புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

50 நாட்களில் ஒரு இந்திய சுற்றுப்பயணம்



ம் தமிழர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயணத்தில் நாட்டம் கொண்டவர்கள். வணிகத்தின் பொருட்டோ, கல்வியின் பொருட்டோ, வேலை நிமித்தமாகவோ
பல நாடுகளுக்கு பயணித்தவர்கள் நம்மவர்கள். புதிய இடங்களையும், மனிதர்களையும், காணவும் தெரிந்து கொள்ளவும் விருப்பம் உள்ளவர்கள். எந்தவொரு சுற்றுலா தலத்திற்கு சென்றாலும் சில தமிழ் முகங்களை காண
முடியும்.

தேவகோட்டையை  சேர்ந்த நாங்கள் (சேது சுப்பிரமணியன் - லஷ்மி சுப்பிரமணியன் தம்பதியர்) ஒரு காப்பிய பயணமாக இந்தியாவின் 19 மாநிலங்களை 50 நாட்களில் 17450 கிலோமீட்டரை காரில் சுற்றி வந்துள்ளோம். புகைப்பட ஆர்வமும் எழுத்தார்வமும் கொண்ட நாங்கள் வரலாற்று தாகம் தனிய பல தென்னிந்திய சுற்றுலாக்களை மேற்கொண்டோம். நாங்கள் படித்த கேட்டறிந்த எல்லோரா கஜுராஹோ போன்ற வட இந்திய இடங்களையும் காண வேண்டும் என்ற ஆவலால் இந்த காப்பிய பயணத்தை தொடங்கினோம். எங்களது பயண அட்டவணையில் 27 UNESCO இடங்களும், கேதார்நாத் தவிர 11 ஜோதிர்லிங்கம் மற்றும் இந்தியாவின் 7 சப்தபுரிகளும் இடம் பெற்றன. மேலும் ஹரப்பா நாகரிகத்தின் இந்திய பகுதிகளான தோலவீரா, லோதல், ஆதி மனிதன் வாழ்ந்த குகைகள் மற்றும் வரலாற்று முக்கியம் வாய்ந்த பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளோம்.

எங்களுடைய நான்கு வருட கனவு - இந்தியாவில் உள்ள எல்லா வரலாற்றுப் பெருமைமிக்க இடங்களையும், தொல்பொருள் இடங்களையும், சிற்பக்கலைகளையும் காண வேண்டும் என்று. சிறு சிறு சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட நாங்கள், இந்தியா முழுவதையும் 48 நாட்களில் சுற்றி வர முடிவெடுத்தோம். எங்கள் கனவு நனவாகும் நாளும் நெருங்கியது! நானும் எனது கணவரும் எங்களது இந்திய சுற்றுப்பயணம் பற்றி நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சொன்னவுடன் எல்லோரும் கேட்ட கேள்விகள்… "ரெண்டு பேர் மட்டுமா? இந்தியா முழுவதுமா? 5௦  நாட்களா? உங்க காரிலா? மொழி பிரச்சினை இல்லையா? செலவு பத்தி யோசிச்சீங்களா? ரூட் தெரியுமா? லீவ் கிடைக்குமா? உங்க பிள்ளைகள்..?

இறையருளால் எங்கள் இருவர் அலுவலகங்களிலும் லீவ் கிடைத்தது மட்டுமின்றி, இந்த பயணத்திற்கான ஏற்பாடுகள் பற்றியும், தற்காப்புகள் பற்றியும் பல அறிவுரைகளும் கிடைத்தன. எங்கள் பிள்ளைகள் இருவரையும், எனது பெற்றோர் பார்த்துக் கொள்ள ஒப்புக்கொண்ட சந்தோஷத்தில், நிம்மதியாக இந்தப் பயணத்தை தொடங்கினோம்.
ஹம்பி 

ஜூன் 20, 2014 – வெள்ளிக்கிழமை – இரவு 9 மணி - ரெனால்ட் (Renault) ஷோரூமில் இருந்து டஸ்டர் (Duster) காரில் எங்கள் சுற்றுப்பயணம் தொடங்கிய நிமிடம் - மனதுக்குள் ஒரு லப்டப்…. அதுவரை எங்களை பாதிக்காத அந்தக் கேள்விகள்... எங்களை தொற்றிக்கொண்டன. விடியற்காலை 5:00 மணியளவில் ஹம்பியை அடைந்தபோது மனதில் இருந்த அந்த லப்டப் குறைந்து ஒரு புத்துணர்ச்சி தோன்றியது.

