புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2012

தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனத்தையே இல்லாமல்

செய்யும் இன்னொரு கொடூர யுத்தம்!

தமிழீழ விடுதலைப் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழர் தாயகத்தில் புதிய யுத்தங்கள் முளைவிட்டுள்ளன. விடுதலைப் போராட்ட காலத்தில் சிறீலங்கா அரசு முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தை காட்டிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்தம் கொடூரமானது. இந்த யுத்தம் இன்னும் சில காலம் நீடிப்பதற்கு நாம் அனுமதிப்போமாயின் ஈழத் தமிழ் மக்கள் தமது அடையாளத்தை இழந்துவிடுவர்.


ஈழத்தமிழர்களுக்கென்று தனிப்பட்ட கலை கலாசாரங்கள் இருக்க மாட்டாது. அதனை விட புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற ஈழத் தமிழ் மக்கள் தாங்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு முடியாத நிலை ஏற்படும். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் தமிழீழம் என்பது இல்லாத ஒன்றாகவே மாறிவிடும்.

இதுவரை யாரும் எதிர்பார்க்காத சம்பவம் இன்று வன்னியில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. அதாவது, இராணுவ வீரர்கள் சிலர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்கின்ற செயற்பாடு வன்னியில் தீவிரமாக இடம்பெறுகின்றது. சிறீலங்கா அரசாங்கத்தினதும் படைத் தலைமையினதும் நீண்ட கால சிந்தனையின் அடிப்படையிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இனக் கலப்பு ஒன்றினூடாக தமிழர்களின் விடுதலைக் கோரலைத் தடுக்க முடியுமென்று சிங்களத் தரப்பால் போடப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலேயே இந்தக் கலப்புத் திருமண நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.



இந்தச் செய்தியானது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஆச்சரியமளிக்கும் செய்தியாகவும் கேள்விக்குறியான செய்தியாகவும் இருக்கலாம். ஆனால், வன்னியிலுள்ள சில கிராமங்களில் இந்தச் செயற்பாடு தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. குறிப்பிடப்படுகின்ற கிராமங்களில் நூற்றுக்கு ஒரு தமிழ்ப் பெண்ணை இராணுவம் திருமணம் செய்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் அப்பட்டமான, ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாக இருக்கின்றது.

யுத்தம் நடந்த காலத்தில் உள்ளதை விட யுத்தம் முடிவடைந்த தற்போதைய காலத்தில் சிறீலங்கா அரசு சர்வதேசரீதியாக பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. கடந்த காலங்களில் இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சிங்களம் தமிழ் மக்களையே கருவிகளாகப் பயன்படுத்தியது. அதேபோன்று தான் தற்போதும் தமிழ் மக்களையே கருவியாகப் பயன்படுத்துகிறது.

கடந்த காலத்தில் சிறீலங்காவின் அமைச்சரவையில் மிக முக்கிய அமைச்சுப் பொறுப்பான வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் ஒரு தமிழர். காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் இவருக்கு முக்கிய பொறுப்பாக வெளிவிவகார அமைச்சுப் பதவியைக் கொடுத்தன. இதன் மூலம் சிங்களம் பல காரியங்களைச் சாதித்துக்கொண்டது. குறிப்பாக எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச ரீதியாகப் பலவீனப்படுவதற்கு கதிர்காமரின் துரோகத்தனம் காரணமாக அமைந்தது.

கதிர்காமர் தமிழராக இருந்த காரணத்தால் புலிகளையும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஓரம்கட்டுவதற்கு அவரை அரசு பயன்படுத்தியது. புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களால் இலங்கையில் வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்றும் சர்வதேச ரீதியாகப் பிரச்சாரப்படுத்திய அரசாங்கம், புலிகளைத் தடைசெய்வதற்கான வழிகளையும் ஏற்படுத்தியது. இது உண்மையிலேயே எமது போராட்டத்தில் பெரும் பின்னடைவாகும்.

