புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014

புதைகுழிகளால் நிறையும் தமிழர் தாயகம்
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள் தமிழர் தாயகத்தில் மற்றொரு பகுதியான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு
செல்லும் வீதியில் மக்கெய்சர் விளையாட்டு அரங்குக்குப் பின்புறமாகக் கடந்த புதன் கிழமை மற்றொரு மனிதப் புதைகுழியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
விளையாட்டரங்குக்குப் பின்புறமாக கிணறு ஒன்று அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது சுமார் 3 அடி ஆழத்தில் அங்கு மனித எலும்புகள், எச்சங்கள் தென்பட்டுள்ளன. இது குறித்து கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பணியாளர்கள் உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். 
 
இதனையடுத்து இந்தப் புதை குழி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. 
இரண்டு புதைகுழிகளும் அமைந்துள்ள பகுதிகள் இந்து மத மக்களின் பாடல் பெற்ற திருத்தலங்களுக்கு அண்மையில் அமைந்திருக்கின்றமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மையில் கடந்த டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனையடுத்து இப்போது மற்றொரு முக்கிய திருத்தலமான திருகோண மலை திருக்கோணேச்சரம் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் புதைகுழியயான்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்தப் புதைகுழி விவகாரங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மன ஏக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. 
 
கடந்த காலப் போரின் போது வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான இளைஞர்,யுவதிகள் கடத்தப்பட்டுக் காணாமற் போயிருந்தார்கள். பலர் ஆயுதப் படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இதுவரை அவர் களுக்கு நடந்தது என்ன என்பது தெரியவில்லை.
 
இவ்வாறு கடத்தப்பட்டவர்களையும் காணாமற் போனவர்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்குமாறு கோரி தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றபோதும் இந்த விடயத்தில் இலங்கை அரசு காத்திரமான பதில் எதனை யும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. 
 
இப்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக காணாமற் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அது தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் கிளிநொச்சியில் இப்போது யாழ்ப்பாணத்திலும் இந்த ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த ஆணைக்குழு மூலம் தமது பிள்ளைகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் பலருக்கு உள்ள போதும் அவர்கள் பகிரங்க அமர்வுகளில் கலந்துகொண்டு தமது பிள்ளை கள் கடத்தப்பட்ட, காணாமற் போன சூழ்நிலைகள் பற்றியும் அவற்றைச் செய்தவர்கள் யார் என் பதையும் கண்ணீரும் கம்பலையுமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இவ்வாறு தமிழர் தாயகப் பகுதிகளில் காணாமற்போனோருக்கு என்ன நடந்தது என்று தெரியாத இக்கட்டான நிலையில் இப்போது மனிதப் புதைகுழிகள் வெளிப்பட்டு வருகின்றன.
 
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 62 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றுள் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும். சில எலும்புக் கூடுகளின் மண்டை ஓடுகளில் துவாரங்கள் உள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுவரை மன்னார் புதை குழியை தோண்டும் பணி முடிவடையவில்லை.
 
இன்னும் எத்தனை எலும்புக்கூடுகள் அதற்குள் உள்ளனவோ என்று தெரியவில்லை. இவ்வாறு மன்னார் மனிதப் புதைகுழி முடிவுறாத தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது திருகோணமலையிலும் புதை குழியொன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
 
மன்னார் புதைகுழியிலிருந்து இதுவரை 62 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளபோதும் இது தொடர்பில் காத்திரமான, நம்பகத்தன்மை கொண்ட சுயாதீன விசாரணையயான்றை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
 
புதைகுழி விவகாரம் குறித்து அரச எந்தவித சலனமும் இல்லாமல்  தன் பாட்டில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. புதைகுழியிலிருந்து பெரும் தொகையான எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பில் அரசு அக்கறையின்றி இருப்பதாகவே தெரிகின்றது.
 
இந்த மனித எலும்புக் கூடுகள் யாருடையவை என்பதைக் கண்டறிந்து பொறுப்புச் சொல்லும் மனநிலை அரசுக்குக் கிஞ்சித்தும் இல்லை. 
 
அரசின் இந்த அசமந்தப்போக்குக் குறித்து மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளமையை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 
 
"" கொலை செய்தவர்களும் அவர்கள்தான். நீதிபதியும் அவர்கள் தான். நீதி சொல்பவர்களும் அவர்கள்தான் என்றால் உண்மை எப்படி வெளியே வரப் போகின்றது?'' என்று புதைகுழி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் மன்னார் ஆயர். காணாமற் போனவர்களுக்கு நாம் நிவாரணம் கேட்கவில்லை.
 
அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் தேடுகிறோம். அதற்கு எமக்கு உரிமை உண்டு.  இதனை மனதில் கொண்டு உண்மையைக் கண்டறியும் வரை காணாமற் போனவர்களுக்காகக் கடைசி வரை குரல் கொடுக்க வேண்டும் என்றும் மன்னார் ஆயர் கூறியிருக்கிறார்.
 
புதைகுழி விவகாரத்தில் அரசின் செயற்பாடுகளை உற்றுநோக்கின் ஆயரின் கருத்து மிகச் சரியானது என்றே தோன்றுகின்றது. 
 
இவ்வாறானதொரு நிலையில் அந்தப் பட்டியலில் இப்போது திருகோணமலை மனிதப் புதை குழியும் இணைக்கப்படுகிறது.  புதைகுழி கண்டு பிடிக்கப்பட்ட உடனேயே அந்தப் பகுதி பாதுகாப்புப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. திருகோணமலை நகர சபைக்குச் சொந்தமான இந்தப் பகுதிக்குள் எவரும் செல்வதற்கு அனுமதிக் கப்படவில்லை. ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
 
பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டனர். 
புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பகுதி மிக நீண்ட காலமாகப் பற்றைக்காடாக இருந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னரே மைதானத்துக்காகக்  குறித்த பகுதி துப்புரவு செய்யப்பட் டது.
 
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதான வாயிலினுள் அமைந்துள்ள இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இந்தப் பகுதி இருந்து வந்துள்ளது.  இப்பகுதியில் முன்னர் பொதுமக்கள் நடமாட அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு முழுக்க முழுக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தப் புதைகுழிக்குள் மூன்று மனித எலும்புக் கூடுகள் உள்ளதாகக் கூறப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆயினும் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பலத்த இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறித்துப் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
இராணுவம் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளமை திருகோணமலை மனித புதை குழி விவகாரத்தை மூடி மறைப்பதற்கான முயற்சி என்று மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளன.
 
மன்னார் மனிதப் புதைகுழியால் அரசுக்கு ஏற்கனவே அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் திருகோணமலை மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடி மறைத்து விடுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
எது எவ்வாறாயினும் இந்தப் புதைகுழி இன்று திங்கட்கிழமை நீதிபதி முன்னிலையில் தோண்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே அது பற்றிய மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். 

ad

ad