27 டிச., 2013


இளையராஜா உடல்நலம் பெறவேண்டும் :
வைரமுத்து விருப்பம்
 

உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமி புதிய படம் கங்காரு. பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் கங்காரு படத்திற்கு இசையமைத்திருக்கிறார் . பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார் ஏ.ஆர். ரஹ்மான்.  பாடலாசிரியர் வைரமுத்து வந்து வாழ்த்துப்பேசினார். தனக்கு முன்னதாக பேசிய சீமானின் பேச்சுக்கு நன்றி தெரிவித்தவர், எனது எல்லா பாடல் வெளியீட்டு விழாவுக்கும் சீமான் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிபிராஜின் பேச்சை நினைவுபடுத்திய வைரமுத்து, ‘கங்காரு தனது குட்டியை மடியில் சுமந்து கொண்டேதான் செல்லும். அதுமட்டுமல்ல… மிக உயரத்தில் பாய்ந்து செல்லும் மிருகமும் அதுதான் என்று சிபிராஜ் சொன்னார்.


இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். எவ்வளவு உயரத்தில் கங்காரு பாய்ந்தாலும் தன் குட்டியை விட்டுவிடாது. அதுபோல இந்த படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும், மீண்டும் இதே கூட்டணி இணைந்து படம் எடுக்க வேண்டும். இந்த டைரக்டரையும் இசையமைப்பாளரையும் தயாரிப்பாளர் விட்டுவிடக் கூடாது என்றார்.
 பேசிக் கொண்டே வந்த வைரமுத்து ஓரிடத்தில் நிறுத்தி நிதானமாக பேச ஆரம்பித்தார். ’’இன்று உலகத் தமிழர்கள் இதயங்களையெல்லாம் தன் இசையால் ஆண்ட இளையராஜா மருத்துவமனையில் இருக்கிறார். கிராமிய இசையை வெள்ளை மாளிகைக்கும் கேட்கும்படி செய்தவர் அவர். அவர் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக திரும்ப வேண்டும். இன்னும் ஆயிரம் பாடல்களுக்கு அவர் இசையமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆசைப்படுகிறேன்’’ என்றார்.