புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2015

அமைச்சர்கள் ஆடிய ஆட்டம்!




நம் அமைச்சர்களுக்குள் இவ்வளவு திறமைகளா என்று வியக்கும் வகையில் இருந்தது மதுரையில் நடந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டி
. ஆம், அமைச்சர்கள் செல்லூர்ராஜும், டாக்டர் சுந்தரராஜனும் கலக்கி விட்டார்கள்.  (அம்மா பதவி பறிபோய் கார்டனில் முடங்கிக் கிடக்கும்போது உங்களுக்கு ஆட்டமும் பாட்டமுமா என்று எதிர் கோஷ்டியினர் பெட்டிஷன் எழுத ஆரம்பித்துவிட்டது வேறு விளையாட்டு! )
தமிழ் சமூகத்தோடு பின்னிப்பிணைந்திருந்த பல பாரம்பரிய விளையாட்டுகள் கால மாற்றத்தில் காணமல் போய்விட்டன. இதை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு, விளையாட்டுத் துறை மூலம் அந்த விளையாட்டுக்களை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் போட்டியாக நடத்த உத்தரவிட்டிருந்தது.
அந்த வகையில் மதுரையில் நடந்த விளையாட்டுப் போட்டியில்தான் அமைச்சர்கள் தங்கள் திறமையைக் காட்டினார்கள். இந்தப் போட்டியில் கிட்டிப்புள், பம்பரம், கிளியந்தட்டு, உறி அடிப்பது, தாயம், பல்லாங்குழி, நொண்டி விளையாட்டு என ஏகப்பட்ட விளையாட்டுகளை விளையாட அழைத்திருந்தார்கள். இதன் துவக்க விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சியினர் அனைவரும் விளையாட்டு வீரர்கள் ஆகிவிட்டார்கள்.
கிட்டிப்புள் விளையாட்டை துவக்கி வைக்க வந்த அமைச்சர்களை பார்த்து தொண்டர்கள், ‘‘அண்ணே நீங்க விளயாடி காட்டுங்கண்ணே’’ என்று உசுப்பேத்த, முதலில் வெட்கப்பட்ட அமைச்சர் செல்லூர்ராஜூ, பின்பு ரோஷம் வந்தவராக கிட்டியை வாங்கி பலம் கொண்ட மட்டும் அடித்தார். அது பறந்து போனது. ஹோவென்று அவரே குஷியாகிக் கத்தினார். அடுத்து உறிப்பானையை  அடிக்கச் சொன்னார்கள். கண்ணை கட்டாமல் அடிக்கவா என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார். ‘இதென்ன ரங்கம் இடைத்தேர்தலா... ரூல்ஸ்தான்’ என்று சத்தம் வந்தது. கமென்ட் செய்த நபரைத்தான் காணவில்லை.
திடீரென்று ‘‘நான் போட்டிக்கு ரெடி கண்ணை கட்டியே அடிக்கிறேன்’’ என்று செல்லூர் ராஜூ சொன்னதும் கண்ணைக் கட்டிவிட்டனர். அவரை ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலைராஜா  அழைத்து வந்தார். கம்பை பானைக்கு முன்பே ஓங்கியபடி வந்தார் செல்லூர். அவருக்கு முன்னால் எதிர் கோஷ்டியான மேயர் ராஜன்செல்லப்பா போய்க்கொண்டிருந்தார். அவர் தலையை குறி வைத்து நடந்து வந்தார். ‘‘அமைச்சர் விவரமாகத்தான் உறி அடிக்கிறேன்னு சொல்லியிருக்காருடா...’’ என்று சிலர் கிண்டலடித்துக் கொண்டிருக்க, அதற்குள் மேயர் சுதாரித்து விலகி விட்டார். எப்படியோ அந்தப் பானையை அடித்து நொறுக்கிவிட்டார் செல்லூர் ராஜூ.
செல்லுர்ராஜூ விளையாடுவதைப் பார்த்த  விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் சுந்தரராஜனுக்கும் வீரம் வந்துவிட்டது. நானும் விளையாடுறேன் என்றவரிடம் பம்பரத்தை எடுத்துக் கொடுத்தனர். ‘‘ஐயய்யோ... பம்பரம் குத்தி ரொம்ப நாளாச்சேப்பா, இப்போ கை வாட்டம் வராதே’’ என்றவரிடம் ‘‘சும்மா குத்துங்க அண்ணே’’ என்று கூட்டம் அவரை இழுத்துவிட, ‘‘ஊக்கு நல்லா வெச்சிருக்கா’’ என்று கேட்டவாறே பம்பரத்தை குத்தினார். அது சீறிக்கொண்டு சிலரின் வேட்டிக்குள் போக பார்த்தது.
அடுத்து சிலம்பம் சுற்றும் மாணவர்களிடம் சிலம்பத்தை வாங்கிச் சுற்றினார். ‘‘ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சின்ன வயசுல இதையெல்லாம் விளையாடாம மிஸ் பண்ணிட்டோம்னு வருத்தமா இருக்கு’’ என்று  ஃபீலிங் காட்டினார்கள். அப்புறம் சகஜ நிலைக்கு வந்தவர்கள் அடுத்தடுத்த விளையாட்டுகளை பார்வையிடச் சென்றார்கள்.

ad

ad