27 டிச., 2013

 இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் உரக்கப் போதித்தாள் கடல் அன்னை; கடற்கோள் நினைவஞ்சலியில் விவசாய அமைச்சர்
கடற்கோள் நினைவு நாளான இன்று கடற்தாயின் போதனையை ஏற்று, 'இயற்கை வளங்களை பாதுகாத்து அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோம்' என்று உறுதியேற்போம். இதுவே மாண்ட உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்  என வடமாகாண விவசாய,
கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; தெரிவித்தார்.

இன்று காலை மணற்காட்டில் நடைபெற்ற, கடற்கோளில் மரணித்தவர்களின் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஈழத்தைப் போரினால் நலிந்தமண் என்று எவரும் ஈவிரக்கம் கொள்ளவில்லை. தமிழர்களின் அரசியல் காயத்தை அபிவிருத்திக் களிம்பு தடவி ஆற்றலாம் என்ற நப்பாசையிலும், தடுப்பார் இல்லாத நேரம் பார்த்து இருப்பைப் பங்குபோடும் அவசரத்திலும் இயற்கை வளங்கள் வேகவேகமாகச் சூறையாடப்படுகின்றன.

உலக முதல் உயிரினத்தின் தாய்மடி கடல். உயிரிகளின் பரிணாமத்தில் முதற் கருவைச் சுமந்தவள் என்ற வகையில் மனுக்குலத்தின் அன்னையும் அவள்தான்.

எமது நாடி, நாளங்களில் சுற்றோடிக் கொண்டிருக்கும் இரத்தத்தில் இன்றளவும் கடல்நீரின் உப்புக் கரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், எமக்கு வாழ்வளித்த அவள்தான் சாவும் அளித்தாள்.

2004 ஆம் ஆண்டு மார்கழி 26 ஆம் தி;கதி நத்தார் குதூகலமும் கடுங்குளிரும் கலையாத காலைப்பொழுதில், கடல்மாதா பெரும் கோபம் கொண்டெழுந்தாள். 
 
அலைக்கரங்களில் கொடுவாள் ஏந்தி உக்கிர தாண்டவமாடினாள். சங்க இலக்கியங்களில் படித்த கடற்கோளை, ஈழத்தமிழர்கள் நாம் வாழ்நாளில் அன்றுதான் அனுபவித்து உணர்ந்தோம்;.

ஆனால், என்ன, ஏது என்று  நாம் அறிந்து கொள்ள  முன்பாகவே எமது கடற்கரையோரம் போர்க்களம் போல ஆகிவிட்டது.

கடற்தாய் காளிவேடம்பூண்டு கரையெங்கும் உயிரெடுத்துப் புதைத்துத் திரும்பியதில், இலங்கையின்  கரையோரம் எங்கும் பிணக்காடாகி இருந்தது.

ஏறத்தாழ, முப்பத்தி ஐயாயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். யாழ் மாவட்டத்தில் எங்களது உறவுகளில் ஆயிரத்தி இருநூறுக்கும் அதிகமானோரைக் கடல் காவுகொண்டது.

இந்த மணற்காட்டிலும் எழுபத்திரெண்டு பேர் கொல்லப்ட்டனர்.  தமிழர்களின் வரலாற்றில் சொல்லில் வடிக்கமுடியாத பெரும் தேசியத் துயரம் இது.

இந்தோனேசியாவுக்கு அருகே, இந்துமா கடலின் அடித்தளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கமே கடற்கோளைப் பிரசவித்தது. நிலநடுக்க அதிர்வுகள் கடல்நீரில் ஏறி மென்மேலும் வேகம் பெற்றதால், அலைகள் கரையை நெருங்கும்போது அசுரப்பலம் பெற்றன. ஆழிப்பேரலைகளாக மேலெழுந்து வந்தன.

இந்த இயற்கை அனர்த்தத்தினால் அன்று, இந்து சமுத்திர கரையோர நாடுகளில் ஏறத்தாழ இரண்டரை இலட்சம் பேர் பலியாகினர். மில்லியன் கணக்கானோர் ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர்.

