பெட்ரோல் விலை உயர்வு: ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் - வஞ்சனையின் உச்சகட்டம்: ஜெயலலிதா
பெட்ரோல் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி, விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழி வகுப்பதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டிருப்பது ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயலாகும். மத்திய அரசின் இந்த வஞ்சகப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெட்ரோல் விலையை உயர்த்தி 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், இன்று முதல் மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசு என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தி இருப்பது வஞ்சனையின் உச்சகட்டம். இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளதும், சர்வதேச சந்தை விலை ஏறுமுகத்தில் இருப்பதும் என்றும் கூறுவது, இந்த விலை ஏற்றத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. இந்த விலை உயர்விற்கு முக்கிய மற்றும் மூல காரணமாக விளங்கும் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், மனம் போன போக்கில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்பது மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கும், கையாலாகாத்தனத்திற்கும் ஒரு சிறந்த சான்றாகும்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், எண்ணெய் விலை நிர்ணயக் கொள்கைகளும் தான் பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்விற்கு காரணம். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் எடுக்க இயலும்.
ஆனால் அதைச் செய்யாமல், இந்தச் சுமையை மக்கள் மீது சுமத்துவது என்பதை எவராலும் ஏற்றக்கொள்ள இயலாது. ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக பெட்ரோல் விலையை உயர்த்துவது என்பது மக்கள் உணர்வுகளுக்கு மத்திய அரசு கிஞ்சித்தும் மதிப்பு அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை கட்டுப்படுத்த திறமை இல்லை என்றால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் பணத்தையாவது இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
இதைச் செய்திருந்தால், இந்திய நாடு செழிப்படைவதோடு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏற்பட்டு இருக்காது. ஆனால், கருப்புப் பணத்தை மீட்பதில் மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதோடு, கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் மீது கனிவு காட்டுகிறது, அவர்களை ஆதரிக்கிறது, அரவணைக்கிறது. இந்த விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களும், ஆட்டோவில் செல்லும் சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் கூடுதல் நிதியை சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும். இதன் விளைவாக, அந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகள் உயரக் கூடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குவதோடு மட்டுமல்லாமல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் உயர வழி வகுத்துள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும். நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.
எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்குக் காரணமாக விளங்கும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.