ஹம்பி - தமிழ்நாட்டிற்கு இணையான பிரம்மாண்டமான கட்டடங்கள், கோயில்கள், அரண்மனைகள், மண்டபங்கள் என்று 14 ஆம் நூற்றாண்டில் பொலிவுடன் விளங்கிய ஹம்பி, இன்று சிதைந்து காணப்பட்டாலும் ஏதோ ஒன்று எங்களை அங்கேயே நிறுத்தி வைக்கின்றன. அந்த பிரம்மாண்ட சுவர்களா? சிற்பக்கலையா? ஹம்பியை அனைத்து ஓடுகிற துங்கபத்திரையா? எல்லாமும் தான்! சிற்பக்கலையில் சிறந்திருந்தாலும் அனைத்திலும் ஒரு அவசரம் தெரிந்தது. மாலிக்காபூர் படையெடுத்து வந்து சென்ற தடயம் ஏதும் தெரியாமல் இருக்க, குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் பல கோயில்களுக்கு திருப்பணிகள் செய்ய வேண்டியதால் விஜயநகர பேரரசிற்கு ஏற்பட்ட அவசரமோ?
பாதாமி குகை 

இவ்வாறு சிந்தித்தபடி, சாளுக்கிய தேசம் நோக்கி எங்கள் கார் விரைந்தது. சாளுக்ய தேசத்தின் குகைக்கோயில்களையும், UNESCO உலக பாரம்பரியமிக்க தளங்களையும் ஐஹோலே, பட்டடக்கல், பாதாமி  ஆகிய ஊர்களில் கண்டோம். நரசிம்மவர்ம பல்லவன் வெற்றி கொண்ட வாதாபி கோட்டைதான் இன்றைய பாதாமி. பாதாமியை முடித்தபோது, இவ்வளவு பண்ணிட்டோம், இனிமேலும் பண்ண மாட்டோமா என்ற தைரியம் வந்துவிட்டது எங்களுக்கு.

கோகக், கொல்ஹாபூர் வழியாக பனஹலேகேஜி நோக்கி பயணப்பட்டபோது, சிறு சிறு தூறல்களும், பெரிய மழைத்துளிகளும் எங்களை மகாராஷ்டிராவினுள் வரவேற்றன. ஒரு சுங்கச்சாவடியில் சில போலீசாரால் நிறுத்தப்பட்டோம். லைசென்ஸ் மற்றும் கார் பேப்பர்கள் அனைத்தையும் சோதனையிட்ட பின்னர் வழக்கமான கேள்விகள் – எங்கிருந்து வருகிறீர்கள்; எங்கே போகிறீர்கள்; என்ன காரியம்; பின்னர் எங்கள் பயணத்திட்டத்தை கேட்டறிந்த ஒரு போலீஸ் அதிகாரி, சுங்கச்சாவடியின் வெளியே மழையில் நனைந்த பிளாஸ்டிக் சேரை அவரே சென்று எடுத்து வந்து, அதில் இருந்த மழை நீரை துடைத்து, எங்களை உட்கார சொன்னது எங்களுக்கு போலீசார் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது. அவர்களது உபசரிப்பும் அறிவுரைகளும் எங்களை நெகிழச் செய்தது. 'மழை அதிகரிக்கும் போல் இருக்கிறது...பார்த்து மெதுவாகவும், பத்திரமாகவும் செல்லுங்கள்!' என்ற அந்த அக்கறை மிகுந்த மனிதர்களின் (போலீசாரின்) குரல்கள் எங்களுக்கு வழி முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தன.
எலிஃபெண்டா குகை – திருமூர்த்தி சிலை  

புனேவிற்கு அருகில் உள்ள கர்லா மற்றும் பாஜா குகைகளை முடித்துக்கொண்டு மும்பையில் விக்டோரியா ரயில் நிலையம் மற்றும் எலிஃபென்டா குகைகளை பார்த்தோம்.
நாசிக் கோதாவரிக் கரை
நல்ல ஓய்விற்குபின் மறுநாள் காலை நாசிக்... இது  பழைய நகரமாதலால் சிறிய தெருக்களை உடையது. எனவே இவ்வூரை நடந்தே சுற்றிவர முடிவெடுத்தோம். கோதாவரி நதிக்கரையின் ஏழைகளும் அவர்களது ஏழ்மையும் எங்கள் மனதை சிறிது கனக்க செய்தது.

