தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைச் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரவிராஜ் கொலைச் சந்தேகத்தில் இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணான்டோ இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, வழக்கை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ரவிராஜ் கொலை தொடர்பில் இதுவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், குறித்த கொலையில் சரண் என அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகானந்தன் என்பவர் தொடர்புட்டிருப்பதாக குறிப்பிடப்படும் நிலையில், சுவிட்ஸர்லாந்திலுள்ள குறித்த நபரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பில் நாடாளுமன்றில் துணிந்து குரல்கொடுத்து வந்த ரவிராஜ், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பில் இனந்தெரியாதோரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.