திருவாரூர் மாவட்டம், கீழவளச்சேரியைச் சேர்ந்தவர் குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை, மயிலாப்பூரில், வீடு ஒன்று வாங்கினேன். பல மாதங்களாகியும், வாடகைக்கு இருந்தவர் காலி செய்யவில்லை.
ராமகிருஷ்ணன் என்பவரை அணுகினேன். ராஜ்யசபா எம்.பி., காமராஜ், தன் உறவினர் என கூறினார். வீடு காலி செய்ய, அவரிடம், 15 லட்சம் ரூபாய் கொடுத்தேன். காலி செய்யாததால், ராமகிருஷ்ணனிடம் பணம் கேட்டேன். மன்னார்குடிக்கு வருமாறு கூறினார். அங்கு, காமராஜ் வீட்டுக்கு சென்றேன். நன்னிலம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் செலவுக்கு, 30 லட்சம் ரூபாய் தரும்படியும் கேட்டார். நானும், 30 லட்சம் ரூபாயை, காமராஜிடம் கொடுத்தேன். எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராகவும் ஆனார். பணம் திருப்பி தரப்படாததால், திருவாரூர் போலீசுக்கு புகார் அனுப்பினேன். என் வீட்டுக்கு சிலர் வந்து தாக்கினர்; உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். எனக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. கடந்த மார்ச் மாதம் அனுப்பிய புகாரை, பதிவு செய்யும்படி, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திங்கள்கிழமை இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அமைச்சர் காமராஜ் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதியலாம் என மன்னார்குடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார். மன்னார்குடி போலீசாரிடம் ஆவணங்களை ஏப்ரல்30ம் தேதி கொடுக்க மனுதாரருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.