தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்கள்
மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பகுதி பகுதியாகவே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். குறிப்பாக அவர்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் அவர்களுடைய விடுதலையும் அமையும். பலர் மீது பயங்கரவாத தடுப்பு பொலிஸார் வழங்கு தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்களுடைய விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடைய ஆலோசணைகள் பெறப்படவேண்டியிருக்கின்றது. இந்த ஆலோசணை அறிக்கையினை விரைவு படுத்தி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சட்டத்தரணிகள் வெற்றிடம் காணப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்கு தமிழ் சட்டத்தர ணிகள் முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை அமைச்சருக்கும் சட்டத்தரணிகளுக்குமிடையில் ஒரு சந்திப்பு யாழ்.மேல் நீதிமன்ற கட்டிடத்தில் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின் போது சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் பல குறைபாடுகள் தொடர்பாக பேசியிருந்தனர். குறிப்பாக அரசியல் கைதிகள் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக விடுதலை செய்யப்படாவிட்டால் அவர்கள் மீண்டும் உண்ணாவிரதத்தில் குறித்த நேரிடும் எனவும், கைதிகள் விடுதலை விடயத்தை அரசியல்ரீதியான தீர்மானம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளுமாறும் சட்டத்தரணிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இவ்வாறான ஒரு சம்பவம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இடம்பெற முடியுமாயின் தற்போதைய ஜனாதிபதி காலத்தில் எதற்காக முடியாது? எனவும் சட்டத்தரணிகள் கேட்டனர்.
மேலும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் கருத்து தெரிவிக்கையில் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிக்கும் முதல் அறிக்கை முழுமையாக சிங்கள மொழியில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான அறிக்கைகளை தாம் ஏற்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியதுடன், வடக்கில் தமிழ் மொழியை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வடமாகாணத்தில் 60 தமிழ் தெரிந்த பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னரும் சிங்கள மொழி நடைமுறையில் உள்ளதாக கூறப்படுவது வியப்பளிக்கின்றது. எனவும் தெரிவித்தார். மேலும் தமிழ் தெரிந்த பொலிஸார் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
|