இதேபோன்று ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் அரசாங்கம் பயன்படுத்தியது. கதிர்காமர், டக்களஸ் தேவானந்தா போன்றவர்களை அமைச்சரவையில் வைத்திருந்ததன் மூலம் தாங்கள் தமிழர்களையும் சமமாக நடத்துகிறார்கள் என்று சர்வதேச ரீதியாகப் பிரசாரப்படுத்திய அரசாங்கம், புலிகளை அழிக்க உதவுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்து விசமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டது. இந்த உண்மையை உய்த்துணர லாயக்கற்ற சில சர்வதேச நாடுகள், சிங்கள அரசாங்கத்திற்கு ஆயுதங்களையும் யுத்த உபகரணங்களையும் வழங்கி தமிழ் மக்களை அழிக்க உதவிக்கொண்டன.

ஆனால், சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவிய சில நாடுகள் அரசாங்கமும் இனவெறி இராணுவமும் இறுதி யுத்தத்தில் நடந்துகொண்ட முறையை அவதானித்த பின்னர் தாங்கள் ஏன் உதவி செய்தோம் என்று தற்போது கவலையடைந்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் யுத்தத்தை வெல்வதற்கும் சிங்கள அரசு தமிழர்களான கருணா போன்ற சில தேசத் துரோகிகளைப் பயன்படுத்தியிருந்தது. இதன் பின்னர் ஜெனிவாவில் போர்க்குற்ற விசாரணை கொண்டுவரப்படலாமென்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றபோது ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் தமிழ் மக்களை வீதிக்கு இழுத்த சிங்கள அரசு அந்த பிரேரணையிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு ஆர்ப்பாட்டங்கள் செய்யுமாறு தமிழர்களை நிர்ப்பந்தித்தது. இதுவும் தனக்கு வெற்றியென்றே சிங்கள அரசு கருதுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே சிங்கள அரசும் இராணுவத் தலைமையும் திட்டமிட்டு தமிழ்ப் பெண்களை ஏமாற்றுவதன் மூலம் இனக்கலப்பு ஒன்றை ஏற்படுத்தி தமிழர்களுக்கு தனியாக பிரச்சினை இல்லை. தமிழர்களுக்கு பிரச்சினை என்று கூறி தமிழர்களை வருத்திய புலிகள் தற்போது அழிந்துவிட்டார்கள். இனிமேல் தமிழர்களுக்கு பிரச்சினை என்று கூறுவதற்கு எதுவுமில்லை. இலங்கைத் தீவில் தமிழரும் சிங்களவரும் சேர்ந்த வாழ்கின்றனர் என்று சர்வதேசத்திற்கு பிரச்சாரப்படுத்துவதற்கே அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. இதற்காகவே வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்களை இராணுவத்தினர் திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றுவதற்கு சிங்கள இராணுவம் முயன்று வருகின்றது.

வன்னியில் விசுவமடு, யோகபுரம் மற்றும் பிமந்தனாறு ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களில் பெரும்
பாலானோர் தென்னிலங்கையிலிருந்து வந்து குடியேறியவர்கள். 1983 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் இடம்
பெற்ற கலவரங்களைத் தொடர்ந்து அங்கிருந்து சிங்களவர்களால் வெளியேற்றப்பட்டு இங்கு வந்து குடியேறிய
வர்களாவர். இவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணிப்புடன் இணைத்துக்கொண்டு செயற்
பட்டவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நலன்புரி நிலையங்களில் வசித்த மக்கள் தற்போது இங்கு மீண்டும் குடியேறியுள்ளனர். இந்த இடங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளனர்.

யாருமே எதிர்த்துக் கேள்வி கேட்க மாட்டார்கள். இந்தக் கிராமங்களில் நூற்றுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பெண்களை இராணுவத்தினர் திருமணம் செய்துள்ளனர். திருமணம் செய்தவர்களுக்கு இராணுவத்தினனின் பெயர் குடும்பத் தலைவனாக போடப்பட்டு கிராம சேவையாளர்களால் குடும்பப் பதிவு அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு இங்கே தனித்தனி வீடுகளும் இராணுவத்தினரால் அமைத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் ஏன் நடைபெறுகின்றன? சிங்கள இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென்ற அக்கறையிலா இதனைச் செய்கிறார்கள்? இல்லவே இல்லை. உலகின் எந்தவொரு நாடுகளிலும் யுத்தத்திற்குச் செல்கின்ற இராணுவ வீரர்களுக்கு யுத்தப் பிரதேசங்களில் இராணுவத்தினரே திருமணம் செய்து வைத்து வீடுகளை அமைத்துக் கொடுக்கின்ற வழக்கம் உள்ளதா என்றால், நிச்சயமாக இல்லை.