அஜந்தா ஓவியங்கள்

ஆயனச் சிற்பியும், மகேந்திரன் வர்மனும் காதல் கொண்ட  உலகறிந்த அஜந்தா, எல்லோரா குகைக் கோயில்களையும் அதன் ஓவியங்களையும் கண்டபோது இந்த இரண்டு கண்கள் போதவில்லையே என்ற ஏக்கம் வந்தது. ஔரங்காபாத்தில் உள்ள ஔரங்கசீப்பின் மனைவியின் நினைவிடமான தென்னிந்தியாவின் தாஜ்மகாலான பீபி கா மக்பாராவோடு, மகாராஷ்டிராவில் இருந்து சிந்து சமவெளி நாகரிகம் நோக்கி நகர்ந்தோம். குஜராத்தில் சம்பனிர் என்ற UNESCO தளம்! பலருக்கும் தெரியாத இவ்விடம் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட 3.5 ஏக்கரில் பரந்துகிடக்கும் சம்பனிர் முழுவதையும் விலாவரியாக பார்ப்பதற்கு இரண்டு நாட்கள் பத்தாது.
8 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான அரண்மனைகள், நுழைவாயில்கள், வளைவுகள், மசூதிகள், கல்லறைகள் மற்றும் கோயில்கள், குடியிருப்பு வளாகங்களில் விவசாய கட்டமைப்புகள் மற்றும் நீர் நிலைகள், குளங்கள் அமைந்து உள்ளன.
லோதல் இடிபாடுகள்

லோதல் - சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கியமான ஒரு துறைமுகப் பட்டினமாகும். நகர திட்டமிடல், கிணறு, வடிகால் கால்வாய்கள் என சிந்து சமவெளியின் பல எஞ்சிய இடிபாடுகளை இங்கு காண முடிகிறது. பாலைவன பகுதிகளை நெருங்குவதற்கு சாட்சியாக ஒட்டகங்களையும் ஒட்டக வண்டிகளையும் காண முடிந்தது. மிக சுவாரசியமாக பேசிக்கொண்டே கூகுள் மேப்ஸ் காட்டிய பாதையில் சோம்நாத் நோக்கி எங்கள் கார் ஓடத்துவங்கியது. இரவு 11 மணி... இன்னும் முப்பது கிலோமீட்டர் இருக்கையில், ஒரு செக்போஸ்ட். அருகே ஒரு பெயர்ப் பலகை... “You are now entering Gir Forest” (நீங்கள் தற்போது கிர் காட்டினுள் நுழைகிறீர்கள்) எந்த பாதுகாப்பும் இன்றி வன பாதுகாவலர்கள் யாரும் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது, சிங்கங்களுக்கு பெயர் போன காடு! விழுந்தடித்து காரினை திருப்பி இரண்டு கிலோமீட்டர் வந்தபோது ஒரு கிராமம் கண்ணில் பட்டது.

அங்கிருந்த தோழமை உணர்வு கொண்ட கிராம மக்கள், சோம்நாத்திற்கு 120 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்று சொல்லிய வழியில் சென்று சோம்நாத்தை அடைந்தபோது விடிகாலை மணி 2.30! சோம்நாத், த்வாரகா ஆகிய ஆன்மீக தலங்களை தரிசித்த பின்னர் ஹராப்பாவின் ஒரு பகுதியான தோலவீரா செல்லும் உத்தேசத்துடன் கச்சு வளைகுடா வழியாக சென்றோம்.

கச்சு வளைகுடா

அங்கு விரிந்த காட்சி சொல்லி மாளாது. ஆள் அரவம் இல்லாத அந்த சாலையின் இருபுறமும் மழைக் காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், மற்ற காலங்களில் வறண்ட நிலமாகவும் இருக்கும் உப்பு பாலைவனம் எங்களை சிறிது கலவரப்படுத்தவே செய்தது. எனினும் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னேறிச் சென்றோம். 'ஊய்... ஊய்..! என்னும் பேய்க்காற்று, சீற்றமும், அனல் காற்றும் முடிவு தெரியாத சாலையும், எங்கள் பயத்தை கூட்டின. தோலவீராவை அடைந்து சில மனிதர்களை கண்ட பின்னரே உயிர் வந்தது. தோலவீரா -  சிந்து நாகரிகத்தின் சிறப்பை பறை சாற்றும் பல சான்றுகள் புதைந்து கிடக்கும் ஒரு பொக்கிஷம்.
தோலவீரா 

