புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

உண்மையான ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த 19வது திருத்தம் வழிவகுக்கும்ஜனாதிபதி


சட்டமூலத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தில் உரை
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றி அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கெளரவத்தைப் பெற சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பதற்கு தன்னளவுக்கு எவரும் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடித்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 18 திருத்தங்களில் 2 திருத்தங்கள் தவிர ஏனையவை ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலே மேற்கொள் ளப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டை ஆட்சிசெய்த முன்னாள் பிரதமர்களான டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க ஆகியோரை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வது உகந்தது என கருதுகிறேன்.
சிறந்த அரசியல் கலாசாரம் உலகமேற்கும் சிறந்த நிர்வாக முறையை ஏற்படுத்திய இவ்வாறான தலைவர்களின் வழியை நாம் பின்பற்ற வேண்டும். ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள். அதன் பயனாக 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுகிறது. எனக்கு அளித்துவரும் ஒத்துழைப்பு குறித்து சகலருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறை 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விருப்புவாக்கு அடிப்படையான தேர்தல் முறையையும் இதனுடன் ஆரம்பிக்கப்பட் டது. இவை இரண்டுக்கும் அன்று அநுரபண்டாரநாயக்க, ஹலீம் இஷாக், ஆனந்த தசநாயக்க, ஆர்.பி.விஜயசிறி, மைத்திரிபால சேனாநாயக்க அடங்கலான ஏழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப் பினர்களே முதன் முதலில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட வரையறையற்ற அதிகாரங்களுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு பின்னர் பாரிய அரசியல் பேசுபொருளாக பரிணாமம் பெற்றது.
1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற் றப்பட்டது. ,அது மட்டுமன்றி நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அக்கறையுடைய, ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்துள்ள கட்சிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டுக்கு வந்தனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள வரையறையற்ற அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அரசியல் மேடைகள் மாத்திரமன்றி, புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்கள் மத்தியிலும் ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட் பாளராகக் களமிறங்கிய நான் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலான அரசியல்திருத்தமொன்றைப் பாராளுமன் றத்திற்கு கொண்டுவந்து முக்கியமொன தொரு இடத்தில் இருக்கின்றோம்.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமார துங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர் பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு இரண் டாவது தடவையாக அவர் போட்டி யிட்டபோதும் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் இப்பொழுது கொண்டுவந்த அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படும் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய 2005, 2010 மற்றும் 2015 ஆகிய ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனங்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் நாம் அனை வரும் தற்பொழுது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள வரையறையற்ற அதிகாரங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் மத்தியில் இது தொடர்பில் சிறந்த அறிவு உள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய நன்மை கள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை சிறந்த அறிவைக் கொண்டுள்ளனர். எனவே நாட்டில் மக்களுக்கான சுயாதீனத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தக்கூடிய அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய நோக்குடன் நாம் இன்று கூடியுள்ளோம்.
கடந்த 3 மாதங்களாக ஜனாதிபதியாக நான் பணியாற்றி வரும் நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குக் காணப்படும் அதிகாரங் களை கையில் எடுப்பதற்கோ அல்லது நடைமுறைப்படுத்துவதற்கோ நான் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரங்களை நீக்குவது தொடர்பில் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டரீதியாக இதனை நிறைவேற்றுவது தொடர்பில் சபையில் பிரதிநிதித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் சட்டத்துறையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் எம்மை பிரதிநிதித் துவப்படுத்தியிருந்த சட்டமா அதிபர், நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட் டுள்ள அதிகாரங்கள் நீக்கப்படுவது தொடர்பான எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். அதேபோல எனது சட்ட ஆலோசகர், நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படுவது தொடர்பான எமது நிலைப்பாட்டைக் உச்ச நீதிமன்ற த்தில் கூறியிருந்தார்.
