தலைமையுடன் தொடர்பு கிடைக்கவில்லை! நிர்ப்பந்தத்தினால் ஆதரவாக வாக்களித்தோம்!-முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
வடமேல் மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்டோம் அது பலனளிக்கவில்லை. இறுதியில் நிர்ப்பந்தத்தினால்
நாமிருவரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமேல் மாகாண சபையின் நேற்றைய அமர்வின் போது முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த என்னையும், சக உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷாவையும் தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநிறுத்தியிருப்பதானது எமக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே நாம் கருதுகின்றோம்.
வடமேல் மாகாண சபையில் நேற்று புதன்கிழமை இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஆதரவாக வாக்களித்தமைக்காகவே நாம் தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் எமக்கு அறிவித்துள்ளார்.
இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நாம் எதிர்த்து வாக்களிக்கவே முடிவெடுத்திருந்தோம். எனினும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாகவே நாம் ஆதரவாக வாக்களித்தோம்.
இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நாம் எதிர்த்து வாக்களிக்கவே முடிவெடுத்திருந்தோம். எனினும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாகவே நாம் ஆதரவாக வாக்களித்தோம்.
ஏற்கெனவே, நாம் எடுத்த முடிவுக்கு மாற்றமாக வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போது அது தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் நாமிருவரும் அதற்கு ஆதரவாக வாக்களித்தோம்.
இதனை அடுத்து நானும் சக உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷாவும் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் எமக்கு அறிவித்துள்ளார். இது எமக்கு இழைக்கப்பட்ட அநீதி என நாம் கருதுகின்றோம்.
கிழக்கு மாகாண சபையில் கட்சியின் அறிவுறுத்தலையும் மீறி கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த போதும் அவர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படாத நிலையில் நாங்கள் இருவரும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றோம்.
வடமேல் மாகாண சபையில் நாம் ஆளும் தரப்பு உறுப்பினர்களாக இருந்து வந்துள்ள போதும் நாம் தொடர்ச்சியாக கடந்த 3 வருடங்களாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உட்பட ஏனைய விடயங்களிலும் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சி தலைமைக்கு அறிவித்து எமக்கு நியாயம் பெற்றுத்தருமாறு நாம் கோரிக்கை விடுத்தும் இதுவரை அதற்கு நியாயம் பெற்றுத்தராத நிலையில் இன்று நாங்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றோம் என்றும் ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.