புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2015

கண்ணுபடப் போகுதய்யா...




ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று கேப்டனை வறுத்தெடுப்பதாக கேப்டன் தரப்பு கொந்தளித்து போலீஸ் கமிஷனர் வரை புகார் தந்துள்ள வேளையில் கேப்டனின் பாஸிட்டிவ் விஷயங்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 தன் கட்சித் தொண்டர்களை கேப்டன் அடிப்பதாக எல்லோரும் கிண்டல் செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர் ஆய கலைகளையும் அலசிக் குடித்தவர். பாரம்பர்ய வைத்திய முறைகளில் ஒன்றான தொடு சிகிச்சையை நன்கு கற்றறிந்தவர். சகலவிதமான நோய்களுக்கும் தன் தொடு சிகிச்சையினால் தீர்வு கண்டிருக்கிறார். எனவே ‘கேப்டன் அடிக்கிறார், கடும் கோபக்காரர்’ என அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது. மனிதத் தன்மையற்ற செயலும் ஆகும்.
 ‘ஒரு கோர்வையாகப் பேச மாட்டேன் என்கிறார்’ என அவர் மீது புகார் பத்திரம் வாசிப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் என்ன பேசுகிறார், எதைப் பேசினார் என உடனே புரியாதுதான். ‘கொண்டு கூட்டி பொருள் கொளல்’ முறையில் அவர் பேசியதை ஆழ சிந்தித்துப் பார்த்தால் எத்தனை ஆழமாக, காத்திரமாக, ஆணித்தரமாகப் பேசினார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழில் செய்யுள் பாடம் படிக்கும் உணர்வைப் பெற வேண்டும் என்பதை மனதில்கொண்டுதான் இப்படி அவர் பேசுகிறார்.
 தமிழுக்கு ‘ஆங்’ என்ற அழகு வார்த்தையைத் தந்த கொடை வள்ளல் அல்லவா நம் கேப்டன். ‘ஆழ்ந்த நன்றிகள்’ என புதுமையான சொல்லாடல்களைத் தமிழுக்கு அவரைத் தவிர யாரால் தர முடியும். புதுமையான தமிழ் வார்த்தைகளை மீட்டுருவாக்கம் செய்து கொடுப்பதில் கேப்டன் வாய் தேர்ந்தவர். ‘உப்புத்தண்ணியைக் குடிச்சவன் தண்டனையை அனுபவிச்சே ஆகணும்’ என்ற மகோன்னதமான புதுமொழியைத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குத் தந்தது நம் கேப்டன் அல்லவா?
 ஆளுங்கட்சியினர் மட்டையாக மடங்கிக் குனிந்து நின்று மேடைகளில் பேசும்போது எப்போதும் சீலிங்கைப் பார்த்துப் பேசும் ஒரே தலைவர் இன்றைய தேதியில் கேப்டன் மட்டும்தானே.
 ரோமாபுரியையும் கலிங்கத்துப்பரணியையும் கரைத்துக் குடிக்காமல், ‘நான் இப்படித்தான்... எனக்கு கோர்வையா பேச வராது. நீங்களா புரிஞ்சுக்கோங்க’ என முன்கூட்டியே வார்னிங் கொடுத்து வார்த்தைகளால் அடிபடாமல் நம்மைக் காக்கும் கடவுளே கேப்டன்.
 ‘கழகமே குடும்பம். குடும்பமே கழகம்’ என எளிமையாக வாழ்கிறார். தனக்கு அடுத்து மனைவி, அதற்கு அடுத்து மச்சான், இப்போது கலை வாரிசாக சண்முகப்பாண்டியன் என நெட்வொர்க்கை மிகச்சுருக்கி வைத்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்துவருகிறார்.
 கேள்வி கேட்பதில் நவீன சாக்ரடீஸ் கேப்டன். ‘நீயாடா சம்பளம் கொடுக்குறே?’ என அவர் கேட்டதும்தான் பல பத்திரிகையாளர்கள் விழிப்பு உணர்வு அடைந்து தங்களுக்கு சம்பளம் போடும் கேஷியர் பெயரில் இருந்து முதலாளி பெயர்வரை தெரிந்துகொண்டார்கள். 
 ‘ஒரு மாத காலம் நான் வெளிநாட்டில இருந்தேன். பேப்பர் படிக்காததால நாட்டுநடப்பு தெரியலை. அப்புறமா கேள்வி கேளுங்க’ என்ற ஒளிவுமறைவற்ற தைரியமான பேச்சை இங்கே எந்த அரசியல்வாதியால் பேச முடியும்?

ad

ad