புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் பிரச்சினை இல்லை! விக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தேசிய கொள்கையின் படியே எமக்கு தற்போது செயற்பட வேண்டியுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரல் வடமாகாண மக்களின் எவ்வித பங்கேற்பும் இன்றியே தயாரிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னரான தேவைகள் குறித்து அவர்கள் கருத்திற்கொள்ளவில்லை.
இராணுவத்தை ஈடுபடுத்தியுள்ள பின்புலத்தில், கீழ் மட்டம் தொடர்பில் ஆராயவில்லை. எனவே, இதன் மூலம் யுத்தத்தின் பின்னர் எவ்வாறு அபிவிருத்தியை அடைவது? அபிவிருத்தியை அடைந்துகொள்ள முடியாத நிலையில், துரித அபிவிருத்தியை நோக்கி எவ்வாறு பயணிப்பது?
அத்துடன், இந்த வருடம் ஜனவரி மாதம் 2ம் திகதி நான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்திய போது, நான் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன். ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதனால் நீங்களும் அதற்கு ஏற்றவாறு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி என்னிடம் கூறினார்.
வேறு விதமாக கூறுவதென்றால் பங்கேற்பு மற்றும் ஆலோசனை என்பவற்றைப் பெற்றுக்கொள்ள இந்த அரசாங்கம் விரும்பவில்லை,” என்றார் வடமாகாண முதலமைச்சர்.
யுத்தத்தின் பின்னரான தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். மத்திய அரசாங்கம் தொடர்ந்து நோக்கும் பயங்கரவாத எண்ணத்தை மாற்றும் தேவை எமக்குள்ளது.
யுத்தத்தின் பின்னர் அரச பாதுகாப்புத்துறை மனித உரிமை பாதுகாப்பு தொடர்பிலேயே அவதானம் செலுத்த வேண்டும். இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவதற்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். அதன்படி வட பகுதியில் உள்ள இராணுவம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.
யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்ட இந்த மாநாட்டில் பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பிலும் முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.
ஆர். சம்பந்தன் இது தொடர்பில் எந்த நிலைப்பாட்டில் உள்ளார் என்பது தொடர்பில் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. என்னிடம் அது குறித்து வினவினால் எம்மால் அதில் கலந்துகொள்ள முடியும் என்றே கூறுவேன்.
எனினும், எமக்கு செயற்திறன் மிகு உரிய நிகழ்ச்சித் திட்டம் அவசியமாகும். கடந்த 15 அல்லது 20 வருடங்களாக நாம் இதற்கு தீர்வைத் தேடினோம். எமது புத்திஜீவிகள் அது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

ad

ad