ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குமான மோதல். ‘புதுசா கட்சிக்கு வந்தவங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்’ என்று குஷ்புவை மறைமுகமாகக் குறிப்பிட்டு விஜயதரணி பேசியதாகச் செய்திகள். என்னதான் நடக்குது அங்கே? விஜயதரணியிடம் பேசியதில்...
‘‘வரவர ரணகளமாகிட்டே போகுதே காங்கிரஸ் கட்சி?”
‘‘காங்கிரஸ் தேசிய அளவிலான ஜனநாயகக் கட்சி. இங்கே யாருக்கும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகவே முன்வைக்கிற சுதந்திரமும், உரிமையும் இருக்கு. ஆனால் முன்வைக்கிற கருத்துகள், ஆலோசனைகள் கட்சியைப் பலவீனப்படுத்தாத அளவுக்கு நடந்துகொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு. கட்சியை பலவீனப்படுத்தும் விதமா வைக்கிற கருத்துகளைக் கட்சியின் விதிமீறலாகத்தான்
பார்க்க முடியும். இப்போ எல்லா பிரச்னைகளும் கட்சியின் செயற்குழுவில் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது. கட்சியின் வளர்ச்சிக்காக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எடுக்கும் முடிவுகளை நான் வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.”
‘‘கட்சியில் இப்போ கோஷ்டிப் பூசல்களே இல்லைனு சொல்றீங்களா?”
‘‘கோஷ்டிப் பூசல்னு குறிப்பிடுகிற விஷயத்தைதான் நான் கருத்துச் சுதந்திரம்னு சொல்றேன். கட்சிக்குள் நடக்கும் சின்னச் சின்ன சச்சரவுகளை ஊடகங்களில் பெரிதுபடுத்தி கோஷ்டிப் பூசல்களாகச் சித்தரிக்கிறார்கள். காங்கிரஸைப் பலவீனப்படுத்தப் பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்து ஜி.கே.வாசன் இருந்தவரைதான் கட்சிக்குள் கோஷ்டி இருக்கிற மாதிரி ஒரு பிம்பம் இருந்தது. இப்போது அப்படி எதுவுமே கட்சிக்குள் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாதான் செயல்பட்டுக்கிட்டு இருக்கோம்.”
‘‘குஷ்புவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நீங்க எதிர்த்ததாக வந்த செய்திகள் பற்றி...”
‘‘எந்த இடத்திலும் நான் குஷ்புவைக் குறிப்பிட்டுச் சொல்லவே இல்லை. இப்போ நான் செயற்குழுவில் இருக்கேன்னா, அதுக்குப் பின்னாடி 27 ஆண்டுகால போராட்டம் இருக்கு. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ என்ற பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியையும் நான் பெற்றதே இல்லை. என்னை மாதிரி பலபேர் கட்சியில் இருக்காங்க. இப்படி 27 ஆண்டுகள் கட்சியில் இருக்கிறவங்களுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை, கட்சியில் சேர்ந்து 27 நாளே ஆனவங்களுக்கும் கொடுத்தா, கோபம் வராதா? கட்சியின் உள் விவகாரங்களைக் கலந்து பேசுகிற செயற்குழு ஒரு ‘வார் ரூம்’ மாதிரி. கட்சியில் சமீபத்தில் இணைந்தவர்களையும் அங்கே உட்கார வெச்சா, நாங்க எப்படித் தைரியமா பேசமுடியும்? அதைத்தான் கூட்டத்தில் சொன்னேன். இப்படி கட்சியில் இருக்கிறவங்களைக் கண்டுக்காததினாலதான் அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க-வுக்குப் போயிடுறாங்க. இதைத் தடுக்கணும்னா, தகுந்த அங்கீகாரம் கொடுக்கணும். குஷ்புவை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்லவே இல்லை. அவங்களுக்கான அங்கீகாரமும் கொடுக்கணும்தான். அதே சமயம் அதுக்கான நேரமும் வரணும்னு சொல்றேன்.”
‘‘ஜி.கே.வாசனின் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க?”
