27 டிச., 2013

தனியார் வங்கியில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை! மோட்டார் சைக்கிள் தாரிகள் சினிமா பாணியில் கைவரிசை
மாலபே பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து 14 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவரே பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று  முற்பகல் 11.27 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொள்ளையிட்ட இருவரும் முழுமையாக முகத்தை மறைக்கும் வகையிலான ஹெல்மட் அணிந்திருந்துள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-
முகத்தை மறைத்த நிலையில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று வியாழக்கிழமை முற்பகல்  11.27 மணியளவில் தனியார் வங்கிக்குள் புகுந்து அதன் பாதுகாப்பு அதிகாரியை ஆயுதத்தை காண்பித்து முழங்காலிடச் செய்துள்ளதுடன் உள்ளே புகுந்த மற்றவர் மூன்று காசாளர் கூடத்திலிருந்த மூவருக்கும் ஆயுதத்தை காண்பித்து மூவரிடமிருந்த 14 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவை ஆயுத முனையில் கொள்ளையிட்டுச் சென் றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரும் சினிமா பாணியில் பணத்தைச் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடியாக ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வங்கி முகாமையாளர் அத்துருகிரிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தமுறைப்பாட்டை அடுத்து உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேக நபரை மடக்கிப் பிடிக்கும் நோக்கில் அந்தப் பிரதேசத்திற்கு பொலிஸாரை அனுப்பி திடீர் வீதிச் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
வங்கி ஊழியர்களின் வாக்கு மூலங்களை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதுடன் சி. சி. ரி. வி. கமராக்களை வைத்து விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.