புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


எங்களுக்கு பலம் இருந்தால் மட்டுமே பச்சை, நீல, சிகப்பு கட்சிகள் எம்மை மதிக்கும்!- மனோ கணேசன்
மேல்மாகாணத்தில் எமது இனம் அரசியல் ரீதியாக பலம் பெறாவிட்டால், இந்த நாட்டில் அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் எம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காது என்பதை கொழும்பிலும், கம்பகாவிலும் வாழும் தமிழ் மக்கள் மிக தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கே எல்லா பெரும்பான்மை கட்சிகளையும் இனவாத பேய் உச்சந்தலையில் பிடித்தாட்டுகிறது. நாம் ஏணி வைத்து ஏறி இவர்களின் உச்சந்தலையில் ஆணி அடித்து இந்த இனவாத பேயை விரட்ட வேண்டும்.
அதற்கு ஒரே வழி நாம் அரசியல் ரீதியாக எம் சொந்த பலத்தை உறுதி செய்வதுதான். எங்களுக்கு பலம் இருந்தால் மட்டுமே பச்சை, நீல, சிகப்பு என்ற எல்லா நிறக்கட்சிகளும் எங்களை மதிக்கும் என்பது சத்திய வாக்கு. நமக்கு அரசியல் பலம் இல்லாவிட்டால் நாம் வாழ்நாள் முழுக்க கூழைக்கும்பிடு போட்டு வாழவேண்டியதுதான் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மேல்மாகாணசபை வேட்பாளருமான எஸ். ராஜேந்திரனின் ஏற்பாட்டில் வடகொழும்பு மட்டக்குளி கதிரானவத்தையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் எங்களை உதைக்கும் பக்கம் எல்லாம் உருண்டோடும் பந்து என்றும், இலவச வாக்கு வங்கி என்றும் நினைக்கிறார்கள். நாம் உருண்டோடும் பந்தும் அல்ல. இலவச வாக்கு வங்கியும் அல்ல. இவர்களுக்கு தேவையான எது எங்களிடம் இருக்கின்றது? எங்களிடம் எங்கள் வாக்கு என்ற பொக்கிஷம் மட்டும்தான் இருகின்றது.
இதைதான் இவர்கள் குறி வைக்கிறார்கள். இதை எம்மிடமிருந்து இலவசமாக வாங்க இவர்கள் முயல்கிறார்கள். அது முடியாத பட்சத்தில் எமது இனத்தை சேர்ந்த தமது கையாட்களுக்கு மாறுவேடம் அணிவித்து அனுப்பி வைத்து வாங்க முயல்கிறார்கள். எங்கள் வாக்குகளை நாம் எப்படி இலவசமாக இவர்களுக்கும், மாறுவேடம் பூண்டு வரும் இவர்களின் கையாட்களுக்கும் கொடுக்க முடியும்?
கொழும்பிலே தமிழர்களுக்கு ஒரு நல்ல குணம் இருக்கின்றது. அது என்ன? கேட்பவருக்கும், கேட்காதவருக்கும்கூட இருப்பதையெல்லாம் எடுத்து தானம் வழங்கி விடும், பரந்த மனம். நமக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், நாம் எல்லோருக்கும் அள்ளி வழங்குவோமாம். அவர்கள் வந்து எங்களுக்கு கர்ண பரம்பரை என்று பட்டம் வழங்குவார்களாம்.
இனி இது வேண்டாம். தனக்கு மிஞ்சியதுதான் தானம். அந்த பரந்த மனதை இனி சுருக்கி வைத்து கொள்ளுங்கள். இப்படி நான் சொல்வதை கண்டு யாரவது என்னை இனவாதி என்று சொன்னால், அந்த பட்டத்தையும் கொண்டு வந்து எனக்கு தாருங்கள். சந்தோசமாக இனவாதி என்ற பட்டத்தையும் வாங்கி வைத்துகொள்கிறேன்.
எங்கள் இன உரிமையை உரக்க கேட்டதற்காக, என்னை எவரும் இனவாதி என்று சொன்னால் அது பற்றி நான் கொஞ்சமும் கவலை பட போவதில்லை. நான் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்.
உண்மையான இனவாதிகளான இவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்? பூனையையும், வேப்பிலையையும், காக்கையும், குருவியையும் கொண்டு வந்து காட்டி எங்கள் வாக்குகளை இவர்கள் கேட்கிறார்கள். இந்த இடத்தில் இந்த மனோ கணேசனுக்கு அந்த சிவாஜி கணேசனின் வசனங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.
எதற்கு கேட்கிறார்கள் வாக்கு? அரசியல் கைதிகளை விடுவித்தார்களா? காணாமல் போனவர்களை கொண்டு வந்து தந்தார்களா? எங்கள் இன மாந்தர் மீது குற்றம் புரிந்தவர்களை நீதிமன்றில் நிறுத்தினார்களா? மலைநாட்டில் உழைத்து, உழைத்து உருக்குலைந்து போயுள்ள எங்கள் குல பெண்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தந்தார்களா? தேர்தல் காலத்தில் சொன்னபடி தோட்ட தொழிலாளிக்கு காணி, நிலம் தந்தார்களா? உலகத்துக்கு உறுதியளித்தபடி அரசியல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களையாவது பகிர்ந்து கொடுத்தார்களா? எதற்கு கேட்கிறார்கள் வாக்கு?
இவர்கள் செய்துள்ளது இதுதான். எமது வாக்குகளையே பயன்படுத்தி எம் நியாயமான உரிமைகளை பறித்துள்ளார்கள். இவர்களிடம் சென்று கூழைக்கும்பிடு போட்டால் எலும்பு துண்டுகளைத்தான் வீசுவார்கள். அவற்றை பொறுக்கி பொழுதுபோக்கும் ஒரு கூட்டம் அங்கு இருக்கின்றது. 
இந்த கூட்டம் நமது மக்களுக்கு பெற்று தந்தது ஒன்றுமில்லை. தங்கள் சொந்த வாழ்க்கை வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டார்கள். இந்த போக்கை தடுத்து நிறுத்தி எமது மக்களின் உரிமைகளை இந்த யுத்தத்திற்கு பிந்திய காலகட்டத்தில் உறுதி படுத்திக்கொள்ள நாம் எம்மை அரசியல் ரீதியாக பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தலைகீழாக நின்றாலும் நாங்கள் இந்நாட்டில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ ஆகமுடியாது. இந்நாட்டில் அரசாங்கங்களை எம்மால் தனியாக நின்று அமைக்கவும் முடியாது. இந்த ஜனாதிபதிகளிடமும், பிரதமர்களிடமும், அரசாங்கங்களிடமும் அரசியல் பேரம் பேச மட்டும்தான் எம்மால் முடியும்.
அதுதான் ஒரே வழி. அதற்கு நாம் அரசியல் பலமிக்கவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, எமது வாக்கை பயன்படுத்தி நாம் பலம் பெறுவது ஆகும். ஆகவே தான் வாக்குரிமையுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் இந்த முறை வாக்களிக்க உங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும். எங்கள் ஐக்கியம், எங்கள் வாக்கு, எங்கள் பலம் என்பதை நடைமுறையில் நிரூபிக்க வேண்டும்.

ad

ad