புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

குறைந்த பட்ச செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை வெளியிட்டு விட்டது மக்கள் நல கூட்டியக்கம்.

ஆறு ஐந்தாகி... ஐந்து நான்காகி விட்டது. இனி நான்கு என்னாகுமோ?' என பலரின் கவலையும், கிண்டலையும் கடந்து ஒரு வழியாக
குறைந்த பட்ச செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை வெளியிட்டு விட்டது மக்கள் நல கூட்டியக்கம்.
வெளியேறிய கட்சிகள்

'மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் நடத்துவதற்காக...' எனச்சொல்லி துவங்கப்பட்ட இந்த இயக்கத்தில் சேர்ந்த வேகத்திலேயே வெளியேறினார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். "இந்த அணி தேர்தல் வரை நீடிக்காது. இதில் உள்ள கட்சிகள் எல்லாம் தி.மு.க., அ.தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்து பழக்கப்பட்ட கட்சிகள். இது அ.தி.மு.க.வை நோக்கி நகரும் முயற்சிதான். எனவே நான் வெளியேறி விட்டேன்" என காரணம் சொன்னார் தமிழருவி மணியன். இந்த இயக்கம் தேர்தலை சந்திக்கும் என வைகோவும் மற்றவர்களும் அறிவிக்க துவங்க... 'இது தேர்தலுக்கான அணி அல்ல' எனச்சொல்லி வெளியேறியது மனித நேய மக்கள் கட்சி.

இதற்கிடையே மக்கள் நல கூட்டியக்கத்துடன் கூட்டணி என்ற முடிவுக்கு எதிராக ம.தி.மு.க.வின் நிர்வாகிகள் பலர் தி.மு.க. பக்கம் தாவினர். மறுபுறம் மனித நேய மக்கள் கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் நிலைமையும் ஊசலாட்டாத்தில் இருக்க... தேர்தலுக்கான கூட்டணி என அறிவித்து தேர்தலை சந்திப்பதற்குள் இந்த அணி காணாமல் போய்விடும் என விமர்சனம் பரவியது.

குறைந்தபட்ச செயல்திட்ட வரைவு அறிக்கை 


இந்த சூழலில்தான் நிதானமாய் ஆலோசித்து குறைந்த பட்ச செயல்திட்டங்களை வெளியிட்டுள்ளது மக்கள் நல கூட்டியக்கம். தற்போது இந்த அணியில் உள்ள தலைவர்கள், கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் எனச்சொல்லியும், இது தொடர்பாக சில தலைவர்களை சந்தித்து பேசியும் வருகின்றனர் . தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி., காங்கிரஸ் மற்றும் பா.ம.க. கட்சிகளுக்கு இந்த அணியில் இடமில்லை எனச்சொல்லியும் வருகின்றனர்.
இந்தச் சூழலில் தேர்தல் வரை இந்த அணியை கொண்டு செல்வதில் இதில் உள்ள கட்சிகள் மிக கவனமாய் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக வைகோ இதில் மிக கவனமாக இருக்கிறார். தற்போது வெளியிடப்பட்ட குறைந்த பட்ச செயல்திட்டத்துக்கான வரைவு அறிக்கையிலும் இது தெளிவாக புலப்படுகிறது.
கூட்டணியில் உள்ள இடது சாரி கட்சிகளுடன், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்னை, கூடங்குளம் அணு உலை, முல்லை பெரியாறு அணைப்பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகளில் முரண்பட்டு நிற்கும் நிலையில், குறைந்த பட்ச செயல்திட்ட வரைவு அறிக்கையில் இதில் சமரசம் செய்து கொண்டுள்ளன ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும். இது மக்கள் நல கூட்டியக்கத்தில் கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கம் நிலவுவதாக சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

அந்த அளவுக்கு இந்த வரைவு அறிக்கையில் என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம்...

தனித்தமிழீழம் கோரவில்லை

 தூக்கத்தில் இருந்து எழுப்பினால் கூட இலங்கை தமிழர் பிரச்னைக்கு தனி தமிழீழம்தான் தீர்வு எனச்சொல்பவர் வைகோ. ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தவறாமல் இடம்பிடித்து விடக்கூடியது தனித்தமிழீழ கோரிக்கை. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனித்தமிழீழ கோரிக்கையை முன்வைக்கும் கட்சிதான். கடந்தாண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது ம.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய தீர்மானமாக முன்வைக்கப்பட்டது 'தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு' என்பதுதான்.

