வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் வெற்றி
வல்வெட்டித்துறை நகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும் இழுபறிக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக சபையில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்து பேரையும் இன்றைய தினம் பொதுமக்கள் சபைக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை வெற்றிபெறச் செய்தனர்.
இந்த நகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த 17ம் திகதி சபையில் தவிசாளர் என்.அனந்தராஜாவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் சபையிலிருந்த 9 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்கள் எதிராகவும், 2 பேர் ஆதரவாக வாக்களித்தமையினால் வரவு செலவுத் திட்டம் 3 வாக்குகளால் தோல்வியில் முடிவடைந்தது.
தொடர்ந்து மீண்டும் இன்று தவிசாளரினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் எதிராக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்களையும் சபை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் சபைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இதன்போது சபையிலிருந்து 4 உறுப்பினர்களும் (தவிசாளர் உட்பட) ஆதரவாக வாக்களிக்க வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது. ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒருவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.