26 ஏப்., 2019

உச்சக்கட்ட பாதுகாப்பிற்குள் நீதிமன்ற வளாகங்கள்! கவசவாகனங்களில் ரோந்து நடவடிக்கை

ஸ்ரீலங்காவில் தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலையடுத்து
பதற்ற நிலைசற்றும் தணியாது தொடர்ந்த வண்ணமுள்ளது. இதன் காரணமாக அவசரகால நிலை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு தொடர்ந்து இரவு வேளைகளில் ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்படுகிறது.
அதன் விளைவாக இன்றும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படலாமென சந்தேகிக்கப்படுவதால் கமாண்டோ படையினர் மற்றும் முப்படையினர் கொழும்பில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டதரணிகள் சங்கத்தின் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நீதிமன்ற வளாகத்திற்குள் உட்பிரவேசிக்கும் சட்டதரணிகளின் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிமன்றத்திற்கு வருகை தருபவர்கள் வெளியேறுவதற்கான விசேட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பு கருதி இந்த விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக சட்டதரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.