12 டிச., 2015

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி


உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தலவத்துகொடவில் இன்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறைக்கு அமைய அடுத்த சில வருடங்களுக்கு திருத்தங்கள் முன்வைக்கப்படாத படிக்கு சரியான முறையில் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தான் இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாக மாநாட்டில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேர்தல் முறையின் கீழ் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு இடையில் இந்த மாதம் இணக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த சர்வக்கட்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 64 அரசியல் கட்சிகள் உட்பட பல குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த திஸ்ஸ விதாரண மாநாட்டில் கலந்து கொண்டார்.