புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2016

அ.தி.மு.கவின் வெற்றியை கொண்டாடும் அழகிரி! எரிச்சலில் உடன்பிறப்புகள்

அ.தி.மு.கவின் வெற்றியை ஆதரவாளர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் அழகிரி, பேஸ்புக்கில் பதிவிடும் தகவல்களால்
எரிச்சலில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.
மதுரை சத்யசாய் நகரில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் வெற்றியை ரசித்துக் கொண்டிருக்கிறார் அழகிரி.
அவரது ஆதரவாளர்கள் பலரும், " தேர்தல் வேலை செய்யச் சொல்வாங்கன்னு பார்த்தா, நம்மை நம்ப வைத்து ஏமாற்றினார்கள்.
நம்மைக் கழட்டிவிட்டதற்கான பலனை தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
தென்மண்டலத்தில் 20 தொகுதிகளில் சாதாரணமாக வெற்றி பெற்றிருக்கலாம். நம்மிடம் எதுவும் பேசாமல், அவர்களே தேர்தல் வேலை பார்த்ததன் விளைவுதான் தோல்விக்குக் காரணம்.
இதைவிடக் கொடுமை, கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அண்ணனை சந்திக்க வருவதையே தவிர்த்தார்கள்.
கோபாலபுரத்திற்கு நம்மைக் கூப்பிட்டு சமரசம் செய்தவர்கள், ' தேர்தல் நேரத்தில் உங்களுக்கான வேலையை தருகிறோம்' என நம்ப வைத்து ஏமாற்றினார்கள்.
நமது வலிமை என்னவென்று தலைமைக்கு இப்போதுதான் தெரிந்திருக்கும்.
இனி அண்ணனைத் தேடி அறிவாலயம் வரும்" என்கிறார்கள்.
ஆதரவாளர்களின் வார்த்தைகளை புன்சிரிப்போடு எதிர்கொள்கிறார் அழகிரி.
இன்னும் ஒருபடி மேலே போய், தன்னுடைய பேஸ்புக் பதிவில், ' மூத்தவன் சொல்லும் முத்துன நெல்லிக்காயும் புளிக்கத்தான் செய்யும். ஆனால், எதிர்காலத்திற்கு நல்லது' என தன்னுடைய ஆதரவாளர் எழுதிய சுவர் விளம்பரப் படத்தை போஸ்ட் செய்திருக்கிறார்.
அடுத்த பதிவில், 'தலைவர்' எனக் குறிப்பிட்டு, 68,587 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றதையும் பெருமையோடு பதிவு செய்கிறார்.
அழகிரி தரப்பினரோ, " அண்ணன் பெயரில் ஓரிரு எக்கவுன்ட்டுகள் ஃபேஸ்புக்கில் வலம் வருகிறது.
அவரிடம் அனுமதி பெற்றுத்தான் ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்கிறார். இதை அண்ணனும் வரவேற்கிறார்" என்கின்றனர்.
அப்பாவின் வெற்றியைப் பெருமையோடு பதிவு செய்யும் அழகிரி, கட்சியின் தோல்வியை உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்.
இந்த முரண்பாட்டை எப்படி எடுத்துக் கொள்வது?' எனக் கேள்வி எழுப்புகிறார்கள் அறிவாலயத் தரப்பினர்.
தேர்தல் முடிவுகள் உடன்பிறப்புகளுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, மதுரையில் உள்ள தனது வீட்டில் உட்கார்ந்தபடியே சமூக வலைத்தளங்களை வலம் வருகிறார் மு.க.அழகிரி.

ad

ad