கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது: ராஜீவ் காந்தியுடன் பலியானோரின் குடும்பத்தினர் கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று குண்டுவெடிப்பில் அவருடன் பலியானவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கி வரும் அடுத்தடுத்த தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான அமெரிக்கை நாராயணன் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிற்கு சென்னையில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த சந்திப்பில் 1991ம் ஆண்டு பெரும்புதூரில் ராஜீவ் காந்தியுடன் பலியான சம்தானி பேகம், எட்வர்டு ஜோசப், முனிசாமி உள்ளிட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது ராஜீவ் காந்தியுடன் குண்டு வெடிப்பில் பலியான சம்தானி பேகத்தின் மகன் அப்பாஸ் கருத்து வெளியிடுகையில்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டபோது என்னுடைய தாயாரும் அங்கு சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் என் தாயார் உடல் சிதறி பலியானார். ஏற்கெனவே தந்தையை இழந்து தவித்த நான் எனது 10 வயதில் தாயாரையும் பறிகொடுத்தேன்.
இந்நிலையில் எனது தாயாரை கொலை செய்தவர்களை விடுதலை செய்வது எப்படி நியாயமாகும். குற்றவாளிகள் 23 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளதே பெரிய தண்டனை என்று சிலர் கூறுகின்றனர். நான் கூட வாழ்நாள் முழுக்க எனது தாயாரை இழந்து தவிக்கிறேன், இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா என்று கூறினார்.
தொடர்ந்து, குண்டு வெடிப்பில் பலியான சிபிசிஐடி அதிகாரி எட்வர்ட் ஜோசப்பின் தம்பி ஜான் கூறுகையில்,
எனது அண்ணன் நாட்டிற்காக உயிரை விட்டுள்ளார். அவரது மரணத்திற்கு காரணமானவர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றார்.
குண்டுவெடிப்பில் பலியான முனுசாமி என்பவரின் மகன் மோகன் கூறுகையில்,
கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது அரசியல் ஆதாயத்திற்கான செயலாகும். இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் மார்ச் 6-ம் திகதி வரவுள்ள தீர்ப்பினை பொறுத்து, குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்தின் சார்பில் பதில் மனு செய்வோம் என்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்கை நாராயணன் கூறுகையில்,
உச்சநீதிமன்ற தீர்ப்பினை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதே வேளையில் குற்றவாளிகள் தப்பிப்பதை ஏற்று கொள்ள முடியாது. எங்கள் தலைவர் ராஜீவ் காந்திக்காக மட்டுமல்ல, அவருடன் பலியான அப்பாவி பொதுமக்களுக்காகவும் குரல் கொடுப்போம். என்றார்.
இவ்வாறு தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.