அதன் ஒன்பது ஆண்டுகள் கழிந்துவிட்ட போதும் இன்னும்  ஆற்றமுடியாத அளவுக்கு வலியைத்தந்த கடற்கோள் கூடவே, எமக்கு வலிமையான பாடம் ஒன்றையும் போதித்து விட்டுச் சென்றிருக்கிறது.

இலங்கையில் அம்பாந்தோட்டையில் கண்டற் காடுகள் செழித்திருந்த கப்புஹென்வுல கரையில் ஆழிப்பேரலை அடங்கிப்போனது. அங்கு, இரண்டே இரண்டு உயிர்களை மட்டுமே பறிக்க முடிந்திருக்கிறது. ஆனால், அம்பாந்தோட்டையில் கண்டல்கள் அழிக்கப்பட்ட வாண்டுறுப்பா கிராமத்தில் ஆறாயிரம் பேர் வரை பலியாகினார்கள்.

எனவே கண்டல்மரங்களைத் தறித்து, கடற்புற்களைக் களைந்து, முருகைக்கற்களை அகழ்ந்து, மணல் மேடுகளை அகற்றி, இறால் பண்ணைகளை அமைத்துச் சூழல் ஆரோக்கியம் சீர்குலைக்கப்பட்ட ஆசிய நாடுகளின் கரையெங்கும் ஆழிப்பேரலை ஊழித்தாண்டவம் ஆடியது.

அதன்படி  'இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்' என்று உரக்கப் போதித்துத் திரும்பியது.

ஆனால், கடல் மாதா உலகு அதிர எச்சரித்த பின்னும் நாம் இன்னும் கேட்பதாக இல்லை. பட்டும் திருந்தாததவர்களாகத் தொடர்ந்தும் இயற்கையைச் சூறையாடி வருகிறோம்.

அதன்படி காங்கேசன்துறைக் கடல் அருகே சுண்ணாம்புக் கற்பாறை அதலபாதாளத்துக்குத் தோண்டப்படுகிறது. இங்கே நாகைக்கடல் அருகே மணல் கொள்ளை போகிறது. வடமராட்சி கிழக்கில் காணப்படும் இந்த மண்மேடுகள் கடல் அலைகளின் தாக்கத்தில் இருந்து எம்மைப் பாதுகாப்பதற்காக இயற்கை எங்களுக்கு அழித்த பாதுகாப்புச் சுவர்கள்.

ஆனால் அளவுகணக்கு இல்லாமல் கடல்மட்டத்துக்குக்  கீழாகவும்கூட மணல் தோண்டி எடுக்கப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் நாம் சிந்திய இரத்தத்தின் நெடி இன்னும்  அடங்கவில்லை. அதற்குள்ளாக, முல்லைத்தீவுக் கடல் அருகே இறால்ப்பண்ணைகளுக்கு இடம் தேடப்படுகிறது.

அதுபோல நந்திக்கடலில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு என்று கொடுவாமீன் வளர்ப்புத்திட்டம் பரிசீலனையில் உள்ளது. எங்களது எல்லாக் கடல்களிலும் கடல் வளங்களை இழுவைப்படகுகள் ரணகளமாக்கிக் கொண்டிருக்கின்றன.

கடல் அன்னையின் முலைச்சுரப்பு மட்டும்தான் அவளுடைய புதல்வர்களாகிய எங்களுக்கு உரியது. ஆனால், தலைமுறை தலைமுறையாக வளம் ஊட்ட வேண்டிய முலைகளை நாம் நுகர்வுவெறி தலைக்கேறி அறுத்துக்குடிக்கும் முயற்சியிலேயே இப்போது ஈடுபட்டிருக்கிறோம்.
சாந்தசொரூபியாக உறங்கிக் கிடக்கும் கடல் அன்னை மீண்டும் பொங்கிச் சீற மாட்டாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கடற்கோள் நினைவு நாளான இன்று கடற்தாயின் போதனையை ஏற்று, 'இயற்கை வளங்களை பாதுகாத்து அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோம்' என்று உறுதியேற்போம்.

இதுவே மாண்ட உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் என்று தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=746482538227327053#sthash.QrBUU4Db.dpuf