பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தேசத்தை கட்டியெழுப்ப முடியாது எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்க நாம் தயார்
‘தேசத்துக்கு மகுடம்’ தேசிய அபிவிருத்திக் கண்காட்சி ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதி
பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் பல சவால்களை சந்தித்துள்ளோம். எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
குளியாப்பிட்டியில் நேற்று 8வது தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் போது, பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது நாம் அறிந்ததே. இந்த சவால்களுக்கு முகம்கொடுக்கத் தயார் என்பதால்தான் நாம் இச்சவாலைப் பொறுப்பெடுத்துக் கொண்டோம்.
அனைத்துக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. கடந்த கால ஆட்சியாளர்கள் பிரச்சினையை ஒதுக்கி நாட்டை ஆட்சிநடத்தப் பார்த்தனர். ஆனால் நாம் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டே ஆட்சி நடத்தப்பார்க்கின்றோம். அனைத்தையும் தெரிந்தே நாம் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பெடுத்தோம். கஷ்டத்தோடும் சரி நாம் பிரச்சினைக்குத் தீர்வு காணுவோம்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும் நாம் தெரிந்துகொண்டுள்ளோம். எமது அரசாங்கம் பலவீனமான அரசாங்கம் இல்லை. பலமான அரசாங்கம். எமது அரசாங்கத்தை நாம் மேலும் பலப்படுத்துவோம். இந்த நாட்டில் அனைத்து மக்களும் சகல வசதிகளையும், உரிமைகளையும், அபிவிருத்திகளையும் அனுபவிக்க வேண்டும், இதனை வெளிப்படுத்தும் நோக்கிலேயே வருடாவருடம் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. எதிர்கால பரம்பரைக்கு நாடு என்ற உணர்வையும், நாட்டின் மீதான நேசத்தையும் உயர்த்துவதாக இக்கண்காட்சி அமைகிறது.
எமது செயற்பாடுகளை சிலர் எரிச்சலுடன் நோக்கினாலும், விமர்சித்தாலும், சர்வதேச அளவில் உலக வங்கி, ஐ.நா. அமைப்புகள் போன்ற பிரசித்தமான உலக அமைப்புகள் எமது செயற்பாடுகளை அங்கீகரித்துள்ளன. ஐ.நா. உணவு நிறுவனம், யூ.என்.எச்.சி.ஆர்., உலக உணவு ஸ்தாபனம், உலக சுகாதார ஸ்தாபனம், உலக தொழிலாளர் அமைப்பு, உலக வங்கி போன்ற அமைப்புகள் எமது செயற்பாடுகளைப் பாராட்டியுள்ளன. அது மட்டுமன்றி எமது பொருளாதார அபிவிருத்தியை உலக நாடுகள் முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்ற அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளன என்றார்.
இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், நாட்டிலுள்ள சகல மக்களும் அபிவிருத்தியின் பயனை அடைய வேண்டும். இனம், மதம் என்ற வித்தியாசம் இல்லை. அனைவரும் பயன்பெறவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். சகலரும் நிம்மதியாக வாழக்கூடிய உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றார்.
தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி குளியாப்பிட்டிய வயம்ப பல்கலைக்கழக வளாகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நேற்று மாலை 5.45 மணிக்கு உத்தியோகபூர்வமாக அரம்பித்து வைக்கப்பட்டது.
கோலாகலமாக ஆரம்பமான தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி இம்முறை 8வது தடவையாக நடைபெறுவதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கண்காட்சிக்கான பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததையடுத்து கண்காட்சி நிகழ்வுகள் ஆரம்பமாகின.
உன்னதமான சமாதானத்தினூடாக வளமான தேசம் என்ற தொனிப்பொருளுடன் இம்முறை நடைபெறும் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி, நேற்று மாலை ஆரம்பமாகி தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்றைய முதல் நாள் கண்காட்சியைக் கண்டு களித்ததுடன், அமைச்சர்கள், பிரதிய மைச்சர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள், கல்விமான்கள், மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், உயர்மட்ட அரச அதிகாரிகள், கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
தேசிய கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்வதற்காக வருகைதந்த ஜனாதிபதிக்கு கலாசார முறைப்படி மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அமைச்சரும் கண்காட்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதி அவர்களையும், முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவையும் வரவேற்று பிரதான மேடைக்கு அழைத்துச் சென்றார்.
கண்காட்சி வளாகத்தில் ஆரம்ப நிகழ்வுகளுக்காக பிரம்மாண்டமான பல மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மத்தியில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் ஜனாதிபதி, பாரியார் மற்றும் அமைச்சர் சியம்பலாபிட்டிய ஆகியோரும், இருபக்கம் அமைக்கப் பட்டிருந்த மேடைகளில் மதத் தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர்.
கலாசார பாரம்பரிய அம்சங்களுடன் நிகழ்வுகள் ஆரம்பித்ததையடுத்து 8வது தேசத்துக்கு மகுடம் தேசியக் கண்காட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததைக் குறிக்கும் முகமாக விசேட ‘சன்னஸ் பத்திரம்’ ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து தங்கமுலாம் பூசப்பட்ட பாரம்பரிய வரலாற்று வாள் அதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த விசேட ஸ்தானத்தில் வைக்கப்பட்டது. இம்முறை தேசத்துக்கு மகுடம் கண்காட்சி வித்தியாசமான பல அம்சங்களுடன் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகளை தேசிய தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனமும் நேரடி ஒலிபரப்புச் செய்தது.
கண்காட்சியை ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்தை முதலாவதாகப் பார்வையிட்டார். அதனையடுத்து ஏனைய கண்காட்சிக் கூடங்களுக்கும் சென்று அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. கண்காட்சியைக் கண்டுகளிக்க வந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி நீண்டநேரம் அளவளாவினார்.
கண்காட்சியை பார்வையிடுவதற்கு அனுமதிச் சீட்டாக தேசிய லொத்தர் சபையின் 20 ரூபா லொத்தர் சீட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. குலுக்கல்கள் மூலம் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
வடமேல் மாகாண பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி, குளியாப்பிட்டிய மத்திய மாகாண வித்தியாலயம் ஆகிய இடங்களை உள்ளடக்கிய 162 ஏக்கர் காணியில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 500ற்கும் அதிகமான காட்சிக் கூடங்கள் அமைக் கப்பட்டுள்ளன.
8வது தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு குருநாகல், கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 50,000 மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டிருப்பதுடன், உட்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.