பேராசிரியர் ராஜன் ஹூலின் பனைமுறிகள் நூல் கலந்துரையாடலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் அனுமதி மறுத்தமைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் காரணங்களை கூறியுள்ளார்
இந்த கலந்துரையாடலை கடந்த வாரத்தில் நடத்த பல்கலைக்கழக, விஞ்ஞான ஆசிரியர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
எனினும் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும், பல்கலைக்கழகத்தின் பெரிய ஆசிரிய சம்மேளனமான யுடிஏயும் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று வசந்தி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் மாணவர்கள் அமைப்பும், யுடிஏயும் இந்த தகவலை மறுத்துள்ளன.
தாம், குறித்த நிகழ்வை நடத்த எதிர்ப்பை வெளியிடவில்லை என்று அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அரசாங்கமும் இணைந்து விடுத்த பணிப்புரையின் கீழேயை துணைவேந்தர் தமது நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று ராஜன் ஹூலின் நூல் கலந்துரையாடலை ஏற்பாடு செய்த அமைப்பின் கொழும்பு கிளை பிரதிநிதி ஒருவர் கொழும்பின் ஆங்கில இணையத்தளத்திடம் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் இருந்து கருத்துக்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.