புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கரில் நில உரிமையாளர்களே மீள்குடியேற்றப்படுவர்; ரணில் - கூட்டமைப்பு சந்திப்பில் தீர்மானம்

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் காணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதை அரசாங்கத் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்க தரப்புக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெற்றது.


அலரிமாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;


கடந்த 6 ஆம் திகதி கூட்டமைப்புக்கும் அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பின் தொடர்ச்சியாக நேற்று வியாழக்கிழமையும் சந்திப்பு இடம்பெற்றது. கடந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களான மீள் குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விவகாரம் குறித்து முக்கியமாகப் பேசப்பட்டது.
வலிகாமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்ட நிலையில் அங்கு அப்பகுதிக்குச் சொந்தமானவர்களே மீள்குடியேற்றப்படுவார்களே தவிர வெளியாட்கள் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டோம்.


அத்துடன், வலி.வடக்கிலும் விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கர் தவிர ஏனைய பகுதிகளும் சம்பூர் பகுதிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்வதற்கு காணிகள் 100 நாட்களில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரினோம்.


மேலும் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதுடன், காணாமல் போனோர் தொடர்பில் உண்மைத் தன்மையை விரைவாக வெளியிட வேண்டுமெனவும் நாம் கேட்டுக் கொண்டோம்.

காணாமல் போனோர் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், இரகசிய முகாம்கள் குறித்துப் பரவலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொண்டுவரவேண்டுமென்பதை வலியுறுத்தினோம்.

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கரில் அப்பகுதிக்குச் சொந்தமானவர்களே குடியேற்றப்பட வேண்டுமென்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டதுடன், விடுவிக்கப்படாத ஏனைய பகுதிகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனக் குறிப்பிட்டனர்.

அத்துடன் அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றம் இழைத்தவர்களும் உள்ளனர். இந்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சட்டமா அதிபர் திணைக்களம், நீதியமைச்சு ஊடாக மிக விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் காணாமல் போனோர் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கின்ற நிலையில், அதன் செயற்பாடுகளை 6 மாதத்துக்கு நீடித்துள்ளதாகவும் இதன் பின் அறிக்கை வெளியிடப்படுமெனவும் அரசாங்க தரப்பினர் குறிப்பிட்டனர்.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன்.செல்வராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றினர்.

அரசாங்க தரப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பிரதமரின் செயலாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

ad

ad