1 ஜன., 2015லகின் மிகக்கொடிய மதப் பயங்கரவாதிகளான ஐ.எஸ்.ஸின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 10 நாட்கள் இருந்துவிட்டு உயிரோடு திரும்பியிருக்கிறார், ஜெர்மன் பத்திரிகை யாளர் ஒருவர். 


ஈராக், சிரியா, லிபியா நாடுகளின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி, இசுலாமிய அரசு எனும் தனி நாடாகப் பிரகடனம் செய்திருக்கும் ஐ.எஸ். இயக்கம், அண்மையில்தான் அமெரிக்க செய்தியாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே, ஸ்டீவன் சாட்லாஃப் ஆகியோரை தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொன்றது. அதை வீடியோ காட்சியாக எடுத்து, இணையத்திலும் வெளியிட்டது. இந்த நிலையில்தான், 74 வயதான டோடன்காபர் எனும் ஜெர்மன் பத்திரிகையாளர், ஐ.எஸ். பகுதிக்குள் போய்விட்டு டிச. 16-ஆம் தேதி நாடு திரும்பியிருக்கிறார். 

""என்னுடைய வாழ்க்கையில் இதுவரை இவ்வளவு கொடூரமான, இவ்வளவு பயங்கரமான தீவிரவாதிகளைப் பார்த்ததே இல்லை''’எனும் டோடன்காபர், மேற்கத்திய நாடுகள் நினைப்பதைப் போல ஐ.எஸ். இயக்கம் அவ்வளவு சாதாரணமானது அல்ல என எச்சரிக்கை போலச் சொல்கிறார். ஆபத்தான இந்த பயணத்தின் மூலம், கடந்த வாரம் முழுவதும் பன்னாட்டு ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறிப்போனார், டோடன். 
நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களைப் பிடித்துவைத்து, அவ்வப்போது கொடூரமாகக் கொன்றுவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பகுதிக்குள், டோடன் மட்டும் எப்படி உள்ளே போனார்? எப்படி பத்திரமாகத் திரும்பினார்? 

""பயணம் செய்வது என முடிவெடுப்பதற்கு முன்பு, ஏழு மாதங் களாக தொடர்ந்து இணையத்தில் ஐ.எஸ். ஆட்கள் 80 பேருக்கும் மேற் பட்டவர்களுடன் தொடர்ந்து பேசியிருப் பேன். ஸ்கைப் (இணையதள வீடியோ மூலம்) பேசிப் பார்த்ததில், ஐ.எஸ். பகுதிக்குள் எங்களின் உயிருக்கு ஆபத்து இருக்காது என இரண்டு பேர் உத்தரவாதம் அளித்தது, நம்பக்கூடிய தாக இருந்தது. என் குடும்பத்தினரும் உறவினர்களும் அந்த உத்தரவாதத் தின் உண்மைத்தன்மையை நம்பவில் லை. ஆனாலும் என்னுடைய உள்ளு ணர்வு, என்னைக் கிளம்பத் தூண்டியது. நான் புறப்படத் தயாரானபோது, என் முடிவுக்கு எதிராக நின்றது, என் மொத்தக் குடும்பமும். அவர்களை சம்மதிக்க வைக்க நான் முயல, என் மகன் பிரெட்ரிக்கும் உடன் வருவதாக அடம்பிடித்தான். என்னால் மறுக்க முடியவில்லை.  அமெரிக்கப் பத்திரிகை யாளர் ஜேம்ஸ் ஃபோலேவுக்கு நேர்ந்த கதி, எனக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தேன். ஒரு வகையில் இது கடினமான பயணம் என்றும் சொல்லமுடியாது. ஏற்கனவே, உள்நாட்டுப் போர் நடக்கும் சிரியாவில் அதிபர் அசாத்துடனும் அதே நேரம் அரசுக்கெதிரான அல்கொய்தா, எஃப்.எஸ்.ஏ. ஆயுதக் குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். 


