உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 257 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்னி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில்
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவுக்கு எதிரான படுதோல்விக்கு பதில் சொல்லும் கட்டாயத்தில் ஆடிய தென் ஆப்ப்ரிக்க அணி, வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக கேப்டன் டி வில்லியர்ஸ் ருத்ர தாண்டவம் ஆடினார். அவரது ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் முற்றிலும் நிலைகுலைந்து போயினர். தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் எடுத்து 408 ரன்கள் குவித்தது. இதுவே தென் ஆப்பிரிக்கா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எடுத்த அதிகமான ரன் ஆகும். டிவில்லியர்ஸ் தனது அதிரடி ஆட்டம் மூலம் 66 பந்துகளில் 162 ரன்கள் எடுத்தார். மிகவும் வேகமாக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற இடத்தையும் டிவில்லியர்ஸ் இதன் மூலம் பிடித்தார்.
இதனையடுத்து 409 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்தது. ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல், தென்ஆப்பிரிக்க அணியின் புயல்வேக பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 3 ரன்களில் நடையை கட்டினார். அப்போட் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். சுமித் 31 ரன்களில் அவுட் ஆனார். சமுவேல் ரன் எதுவும் எடுக்காமலும், கார்ட்டர் 10 ரன்களிலும், சிம்மோன்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் தொடர்ந்து அவுட் ஆகி வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் 16.4 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது.
தொடர்ந்து அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 33.1 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி அபார வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்க அணி தரப்பில் இம்ரான் தாகீர் அதிபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை டி வில்லியர்ஸ் பெற்றார்.