26 ஏப்., 2019

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர்:

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

இந்த தொடரின் ஒவ்வொரு போட்டிகளுமே இரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.

இதற்கிடையில் இத்தொடரில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள், அவ்வப்போது உபாதைக்குள்ளாகின்றனர். ஆகையால் அவர்களுக்கு பதிலாக பல வீரர்களும் உள்வாங்கப்படுகின்றனர்.

மேலும், பல சானைகள் பதிவு செய்யப்படுகின்றன. வீரர்களுக்குள் முரண்பாடுகள், வீரர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இதுபோன்ற செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவ்வாறான செய்திகளை தற்போது பார்க்கலாம்,

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஏபி டி வில்லியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மற்றொரு அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்லின் சாதனையை நெருங்கி வருகின்றார்.

இறுதியாக நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், ஏபி.டி வில்லியர்ஸ் 44 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் ஆட்மிழக்காமல் 82 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இது அவரது 20ஆவது ஆட்ட நாயகன் விருதாகும்.

இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் 21 ஆட்ட நாயகன் விருதுடன் கிறிஸ் கெய்ல் முதல் இடத்தில் உள்ளார்.

கெய்லின் சாதனையை சமன் செய்ய டி வில்லியர்ஸ்க்கு இன்னும் ஒரு விருதுதான் தேவை. இந்த சாதனையை பெரும்பாலும் ஒரிரு போட்டிகளுக்குள் ஏபி.டி வில்லியர்ஸ் சமன் செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.பி.எல். தொடரில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில், ரோஹித் சர்மா, டோனி, டேவிட் வோர்னர், யூசுப் பதான் ஆகியோர் 16 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்று 3ஆவது இடத்தில் உள்ளனர்.
………………
இதேபோல றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், எதிர்வரும் ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

நடப்பு தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த குல்டர் நெய்ல் காயம் காரணமாக விலகியதால், மாற்று வீரராக டேல் ஸ்டெயின் உள்வாங்கப்பட்டார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், அந்த அணிக்காக சிறப்பாக பந்து வீசி வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து, தோள்பட்டையில் வீக்கம் ஏற்பட்டதையடுத்து ஓய்வு தேவை என்பதால் இறுதியாக நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக போட்டியில் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில், ஓய்வு தேவை என்பதால் டேல் ஸ்டெயின், ஐ.பி.எல். தொடரில் மீதமுள்ள போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.