உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்ற ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு அழைப்பு
அமைச்சர் டளஸ் நியூயோர்க்கில் பான்கீ மூனுடன் பேச்சு
கொழும்பில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்ற வருமாறு ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்பிதழுடன் நியூயோர்க் சென்றுள்ள இளைஞர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ஐ. நா. செயலாளரைச் சந்தித்து இந்த அழைப்பை விடுத்தார்.
எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் உலக இளைஞர் மாநாட்டுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பான்கீ மூன், அழைப்புக்கு நன்றி தெரிவித்தார். அவர் வேலைப்பழுவுக்கு மத்தியில் இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் லலித் பியூம் பெரேரா, ஐ. நா. வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன ஆகியோர் பான்கீ மூனைச் சந்தித்துள்ளனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதன் குறிக்கோள் குறித்து ஐ. நா. செயலாளர் நாயகத்துக்கு விளக்கமளித்ததுடன், அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையின் இளைஞர் கொள்கைத்திட்டத்தின் பிரதியை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பான்கீ மூனிடம் கையளித்தார்.
தனது இரண்டாவது தவணைக்காலத்தில் பிரதான திட்டத்தில் இளைஞர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய பான்கீ மூன், உலக சனத்தொகையில் பாதிக்கும் அதிகமாகவுள்ள 25 வயதுக்கும் குறைவானவர்களே இளைஞர் உலகமாகும் என்றும் கூறினார். இளைஞர்களின் மேம்பாட்டுக்காக இலங்கை முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைவதாகவும் பான்கீ மூன் தெரிவித்தார்.
தேசம் என்ற வகையில் இளைஞர் மாநாடு எமது தேசத்தை கட்டியெழுப்ப துணைபுரியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக இச்சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெறவிருக்கும் உலக இளைஞர் மாநாட்டில் மூலம் வெளியிடப்படவிருக்கும் கொழும்பு இளைஞர் செயற்றிட்டம்’ 2015 ஆம் ஆண்டுக்கு பின்னரான பல்துறை செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்த உதவியாக இருக்கும் என்றார். இம்மாநாடு இளைஞர்களின் பிரதான தேவைகளை கருத்தில் கொண்டு ஏழு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக உள்ளதென்றும் அமைச்சர் கூறினார்.