இதேபோல அமெரிக்க அரசின் பின்னணியுடன் போர் நடந்த ஆப் கானிஸ்தானுக்கு பல முறை போயிருக் கிறேன். அப்போதைய ஆப்கன் அதிபர் கர்சாயுடனும் அரசை எதிர்க் கும் ஆப்கன் தாலிபன்களுடனும் என் னால் பேசமுடிந்தது. ஈராக்கில் சியா பிரிவு முஸ்லிம் ஆட்சியாளர்களுடனும் எதிர்த்தரப்பு சன்னி முஸ்லிம் தரப்புட னும் ஒரே காலகட்டத்தில் பேசியிருக் கிறேன். என்னைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சிரியா மற்றும் ஈராக் குடிமக்களின் உரிமைகளுக்காக வும் ஐ.எஸ்.நடவடிக்கைகளுக்கு நான் எதிரானவன் என்பதும் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்க வில்லை. அண்மையில், கத்தோலிக்கர்களின் தலைமைகுரு போப் ஜான்பால்கூட, ஐஎஸ் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சொல்லியிருந்தார். அது மட்டுமல்ல, அவர்களுக்கு மேற்கத்திய நாடுகளுடன் பேசுவதற்கான தொடக்கமாக இதை வைத்திருக்கலாம். நான் உங்கள் பக்கம் இல்லை எனக் குறிப்பிட்டதற்கு, ‘"அது எங்களுக்கு விசயம் இல்லை. இங்கே பார்த்ததை, கேட்டதை வெளியில் சொன்னால் போதும், எங்களைப் பற்றி ஏற்கனவே நீங்கள் வைத்துள்ள கருத்தை அல்ல' எனக் கூறினார்கள்'' என்றவர் தொடர்கிறார். 

""பென்காசி நகரில் ஜேம்ஸ் ஃபோலே தங்கிய ஓட்டலில்தான் நாங்களும் தங்கினோம். அவர்களைவிட அமெரிக்க மற்றும் சிரிய ராணுவத் தாக்குதலுக்குதான் அதிகமாக பயப்படவேண்டி இருந்தது. ஈராக்கின் மொசூல் நகரத்தில் அமெரிக்கப் போர்விமானங்கள் அவ்வப்போது ரீங்காரமிட்டபடி பறந்துசென்று கொண்டிருந்தன. மொசூலில் இருந்து சிரியாவின் ரக்கா நகருக்கு வர மூன்று நாட்கள் தாமதம் ஆகிவிட்டது. ரக்காவில் ஏற்கனவே நாங்கள் தங்கியிருந்த வீடு, நாங்கள் அங்கு திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிரிய விமானப் படையால் முற்றிலுமாகத் தாக்கி அழிக்கப்பட்டு இருந்தது. எந்த வீட்டிலும் கதவுகளோ சன்னல்களோ இல்லை. எல்லா இடங்களிலும் கண்ணாடிகள் நொறுங்கிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. பயணம் முழுவதுமே அசௌகர்யமாகவே இருந்தது. சில நேரம் உணவு இல்லை, சில வேளைகளில் குடிக்கத் தண்ணீர் கூட இல்லை. 

மொசூலில் நாங்கள் இருந்தபோது, எங்களுடன் இருந்த சிலரை அடையாளம் கண்டு அழிப்பதைப் போல அமெரிக்க ஆளில்லா விமானங்களின் ஏவுகணைகள் வந்து விழுந்தன. நாம் (மேற்கத்திய நாடுகள்) நினைப்பது போல, ஐ.எஸ். இயக்கம் அதிக பலமுள்ளதாகவே இருக்கிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்கிறார்கள். பெரும்பாலும் துடிப்பான இளம் வயதினர். அதிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், அதிகம் பேர். துருக்கி வழியாக புதிதாகச் சேரும் இளை ஞர்களுக்கான வரவேற்புக் கூடத்தில் நான் இரண்டு நாட்கள் இருந்தேன். அங்கு ஒரு நாள் மட்டும் 50 புதியவர்கள் வந்ததைப் பார்த்தேன். அமெரிக்கா, இங்கிலாந்து, சுவீடன், ரசியா, ஜெர்மனி, பிரான்சு ஆகிய பல நாடுகளிலிருந்து அவர்கள் வரு கிறார்கள். 

