புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை: நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் தேவை: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தின்மீது ஏராளமான புகார்கள் - ஊழல்கள் - பாலியல் கொடுமைகள் பற்றியவை - பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. அது ஒரு போட்டி அரசுபோல  - புதுவையில் (Parallel Government)  நடந்து வரும் ஒரு மர்ம ஆசிரமம் ஆகி வெகு காலம் ஆகிவிட்டது.

அதனுடன் வடபுலத்திலும், மத்திய அரசில் அங்கம் வகித்தவர்களும் கொண்ட ஆதி நாள் தொடர்பு காரணமாக, அதில் நடைபெற்றவைகளைக் குறித்து யாரும் கவலைப்படாமல், அதை தனிக்காட்டு ராஜ்ஜியம்போல் நடத்தி வந்தனர்.

எந்த நோக்கத்திற்காக அந்த ஆசிரமத்தை வங்கத்தைச் சேர்ந்த அரவிந்த்கோஷ் -  பிரிட்டிஷ் அரசால் நாடு கடத்தப்பட்ட கால கட்டத்தில் வந்து தங்கி துவக்கி நடத்தினாரோ, அந்த நோக்கம் இப்போதும் அங்கு நிறைவேறும் வண்ணம் அதன் செயல்பாடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.

அங்கு கடந்த சில காலமாக நடந்து வந்த பாலியல் வன்கொடுமைகளும், ஏனைய ஊழல்களும்  கொதி நிலை அதிகமாகி வெடித்துக் கிளம்பியுள்ளது ஒருபுறம்;  மற்றொருபுறம் அய்ந்து பேர்களைக் கொண்ட, பீகாரிலிருந்து வந்து தொண்டு செய்ய விரும்பி, பல ஆண்டுகள் அங்கே தொண்டாற்றிய ஒரு குடும்பத்தினர் கொடுமைகளை சகிக்க முடியாமல் அநீதியை அகற்ற முடியாமல், அதனையே நாளும் பூண் போட்டுப் பாதுகாக்கிறார்களே என்ற வேதனை காரணமாக தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்! புதுவையில் உள்ள ஒரு அரசு இதற்குரிய தடுப்பு நடவடிக்கையை சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றிடும் வகையில், உரிய நேரத்தில் எடுத்திருந்தால், இந்த மூன்று உயிர்க் கொலையை தடுத்து நிறுத்தியிருக்கலாம்; அதைச் செய்யத் தவறி விட்டது. 

அங்கே ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெறுகிறது; கொலைகளும், கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்ற அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை அந்த அரசும் முதல்வரும் - ஏன் மத்திய அரசும்கூட (யூனியன் பிரதேசம் என்பதால் அதற்கும் முக்கிய பங்கு உண்டு) - சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவறிவிட்டது.

இந்நிலையில், புதுவை மக்கள் பொங்கி எழுந்து, தங்களது ஆவேச உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்த நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகளும், தவிர்க்க இயலாமல் நடைபெற்றுள்ள செய்தி பொது அமைதிக்குக் கேடு தருவதான கவலையை உருவாக்குகிறது!

விசாரணை ஆணையம் அமைத்திடுக!

இதுபற்றி உடனடியாக மத்திய அரசு இந்த ஆசிரமத்தின் நடப்புகள்பற்றி - விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக ஆர்வலர்கள், முதலிய மூவரைக் கொண்ட ஒரு ஆணையம் அமைத்து, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் (Time Bound) விசாரித்து, ஒரு அறிக்கையைப் பெற்று, பொது மக்கள் - சமூக ஆர்வலர்கள், நலம்விரும்பிகள் அனைவரின் கருத்துக்களைக் கேட்டுத் தர வேண்டும்.

அதன் மூலம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு. உடனே செய்யட்டும்! இதனை வற்புறுத்தி, புதுவையில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டத்தை ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து திராவிடர் கழகம் - அரசியல் பார்வை ஏதும் இன்றி - பொது நலக் கண்ணோட்டத்தோடு நடத்திடவும் தயங்காது. இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். 

ad

ad