வியாழன், ஜனவரி 01, 2015

5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் சகல பிரச்சார நடவடிக்கைகளும் முடிவடையும்

எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும். அதற்கு பின்னர், வாக்களிப்பு தினம் வரை மௌனக்காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இது, தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து தகவல்கள் தொடர்பாகவும் நன்கு சிந்தித்துப்பார்த்து பொருத்தமான தீர்மானமொன்றுக்கு வருவதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்கு என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்நிலையில், கட்சித்தாவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கும் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கும் கட்சி மாறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் கொழும்பு அரசியல் என்றுமில்லாதவகையில் சூடுபிடித்துள்ளன. தனக்கு வழங்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் பதவியை நேற்று புதன்கிழமை இராஜினாமா செய்த முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர்கள் 18 பேர் எதிரணியுடன் நேற்று புதன்கிழமை இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.