ஆனால் இடது சாரிகள் இதில் முரண்படுகிறார்கள். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித் தமிழீழம் என்பதை ஏற்காத அரசியல் கட்சியாக உள்ளது. சிங்களர்களுக்கு இணையாக சம உரிமை அதிகார பகிர்வு என்று மட்டுமே இடதுசாரிகள் சொல்லி வருகின்றனர்.
இந்தச் சூழலில் மூச்சுக்கு மூச்சு தனித்தமிழீழம் என வைகோ சொல்லி வந்தாலும், இந்த குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கையில்,  தனித்தமிழீழம் கோரிக்கை இடம்பெறவில்லை. மாறாக இலங்கை தமிழர் பிரச்னை எனக்குறிப்பிட்டு, "இலங்கை தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்கு மாநிலங்களில் உள்ள கட்டாய சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்றும், "தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு நிகரான சம உரிமைகள் வழங்க வேண்டும். தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து, இலங்கை தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று தன் தேர்தல் அறிக்கையில் கட்டாயம் குறிப்பிடுகிற விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வேண்டும் என்ற தன் முக்கிய கோரிக்கையையும் இடதுசாரி கட்சிகளுக்காக விட்டுக்கொடுத்துள்ளது ம.தி.மு.க.

கூடங்குளம் வார்த்தையே இல்லை

 "கூடங்குளத்தில் மேலும் அணு உலைகள் அமைக்க முயற்சிப்பதைத் தடுப்பதுடன், தற்போது இயங்கிவரும் அணு உலைகளையும் மூடிட வேண்டும். அணு உலைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும்' என்பது ம.தி.மு.க.வின் முக்கிய கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அணு உலைக்கு எதிரான நிலையையே கடைபிடித்து வந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூடங்குள அணு உலைக்கு ஆதரவான நிலையையே கடைபிடித்து வருகிறது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்காமல், அதே சூழலில் கூடங்குளம் அணு உலையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனச்சொல்லி வந்தன இடதுசாரி கட்சிகள். இந்நிலையில் மக்கள் நல கூட்டியக்கத்தின் இந்த குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கையில், கூடங்குள அணு உலை எதிர்ப்பு நிலை பற்றி குறிப்பிடப்படவில்லை. கூடங்குளம் என்ற வார்த்தை கூட இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. எல்லாம் இடதுசாரிகளுக்காகத்தான் என்கிறார்கள்.

கேரளாவுக்கு கண்டனமா? இல்லவே இல்லை

 "முல்லை பெரியாறு பிரச்னை. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல், கேரள அரசு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளைப் பராமரிக்கவும், உடைக்கவும் கூட கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்றும், கேரளச் சட்டமன்றத்தில் மார்ச் 2006-ல் அக்கிரமமான முறையில் ஒரு சட்டத்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நிறைவேற்றியது. அத்துடன், முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டுப் புதிய அணையைக் கட்டுவோம் என்றும் கூறி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மதிமுக, கேரள அரசு நிறைவேற்றிய நதிநீர் குறித்த சட்டத்தை ரத்து செய்யவும், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் கேரளாவின் முயற்சியை முறியடிக்கவும் வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் கேரளாவுக்கு எதிராய் பேசுவதில்லை என்பதை தெளிவாய் உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கையில், "முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளாவை கடுமையாக கண்டிக்கும் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக சற்று பின்வாங்கியுள்ளனர்.

இப்படி இடது சாரிகளுடன் முரண்படும் விஷயங்களில், இடதுசாரிகளுக்கு ஆதரவாய் இயங்க துவங்கி உள்ளன ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும். இதை இந்த குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. எந்த இடத்திலும் இடதுசாரிகளுக்கு எதிரானவை இடம்பெறவில்லை. மக்கள் நலக்கூட்டியக்கத்தில் இனியும் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் வைகோ தெளிவாக இருக்கிறார். அதனால்தான் எந்தெந்த பிரச்னைகளில் எல்லாம் ம.தி.மு.க. தீவிரமாய் இருந்ததோ, அதை எல்லாம் சற்று கவனமாய் கையாண்டு வருகிறார்.

என்ன செய்ய...? நாலு... மூணாவோ, ரெண்டாவோ ஆகிவிடக்கூடாதில்லையா? 

ad

ad