அமெரிக்காவிலிருந்து ஒருவர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதை யோசிக்கமுடியுமா? அங்கு, நியூஜெர்சியில் சட்டப்படிப்பை முடித்த ஒரு இளைஞர், வழக்குரைஞர் பயிற்சியைத் தொடங்கி, ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது. அதை விட்டுவிட்டு ஐ.எஸ்.-க்கு வந்துவிட்டார். ஈராக் பகுதியில் 30 சதவீதம் ஆயுததாரிகளும் சிரியப் பகுதி யில் 70 சதவீதம் ஆயுததாரிகளும் இப்படி வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தான். இதுவரை எத்தனையோ போர்க்களங் களைப் பார்த்திருக்கிறேன், இந்த உற்சாகம் எங்கும் இருந்ததில்லை. எல்லாரும் எதிரியைத் தோற்கடிக்கத் துடிப்பார்கள். இவர்களோ சாவதற்குத் தயாராக இருக் கிறார்கள். எடுத்துக்காட்டாக, மொசூல் நகரில் 25 ஆயிரம் ஈராக் ராணுவத்தினரை வெறும் 400 ஐ.எஸ். பயங்கரவாதிகள் எதிர்த்து நின்று வெற்றிபெற்றிருக்கிறார்கள். சில மாதங்களில் பிரிட்டனின் பரப்பைவிடப் பெரிய பரப்பை அவர்கள் கைப்பற்றியிருக் கிறார்கள். இவர்களை ஒப்பிட அல்கொய்தா வெல்லாம் சிறியதுதான்''’’ என நடப்பு நில வரத்தைக் கலவரமாகச் சொல்லும் டோடன், ஐ.எஸ்.இயக்கத்தின் பயங்கரத் தன்மை யையும் அப்பட்டமாகத் தோலுரிக்கிறார். 

""அவர்களின் கொள்கையை ஏற்பவர் களைத் தவிர, அவர்களின் அரசில் யாருக்கும் இடமில்லை. "அவர்கள் சொல்லக்கூடிய இசுலாம் முறை'களைக் கடைபிடிக்காத முஸ்லிம்களும் கொல்லப்படுவார்கள். கிறிஸ்தவர்கள், சியா முஸ்லிம்கள், யசிதிகள்(ஈராக் பழங்குடியினர்) உள்பட மற்ற சமூகத்தினர் அனைவரையும் கொல்வோம் என சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இறைமறுப்பாளர்களும் விதிவிலக்கு அல்ல. சன்னி முஸ்லிம் அல்லாத பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக ஆக்கு கிறார்கள். தப்பித்தவறி யாராவது ஜனநாயகம் பேசினால், அவர்களுக்கும் படுகொலைதான் பரிசு. இப்படியே உலகை முழுவதும் வெல்லமுடியும் என அவர்கள் நினைக் கிறார்கள். மனிதகுல வரலாற்றில் இதுவரை நடைபெறாத மதரீதியிலான பெரும் மனித அழிப்பு முயற்சி இது. மேற்கு நாடுகளின் தலைவர்கள் கருதுவதைப் போல, இது சாதாரணமானது அல்ல. 

வல்லரசுகளின் பனிப்போருக்குப் பிறகு, உருவெடுத்துள்ள மிகப் பெரிய அபாயம், இது. ஏவுகணைகள் மூலமும் ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலமும் இந்த அபாயத்தை முறியடித்துவிட முடியாது. அவர்கள் மக்களோடு மக்களாக இருக்கிறார்கள். முப்பது லட்சம்  பேர் வாழும் மொசூல் நகரத்தை, 5 ஆயிரம் ஐ.எஸ். ஆயுததாரிகள் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்களை நசுக்குவது என்பது பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றுகுவிப்பதாகத்தான் இருக்கும்''’என எச்சரிக்கும் டோடன்...

""ஐ.எஸ். பயங்கரவாதிகள் சார்ந்த சன்னி முஸ்லிம்களின் மிதவாதப் பிரி வினர்தான், இவர்களின் அழிச்சாட்டியத்தை நிறுத்தும் வல்லமை படைத்தவர்கள்''’என்ற தீர்வை முன்வைக்கும் டோடன்காபர், ""ஒருவனைத் தோற்கடிக்க விரும்பினால், அவனைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும்''’ என பயணத்தின் நோக்கத்தைப் பூடகமாகச் சொல்கிறார். 

தொகுப்பு: இரா. தமிழ்க்கனல்