ராஜபுத்திரர்கள் வாழ்ந்த ராஜஸ்தானில் ஏரிகளின் நகரமான உதய்பூர், நீல நகரமான ஜோத்பூர், மஞ்சள் நகரமான ஜைசல்மீர், தார் பாலைவனம் ஆகியவற்றில் சில தினங்களை
கழித்த பின் சீக்கிய தேசத்தின் தங்கக்கோயில் மற்றும் ஜாலியன் வாலாபாக்கை கண்டபோது, அவை, இந்திய சுதந்திர போராட்டத்தின் ஞாபகங்களை தூண்டிவிட்டன. அங்கிருந்து இந்தியாவின் சுவிட்சர்லாந்து எனப்படும் காஷ்மீரில் கால் பதித்தோம்.

ராணுவ வண்டிகள் 

அங்கு வாழும் மக்களையும், ராணுவத்தினரையும் பார்த்தபின் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்று இறைவனுக்கு நன்றி சொல்லத்தோன்றியது. 8 மாதங்கள் கடுங்குளிரில் வாழ்வது என்பது எவ்வளவு கடினம் என்று அந்த 9 நாட்களில் தெரிந்து கொண்டோம். கைலாயத்தின் இயற்கையையும், நிலப்பரப்பையும், சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் கண்டு களித்திருந்த நாங்கள் நேரில் பார்க்கும் போது பரவசமடைந்தோம். எத்தனை மலைத்தொடர்கள்? எத்தனை அமைப்புகள்? எத்தனை நதிகள்? எத்தனை எத்தனை நிறங்கள்?
இமய மலை 

இத்தனையும் இருப்பதால்தான் இமாலயமலை இந்தியாவின் இயற்கை அரணாக உள்ளது. இமயமலையை வார்த்தைகளாலும் புகைப்படங்களாலும் முழுவதுமாக  வர்ணித்துவிட முடியாது என்பதை இதை எழுதும் இந்தக்கணம் உணருகின்றேன். உலகின் உயரமான வாகனங்கள் செல்லக்கூடிய பாதையான (World's highest drivable point) கார்துங்லா (Khardung La) மற்றும் சாங் லா, தகாங் லா என 8 உயரமான மலைப்பதைகளை கடந்து ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, சண்டிகர், உத்தரகண்ட் வழியாக இந்தியத் தலைநகர் புதுடெல்லி அடைந்தோம்.
ஃபதேபூர் சிக்ரி 

அங்கும், உத்தபிரதேசத்திலும் தாஜ்மகால், ஃபதேபூர் உட்பட பல முகலாய கட்டிடங்களை ரசித்த பின்னர் சம்பல் பள்ளத்தாக்கு வழியாக மத்தியபிரதேசம் நுழைந்தோம். சாஞ்சி ஸ்தூபா, குவாலியர் கோட்டை, கஜுராஹோ சிற்பங்கள், மகாகாலேஸ்வர், ஓம்காரேஸ்வரர் ஆகியவை கண்ணுக்கும், அறிவுக்கும் விருந்தாகின.
பிம்பேத்கா ஆதி மனிதன் ஓவியங்கள் 

பிம்பேத்கா எனப்படும் ஆதி மனிதன் வாழ்ந்த பாறை குகைகள் UNESCO தளமாக அறிவிக்கப்பட்டும், பலரும் அறியாத பொக்கிஷமாக இருக்கிறது.15,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதி மனிதர்கள் வரைந்த ஓவியங்கள் இன்றும் நமக்கு அவர்களது வாழ்வியல் முறையை உணர்த்துகின்றன. மீண்டும் உத்தரபிரதேசம் நுழைந்து வாரணாசி எனப்படும் காசியில் விஸ்வநாத சுவாமியை தரிசித்து,  புத்த கயா, பழமையான நாலந்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றை பீகாரில் பார்த்துவிட்டு ஜார்கண்ட், தியோகர் வைத்தியநாதரை தரிசிக்க தயாரானோம்.

