சிறுபான்மையினருக்கெதிரான பொதுபலசேனா செயற்பாடுகள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு பொதுபல சேனா இயக்கம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) தூதுவர் பேர்னார்ட் சவேஜ் (Bernard Savage) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
அச்சந்திப்பின்போது, பேர்னார்ட் சவேஜ் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் குறித்த அதிருப்தியையும், தனது கவலையையும் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதன்போது, யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் அபிவிருத்தி மற்றும் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் நன்றி தெரிவித்தார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் இருப்பிட வசதியற்ற, பல்வேறு பாதிப்புக்குள்ளான மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களில் அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணமும் உரிய கவன ஈர்ப்பை பெற வேண்டும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.