‘‘மூப்பனார் ஐயா தனிக்கட்சி ஆரம்பித்தபோது அதுக்கான தேவை தமிழகத்தில் இருந்தது. இப்போ அது தேவையில்லாத ஒன்று. ஜி.கே.வாசன் ஆரம்பிச்சிருக்கிற கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி. ஓட்டைப் பிரிச்சுவிட்டா, அடுத்த தேர்தலிலும் அ.தி.மு.க அரியணை ஏறும்னு நினைச்சு, அ.தி.மு.க-வுக்காக இயங்கப் பார்க்கிறார் ஜி.கே.வாசன். அது வாசனுக்கும் வெற்றியைத் தரப்போறதில்லை. அவரும் காணாமப் போயிடுவார், அவரோடு சேர்ந்து இயங்கத் தயாராக இருக்கிற கட்சிகளும் காணாமப் போகிடும்.’’
‘‘நேரலை நிகழ்ச்சிகளில் பேசப்போறதுக்கு என்னென்ன குறிப்பெடுத்து வெச்சிருக்கீங்க?”
‘‘ஊழல்னா என்னனு மக்களுக்குப் புரியவே இல்லை. ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு ஜெயலலிதா தண்டனை பெற்றதாலதான் இந்த இடைத்தேர்தல் நடக்குதுங்கிற விஷயம் மக்களுக்குத் தெரியவே இல்லை. தெரிஞ்ச சிலரும் பணம் வாங்கிட்டு ஊழலுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. ஒரு தமிழச்சி என்ற முறையில் தமிழர்களை இப்படி ஆக்கிட்டாங்களேனு வெட்கப்படுறேன். ஒட்டுமொத்த அராஜகங்களின் உருவமா இருக்கும் அ.தி.மு.க அரசு. ‘பள்ளிகளில் பல்சுவை உணவு வழங்கியதற்கு’ இத்தனை கோடினு கணக்கு சொல்றாங்க. எந்தப் பள்ளியில் பல்சுவை உணவு பரிமாறினாங்கனு தெரியலை. ‘புது சாலைகள் அமைத்ததற்கு’னு ஒரு கணக்கு காட்டுறாங்க. நெடுஞ்சாலைத் துறையில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல ஊழல் நடந்திருக்கு. சத்துணவு முட்டையில் ஊழல், பால் ஊழல், மின்சார ஊழல்னு எல்லாமே ஊழல் மயம். 6,000 பேருந்துகள் இயக்கப்பட்டதா அறிவிச்சிருக்காங்க. அதெல்லாம் எங்கே ஓடுதுனு தெரியலை. மற்ற மாநிலங்கள் மின்சாரக் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க ஆலோசனை பண்ணிட்டு இருக்காங்க. இங்கே ‘மின்சாரக் கட்டணத்தை எவ்வளவு அதிகப்படுத்தலாம், அதே சமயம் எந்த அளவுக்குக் குறைவாக மின்சாரம் வழங்கலாம்’னு யோசிக்கிறாங்க. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, செயின் பறிப்புனு எத்தனை வன்முறை. எதிலும் அக்கறை காட்டாம ‘தேமே’னு இருக்கு தமிழக அரசு. குறிப்பே எடுக்காம வருடம் முழுவதும் பேச இத்தனை பிரச்னைகளும், ஊழல்களும் இருக்கு.’’
‘‘ஒருவேளை தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று நீங்கள் முதல்வரானால்...?”
‘‘மக்களோட அடிப்படைத் தேவைகளில் ஆரம்பித்து, வாழ்வாதாரம் வரை எல்லாமே பிரச்னைதான். அத்தனை விஷயங்களையும் மாற்றி ‘மாற்றுத் தமிழகம்’ உருவாக்கணும். அதுக்கு மக்கள்கிட்ட முதல்வர் நேரடித் தொடர்பில் இருக்கணும். சுருக்கமா சொல்லணும்னா, நான் முதல்வரானால் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் அத்தனை மக்களும் என்னுடன் தொலைபேசியில் பேசும் வசதியைச் செய்வேன். மக்களுடைய பிரச்னைகளைப் புரிந்துகொள்ள இந்தத் திட்டம் ஒண்ணு போதும். மொத்தத்தையும் மாத்திடலாம்!”