இந்த பகுதியின் நக்சல்கள் பற்றி கேள்விபட்டிருந்ததால் ஹோட்டலில் இருந்து கிளம்பும்போது வழியினை விசாரித்துக்கொண்டோம். என்னதான் முன் எச்சரிக்கையாக இருந்தாலும் சில சமயம் நமது புத்தி மழுங்கிவிடும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு நாங்கள் செய்த ஒரு தவறு. ஹோட்டல் வரவேற்பாளர் சொல்லிய வழியில் செல்லாமல் கூகுள் மேப்ஸ் காட்டிய வழியில் சென்று ஒரு காட்டுக்குள் நக்சல் நடமாட்டம் இருக்கும் பகுதியை அடைந்துவிட்டோம். அங்கே ஓர் ராணுவ முகாமில் உள்ள அதிகாரிகள், எங்களை நக்சல்கள் போல் பல கேள்விகள் கேட்டு அரை மணி நேர விசாரணைக்கு பிறகு, எங்கள் அடையாள அட்டைகளை சரி பார்த்தபின் செல்ல அனுமதித்தனர். இது மிகவும் ஆபத்தான பாதை என்றும், சீக்கிரமே நாங்கள் அந்த பாதையில் இருந்து பிரதான சாலையை அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அவர்கள் காட்டிய வழியில் விரைவாக தியோகர் அடைந்தோம். அங்கிருந்து ஒரிசா நோக்கி பயணம் செய்தோம். ஒரிசாவில் கோனார்க் சூரியன் கோயில் மற்றும் பூரி ஜெகன்னாதர் கோயில் ஆகியவற்றை பார்த்தபின் விசாகப்பட்டினம் வழியாக அரக்கு பள்ளத்தாக்கு, போர்ரா குகைகளின் சிறப்புகளை கண்டுகளித்தோம்.
போர்ரா குகைகள் 

அங்கிருந்து ஸ்ரீசைலம் ஜ்யோதிர்லிங்கத்தை தரிசித்துவிட்டு சென்னையை அடைந்தோம். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், மகாபலிபுரம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், ராமேஸ்வரம் வழியாக இந்தியாவின் மறு முனையான கன்னியாகுமரி வந்தடைந்தோம்.

கார்துங் லா 

கார்துங்லாவில் இருந்து கன்னியாகுமரி வரை என்ற (K to K) என்ற இலக்கினை முடித்த பெருமையுடன் அங்கிருந்து மதுரை வழியாக ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி பெங்களூரு வந்தடைந்தோம்.
இப்பயணத்தின்போது இந்தியாவின் 7 சப்தபுரிகளான த்வாரகா, ஹரித்வார், வாரணாசி, அயோத்யா, மதுரா, உஜ்ஜைன், காஞ்சிபுரம் சென்று இறையருளை பெற்றுக்கொண்டோம். அதுமட்டுமல்லாது கேதாரநாத் தவிர மகாராஷ்டிராவில் பீமஷங்கர், திரிம்பகேஸ்வரர், கிரிஷ்நேஸ்வரர், குஜராத்தில் சோம்நாத் ஈஸ்வரர், த்வாரகேஸ்வரர், மத்தியபிரதேசத்தில் மகாகாளேஸ்வரர், ஓம்காரேஸ்வரர், உத்தரபிரதேசத்தில் விஸ்வநாதர், ஜார்கண்டில் வைத்தியநாதர், ஆந்திராவில் மல்லிகார்ஜுனர், ராமேஸ்வரத்தில் ராமலிங்கேஸ்வரர் ஆகிய 11 ஜ்யோதிர் லிங்கங்களையும் தரிசித்து வந்திருக்கிறோம்.

ஏதோ ஒரு சக்தி என்று சொல்வதை விட, இறையருள்தான் எங்களது இந்தக் காப்பிய பயணத்தை வெற்றிகரமாகவும், பத்திரமாகவும் நடத்தி கொடுத்திருக்கின்றது.

இந்தப் பயணத்தை முடித்தபோது எத்தனை அதிசயங்கள் இந்தியாவில் புதைந்து கிடக்கின்றது. இந்தக் கால மக்கள் இதை எல்லாம் போற்றத் தெரியாமல் சுற்றுலா என்றாலே சிங்கபூருக்கும், துபாய்க்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் செல்வதை விரும்புகிறார்களே என்று எண்ணும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.

ad

ad