12 டிச., 2015

சென்னை வெள்ளத்தின்போது பாதுகாப்பாக ஓய்வெடுத்தாரா ஸ்டாலின்?

வ்வொரு காலகட்டத்திலும் ஏதாவதொரு விஷயம் பூதாகரமாக வெடித்துக் கிளம்பும். அப்படியான ஒரு சர்ச்சை, ’சென்னையே
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது மு.க.ஸ்டாலின் பாதுகாப்பாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்' என்று தீயாய் பரவும் தகவல்.  

சென்னையில் மழையும், வெள்ளமும் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தபோது, மு.க.ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ரிசார்ட்டுக்குச் சென்றுவிட்டார் என்று றெக்கை கட்டி அடிக்கின்றன செய்திகள். ஸ்டாலின் ஓய்வு எடுப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அது தவறான புரிதலுடன் வலம் வருவதால்,  தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவனிடம் நடந்தது என்ன? என்று கேட்டோம்.
’’சிகிச்சைக்காக கேரளாவின் மூலிகை மாளிகைக்கு சென்றிருந்த தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மழை விட்டது என்று தெரிந்தபின்தான் தமிழகம் திரும்பினார் என்று கூறப்படுகிறதே ?’’

’’கண்டிப்பாக இல்லை.. அது முற்றிலும் தவறான தகவல்.. மழை தொடங்குவதற்கு முன்னரே தளபதி அவர்கள், புத்துணர்வு கொள்வதற்காக மூலிகை சிகிச்சைக்காக சென்றிருந்தார் என்பது உண்மைதான். ஆனால், முன்னரே திட்டமிடப்பட்டது. அதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?’’

’’மழை ஓய்ந்து முடிந்த பின்னர்தான் தமிழகம் வந்தாரா?’’ 

’’இல்லை. மூன்று மாதங்களுக்கென அமைக்கப்பட்டிருந்த புரோக்ராமை  தமிழகத்தில் மழை- வெள்ளம் என்ற தகவலைக் கேட்டதும், மூன்றே நாட்களில் கேன்சல் செய்து விட்டு தமிழகம் வந்து விட்டார். வந்ததோடு நிற்காமல், அதிகளவு வெள்ளம் பாதித்த பகுதிகளான திருவள்ளூர் மாவட்டத்துக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை தொடங்கி விட்டார். திருவள்ளூரில் இருந்து கடலூருக்குப் போயிருக்கிறார். பின்னர் சொந்தத் தொகுதியான கொளத்தூருக்கு வந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். அடுத்தக்கட்டமாக சென்னை முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
’நமக்கு நாமே’ எழுச்சிப் பயண சுற்றுப்பயணத்துக்காக சுற்றிச் சுற்றி மக்கள் பணியாற்றியதில் தளபதி கொஞ்சம் சோர்வில் இருந்தார். மீண்டும் மக்கள் பணிக்காக உடலில் கூடுதல் தெம்பேற்றிக் கொள்ள புத்துணர்வுப் பயணத்தை திட்டமிட்டு வைத்திருந்தார். அது  'மழை'க்கு முன்னதாகவே திட்டமிட்டு செய்து வைத்திருந்த ஏற்பாடு ஆகும். ஆனால், சென்னை பாதிக்கப்படுகிறது என்று தெரிந்த நொடியில் மீண்டும் சோர்வையும் பொருட்படுத்தாமல் மீண்டும் களமிறங்கிவிட்டார் தளபதி!’’ 
 
’’மீண்டும் புத்துணர்வு பயணம் இருக்குமா ?’’

’’மக்களின் மழைக்கால துயரத்தைக் கேள்விப்பட்டதுமே சிகிச்சையை தூக்கி தூர எறிந்து விட்டு இதோ பறந்து வந்து விட்டார். மீண்டும் புத்துணர்வு பயணத்துக்குப் போவாரா, இல்லையா என்பதை தளபதி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!’’