சொல்லிக்கிறதுல பெருமைப்படுறேன். நான் கூப்பிட்டா எங்கிருந்தாலும் ஓடி வந்துடுவாரு. ஆனாலும்  நான் அவரை அதிகம்  தொல்லைப் படுத்தினதில்லை.

ஒரு காலகட்டத்துக்குப்பின் அவரை வைத்து படம் இயக்கு வதை நிறுத்திவிட்டு, படம் மட்டுமே தயாரித்தீர்களே ஏன்?

அவருக்குனு ஒரு பாணி உருவாகிடுச்சு. அதுமாதிரியான படங்களை நான் இயக்கமுடியாது. அதனால ரஜினி நடிக்க எஸ்.பி. முத்துராமனை வைத்து சில படங்களை தயாரிச்சேன். அந்தப் படங்கள்ல நான் குறுக்கிடறது இல்லை. என்ன மாதிரி பாடல்கள் வேணும். எல்லாம் இயக்குநர் பொறுப்புல விட்டுடுவேன். என் முன்னால ரஜினி அவரோட இயல்புல நடிக்கச் சிரமப் படலாம்னு ஷுட்டிங்கூட அதிகம் போகமாட்டேன்.

கமலுக்கும் ரஜினிக்குமான வித்தியாசம்?


கமல் என்கிட்ட ஈஸியா பேசுவான்; எதுவானாலும் சொல்வான். அவனோடது  அது மாதிரியான அணுகுமுறை. அவன் தோள்ல ஈஸியா கைபோட்டுப் பேசலாம். ரஜினிகூட போட்டோ வுக்கு நின்னாக்கூட அடக்கமா கொஞ்சம் விலகியே நிற்பார். குரு என்ன சொல்றாரோ அதுதான் வேதவாக்கு அவருக்கு. நாங்க  ரொம்ப இழைஞ்சுக்கமாட்டோம். அப்படியே அவர் அதைக் காப்பாத்திட்டு வர்றாரு.

ரஜினியை நினைத்துப் பெருமிதப்படும் விஷயம்?


சமீபத்தில் கோவாவில் வைத்து அவருக்கு வழங்கப்பட்ட விருது. மிகப்பெரிய இந்திய அளவிலான மரியாதை அது. போன் பண்ணி வாழ்த்துச் சொன்னேன். ஒரு தந்தையா எனக்குப் பெருமையா இருந்துச்சு. அவர் விருது வாங்கும் போது என் கண்ணுல கண்ணீர் வந்துடுச்சு.

இன்றைக்கு ஒவ்வொரு கட்சி யும் அவரை தனக்கு ஆதரவாக அரசியலுக்கு இழுக்க விரும்பு கிறது. ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டுமென விரும்புகிறார்கள். இது குறித்து உங்களிடம் ஏதாவது பேசுவாரா- ஆலோசனை கேட்பாரா?


அவரை எல்லாரும் அரசிய லுக்கு இழுக்கணும்னு பார்க்கி றாங்க. அவருக்கு அது விருப்பமா, இல்லையா என்ன நினைக்கிறார்னு தெரியலை. அது விஷயமா அவர் என்கிட்ட ஒரு வார்த்தையும் பேசினதில்லை. நானும் அவரிடம் கேட்டதில்லை.

ரஜினிகாந்தின் இன்றைய படங்கள் நிலை வேறு, திரும்பவும் அபூர்வ ராகங்கள்', "மூன்று முடிச்சு' போன்ற படங்களில் நடிக்கவேண்டுமென விரும்புகிறீர்களா?


அது அவர் விருப்பம். அவர் தேர்ந்தெடுத்த பாதை. அதில் அவர் சூப்பர் ஸ்டாரா ஆயிட்டார். அவர் படங்கள் பெருசா பேசப்படணும்கிற நினைப்பு அவருக்கு இருக்கு. அவருடைய இப்போதைய நிலை நான் எதிர்பார்க்கிற நிலை இல்லை. அதுல நான் தலையிடறதில்லை. சரி, அவர் பாதையில பெரிய ஆளா வரவேண்டியதுதான். அதுல நல்ல பெயர் எடுக்கிறது, முந்தைய பட ரெக்கார்டை பிரேக் பண்றதுனு அவர் டிராவல் பண்ணிக்கிட்டிருக்கார்.

உங்களுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்வாரா?

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வந்து வாழ்த்துச் சொல்வார். இல்லை வெளியிலிருந்தா போன்ல வாழ்த்துவார். நான் அவருக்கு ரஜினிகாந்த்னு பேர் வெச்சது ஒரு ஹோலி- தினத்தன்றுதான். ஒருசமயம் ரஜினி தெலுங்குல நடிச்சுக்கிட்டிருந்தார். எனக்கும் தெலுங்குல ஒரு படத்தோட ஷுட்டிங். அன்னைக்கு ஹோலிப் பண்டிகை. அவர் என்னைத் தேடிவந்து அதை நினைவுபடுத்திட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போனார். அதுமாதிரி சில விஷயங்களை அவர் எப்பவும் மறக்கறதில்லை.

உங்களுக்கிடையேயான ஒரு தர்மசங்கடமான சம்பவம்?


அவர் உடல்நிலை சரியில்லாம ராமச்சந்திராவுல இருந்தப்ப அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் சிகிச்சைக்காக அன்னைக்கு சிங்கப்பூர் கிளம்புறார். அப்ப லதா எதிரே வந்து ""நீங்க இப்ப அவரைப் பார்க்காம இருக்கிறது நல்லது. அவரை டாக்டர்ங்க ஒரு பொஸிஸன்ல  வெச்சுருக்காங்க. உங்களைப் பார்த்தா சும்மாயிருக்க மாட்டார். எழுந்துக்க பார்ப்பார்'னு சொன்னாங்க. சரின்னு  பார்க்காமலே திரும்பிட்டேன். இருந்தாலும் போன் பண்ணி விசாரிச்சிட்டே இருந்தேன். நல்லகாலம், அவரோட கடவுள் நம்பிக்கை, லட்சக்கணக்கான ரசிகர்களோட பிரார்த்தனை அவர் மீண்டெழுந்து வந்துவிட்டார்.

ரஜினியிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவது எதை.


அவரோட நேர்மை, பணிவு, மரியாதை எந்த சூழ்நிலையிலும் கோபப்படாத அவரோட தன்மை இதையெல்லாம் எல்லாரும் கத்துக்கிடணும்.

நீங்கள் வாழ்க்கை கொடுத்த ரஜினி, இன்று பலருக்கு வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றி...


ஆமா, ரஜினி- கமல் இவங்க ரெண்டு பேருமே இன்னைக்கு எத்தனையோ பேருக்கு வாழ்க்கை கொடுக்கிறாங்க. இரண்டு பேருமே சிறந்த சிஷ்யர்கள். சிறந்த மனிதர்கள். இது மாதிரியான இரண்டு சிஷ்யர்கள் எவரொருவருக்கும் அமைவது ரொம்ப அரிது.

64- ஐத் தொடும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உங்கள் இதயமார்ந்த வாழ்த்தை எப்படி பதிவுசெய்ய விரும்புகிறீர்கள்?

இதுவரை மக்களுக்கு நேர் எதிரிடையான சம்பவத்துக்கோ, சிந்தனைக்கோ இடம் ரஜினி கொடுத்ததில்லை. அவருக்குனு ஒரு கோட்பாடு இருக்கு. ரஜினிகாந்த் இனியும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றணும். இன்னும் பெரிய உயரங்களைத் தொடணும்.

ad

ad