புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

முன்பு பாட்டுக் கச்சேரி; இசைக் கச்சேரி இப்போது யாழில் சண்டைக் கச்சேரி
கச்சேரி என்பது மக்கள் கூடும் இடம் என்பதைக் குறிப்பதாகும். இதன் காரணமாகவோ என்னவோ கச்சேரி என்ற சொற்பதம் எங்களிடம் அதிகம் பேசப்படும் பொருளாயிற்று.

பாட்டுக் கச்சேரி, இசைக் கச்சேரி, மேளக் கச்சேரி என்ற சொற்பதங்கள் எங்கள் வாழ்வோடு கலந்தவை .

இதற்கப்பால், எமது நிர்வாகம் சார்ந்த விடயங்களில் கச்சேரி என்ற அமைப்பின் வகிபாகம் காரணமாக கச்சேரி என்ற சொற்பதம் எமது மக்கள் வாழ்வோடு இரண்டித்துவிட்டது எனலாம்.

நிலைமை இதுவாகவிருக்க, யாழ்ப்பாணக் கச்சேரியில் நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்ற போது ஏற்பட்ட சண்டை சச்சரவு, மோதல் சம்பவங்கள் எங்கள் அரசியல் தலைமைகளின் குப்பைத்தனத்தைக் காட்டுவதாகும்.

யாழ்.மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் என்றால், அங்கு மக்களின் தேவை பற்றி ஆராய வேண்டும்.

எனினும் நடக்கவேண்டியது நடக்காமல் வேறு விடயங்கள் பேசப்படும் போது எல்லாமே பிழைத்து விடுகின்றன.

எதுவும் பேசலாம்; எப்படியும் பேசலாம் என்ற நிலைமை அறியாமையின் வெளிப்பாடாகும்.

எனினும் எங்கள் தமிழ் அரசியல் தலைமைகளில் இருக்கக் கூடிய முட்டாள்தனங்கள் தமிழர்களால் ஒரு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தைக் கூட நடத்த முடியாது என்பதை நிரூபிப்பதாகவுள்ளது.

வடக்கு மாகாணசபைக் கூட்டத்தில் ஆளுங்கட்சிக்குள்ளேயே மோதல்பட்டு செங்கோலை உடைக்கும் அருவருப்புத்தனங்கள் ஒருபுறம், யாழ்ப்பாணக் கச்சேரியில் நடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சண்டைக் கச்சேரி மறுபுறம் என்பதாகவிருந்தால், தமிழ் மக்களின் உரிமையை இவர்கள் வென்றெடுப்பார்கள் என்று நம்பி எதிர்காலத்தில் மக்கள் இத்தகையவர்களுக்கு வாக்களிப்பது எந்தளவிற்கு பொரு ந்தமானதென்ற விடயம் மீள்வாசிப்புக்கு உட்பட வேண்டியதாகும்.

இந்த நாட்டின் நீதியரசராக இருந்த வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு இந்த நாடு முழுவதிலும் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.

அத்தகையை மதிப்புக்குரிய ஒருவரை முதலமைச்சராகக் கொண்டுள்ள நாம் அவருக்குரிய மதிப்பைக் கொடுக்க வேண்டும்.

எனினும் யாழ்ப்பாணக் கச்சேரியில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது அமைதியை ஏற்படுத்துமாறும் நிதானமாக செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தும் அதை எவரும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் கத்திக்குளறும் கலாசாரமே உயர்ந்தது என்று நினைக்கின்ற குப்பைத்தனங்கள் எங்கள் அரசியலில் இருக்கும் வரை எங்களுக்கு எந்த விடிவும் கிடைக்கதென்பதே உண்மை.

இதை உறுதிப்படுத்துவதாகவே யாழ்ப்பாணக் கச்சேரியில் நடந்த சண்டைக் கச்சேரி அமைந்துள்ளது.

தேர்தலில் யார் நின்றாலும் வாக்களிப்பது, எவரையும் தேர்தலில் நிறுத்துவது என்ற கொள்கைகள்; நேர்மையான - பண்பான- பணிவான சபைக்குறிப்பறிந்த அங்கத்தவர்களை அரசியலிலிருந்து வெளியேற்றியுள்ளது.

யார் உரத்துக் கதைக்கிறார்களோ; யார் அடிதடியில் வல்லவர்களோ; யார் சபை கெளரவம் தெரியாதவர்களோ; அவர்களே பொருத்தமான வேட்பாளர்கள் என்ற ஒரு பெரும் கொடுமைத்தனம் அரங்கேறும் போது, கச்சேரியிலும் கைகலப்பு நடக்கவே செய்யும்.

எதுவாயினும் சபைகளை, கூட்டங்களை யார்  குழப்பினாலும் அவர்களை அரசியலில் இருந்து வேரறுக்கும் தீர்ப்பை எமது மக்கள் வழங்காதவரை காட்டுமிராண்டித்தனங்கள் சபைகளை குழப்பவே செய்யும்
.

ad

ad