என்னைப்பற்றி நானே கதைப்பதாக நினைக்கக் கூடாது, சாதாரண நாடொன்றில் அதிகாரத்துக்கு நியமிக்கப்படும் அரச தலைவர் இந்தளவு அதிகாரம் உள்ள பதவியில் இருந்துகொண்டு என்னளவுக்கு நெகிழ்வுப்போக்குடையவராக இருப்பாரா என்பது தெரியாது. இதற்காக நான் சகல அர்ப்பணிப்பையும் செய்துள்ளேன்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார ங்களை சட்டரீதியாக, அரசியலமைப்புக்கு உட்பட்டதாக, உச்சநீதிமன்றத்துக்கு உட்பட்டதாக நீக்குவதற்கு தேவையான சகல தரப்புக்கும் எனது ஒத்துழைப்பை நான் பெற்றுக்கொடுத்திருந்தேன்.
கடந்த மூன்று மாதங்களாக நான் கலந்துகொண்ட கூட்டங்கள், நிகழ்வுகளில் 19ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றவேண் டியதன் அவசியம் பற்றி உரையாற்றி யுள்ளேன். நான் அந்தளவு நெகிழ்வுப் போக்குடன் செயற்பட்டேன். அந்தளவுக்கு அதிகாரங்களை நீக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளேன். நாட்டின் எதிர்காலத்திற்கு தேவைப்படும் அவசியம் காரணமாகவே இது குறித்து நாம் கூடுதல் அக்கறை செலுத்துகின்றோம்.
பண்பாடு நிறைந்த ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை ஏற்படுத்துவதற்கு, தனியான அதிகாரங்களைப் பயன்படுத்தி கட்டி யெழுப்பப்படும் அரசியல் கலாசாரத்தை இல்லாமல் செய்வதற்கும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மதிப்பதற்கு, பாராளு மன்றத்துக்கு கட்டுப்பட, ஆளும் கட்சியினர் கூறும் கருத்துக்களை செவிமடுக்க, தன் னுடைய அமைச்சரவையில் கூறப்படும் விடயங்களை செவிமடுக்க, தான் பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் பொது இணக்கப் பாடுகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற அரசியல் கலாசாரங்களை உருவாக்குவதற்கு இது முக்கியமானது.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு உட்பட புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் வரவேற்புக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தை வெல்லக் கிடைத்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பார்ப்பது, அந்த நாட்டை நிர்வாகம் செய்யும் தலைவர்களின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல.
குறித்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கு நாட்டுத் தலைவர்கள் வழங்கும் தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே பார்க்கின்றன. மக்களின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்பவற்றை உறுதிப்படுத்தி நல்லாட்சி செய்வதன் மூலம் சகல நாடுகளும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும். எதிரிகளற்ற நாடாக நாம் இன்று மாறியுள்ளோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வழங்கப்பட்ட 62 இலட்சம் வாக்குகளும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட 58 லட்சம் வாக்குகளும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட வாக்குகளாகும்.
இரு பிரதான வேட் பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாப னத்தில் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைப்பதாகத் தெளிவாகக் கூறியிருந்தனர். இதன்படி நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு 120 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உடன்பாடு தெரிவித்திருக்கிறார்கள். இந்த வெற்றி நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.
1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் கடந்த 37 வருடங்களாக நிறைவேற்று அதிகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. 37 வருட முயற்சியின் பிரதிபலன் நாட்டு மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அரசியலமைப்பில் 18 திருத்தங்கள் இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 13வது மற்றும் 17வது திருத்தங்கள் தவிர ஏனைய சகல திருத்தங்களும் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலே திருத்தப்பட்டன. 13 மற்றும் 17வது திருத்தங்கள் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிலும் 13வது திருத்தம் மாத்திரமே செயற்படுத்தப்பட்டது. தற்பொழுது வரலாற்றில் முக்கியமானதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
நல்லாட்சி, ஜனநாயகம் அடிப்படை உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தவும் நாளை பிறக்கும் குழந்தைகளின் நல னுக்காகவும் 19ஆவது அரசியலமைப்பை நிறைவேற்ற நாம் நடவடிக்கை எடுத்துள் ளோம்.
இந்த வரலாற்று முக்கியமான பணியை நிறைவேற்றிய கெளரவம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்கவிருக்கிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க அல்லது வேறு சகோதரக் கட்சிகள் என தனித்தனியாக சிந்திக்காது இதனை நிறைவேற்ற வேண்டும். 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சினைகள் இருப்பதோடு அவற்றை தீர்த்து 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றி அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கெளரவத்தை சகல கட்சிகளும், எம்பிக்களும் பெறவேண்டுமென கோருகிறேன்.
இந்த மேலான பணிக்கு பங்களிப்பு செய்வதற்கு பாராளுமன்றத்தை பிர திநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர் களுக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

ad

ad