ஆனால், இங்கே இலங்கையில் மட்டும் இது ஏன் நடைபெறுகிறது? இங்கு இது இராஜதந்திரம். தமிழ் மக்கள் இராணுவத்துடன் இரண்டறக் கலந்துவிட்டனர். தமிழ் மக்கள் இராணுவத்தை விரும்புகின்றனர். எனவே, வடக்கு கிழக்கை விட்டு இராணுவம் வெளியேற வேண்டிய தேவை இல்லை என்பதை பிரச்சாரப்படுத்தவே இத்தகைய செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதனைவிட தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்ற செயற்பாடுகளும் உலகம் அறிந்தது. அண்மையில் நடைபெற்ற இந்தச் செயற்பாடுகள் தமிழ்ப் பெண்கள் தொடர்பாக ஒரு அநாதரவு நிலையை ஏற்படுத்துகிறது. இதனைவிட மேற்குறிப்பிட்ட இடங்களில் தமிழ் யுவதிகள் சிவில் பாதுகாப்பு படை என்ற போர்வையிலும் இராணுவத்தால் துன்புறுத்தப்படுகின்றனர். அதாவது தெரிந்தெடுக்கப்பட்ட பெண்களை சிவில் பாதுகாப்பு படை என்ற பெயரில் தமது இராணுவ முகாம்களைக் காவல் காக்கும் பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

இரவு நேரத்தில் குறித்த பெண்கள் காவல் காக்காமல் தப்பி ஒடினால் அவர்களைத் துரத்திப் பிடிக்கும் பணியையும் சிறீலங்கா படையினர் செய்து வருகின்றனர். அண்மையில் இவ்வாறு காவலுக்கு விடப்பட்ட பெண்ணொருவர் தப்பியோடிய போது நள்ளிரவு நேரம் சிறீலங்காப் படையினர் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணைப் பிடித்துச் சென்றிருக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் எதுவுமே எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாது.

தேரிந்தாலும் அவர்கள் தங்கள் பாடு. விடுதலைக்காக போராடிய வீரர்களையும் மக்களையும் வைத்தே எதிரி தனது செயற்பாடுகளை வெற்றிகரமாக நகர்த்திக்கொண்டிருக்கிறான். ஆனால். நாங்கள் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் வக்காலத்து வாங்குகின்றனர். யார் எதைச் சொன்னாலும் தமிழ் மக்களின் வாழ்வு இன்று சிங்களவர்களால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவை. நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், எமது கண்ணுக்கு முன்னாலேயே எமது இனம் அழிந்துகொண்டிருக்கிறது.

இதனைத் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு யாருக்கு உரியது என்று நாம் கேட்டுக்கொண்டிருந்தோமென்றால் எமது அழிவைத் தவிர வேறெதுவும் எஞ்சப்போவதில்லை. எனவே, புலம்பெயர்ந்த தமிழ் மக்களே, நீங்கள் தான் இதில் அதிகம் சிந்திக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு இதில் பங்கு இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஈழத்தில் ஒரு ஈகைச் சுடர் ஏற்றினாலே அடிக்கிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். நாம் இங்கே எதைத்தான் செய்ய முடியும்.

தமிழரின் விடுதலைப் போராட்டம் தற்போது புலம்பெயர்ந்தோர் கைகளில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது என்று தமிழீழ தேசியத் தலைவர் கூறியதை நிறைவேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது. எனவே, மதிப்பிற்குரியவர்களே, தமிழீழம் எரிகின்றது. அணைப்பதற்கு உங்களைத் தயார்படுத்துங்கள். இது உங்கள் கடமை.


தாயகத்தில் இருந்து வீரமணி

ad

ad