சட்டப்பேரவை விதிகளின்படி அனைத்தும் முறையாக இருப்பதால் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மூவரின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டுவிட்டதாக, தமிழ்நாடுசட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் மே 25 ஆம் தேதியன்று அறிவித்துள்ளார்.
"தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் த.வெ.க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தோம்" என்கிறார், மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல்.
"பேரவையில் பலத்தை பெறும் நோக்கில் த.வெ.க ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் அதுவும் சராசரி கட்சி என்பது நிரூபணம் ஆகிவிட்டது" என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று பேர் ராஜிநாமா செய்வது ஏன்? பின்னணியில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் த.வெ.க வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தங்களிடம் இருந்த தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை த.வெ.கவுக்கு வழங்கின.
'உரிய நேரத்தில் முடிவு' - சட்டப்பேரவை தலைவர்
இதன் தொடர்ச்சியாக, அரசுக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடந்தது. அப்போது அ.தி.மு.கவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏக்கள் 25 பேர் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளித்தது. இதன்பேரில் எந்த முடிவையும் சட்டப்பேரவை தலைவர் தெரிவிக்கவில்லை.
End of அதிகம் படிக்கப்பட்டது
மே 25 ஆம் தேதியன்று இதுதொடர்பாக சட்டப்பேரவை தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நாங்கள் தான் கொறடா என இரு தரப்பும் கூறுகின்றனர். இதனை ஆய்வு செய்வதற்கு காலக்கெடு உள்ளது. விதிகளுக்குட்பட்டு உரிய நேரத்தில் முடிவை எடுப்பேன்" எனக் கூறினார்.
த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தொடர்ந்து, அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டுமாறு அவர்கள் நிர்பந்தம் அளித்தனர்.
இதையடுத்து, அரசுக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏக்களின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்தநிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

'தவறாக பிரசாரம் செய்கின்றனர்'
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
ராஜிநாமா செய்தது குறித்து மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் சில விளக்கங்களை அளித்தார். அவர் பேசும்போது, "தி.மு.க உடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்ற கருத்தை என் மனம் ஏற்க மறுத்தது" என கூறினார்.
மதுராந்தகம் தொகுதிக்கு தேவையான வசதிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் த.வெ.க அரசுக்கு ஆதரவளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் பிளவு ஏற்பட்டுவிட்டது தான் பதவி விலகலுக்கான காரணமாக உள்ளதாகக் கூறுகிறார், மரகதம் குமரவேலின் கணவரும் திருப்போரூர் வடக்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளருமான குமரவேல்.
"தகுதிநீக்கத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் காரணமா?" என பிபிசி தமிழ் கேட்டபோது, "அது காரணம் அல்ல. இப்போதும் அவர் (பொதுச்செயலாளர்) அழைத்துக் கொண்டு தான் இருக்கிறார். அங்கு சென்றால் தகுதிநீக்கம் செய்வதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.
"கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக த.வெ.க அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். இதை காரணமாக வைத்து, மக்கள் மத்தியில் தவறான பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
த.வெ.கவை விமர்சித்த அ.தி.மு.க
இந்த விவகாரம் அ.தி.மு.க வட்டாரத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூவரின் ராஜிநாமாவை சட்டப்பேரவை தலைவர் ஏற்பதற்கு முன்பே மூன்று பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சென்று சந்தித்துள்ளனர்' என விமர்சித்துள்ளார், அ.தி.மு.க எம்.பி இன்பதுரை.
"மூவரையும் கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு த.வெ.க உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவது திட்டமிடப்பட்டவை" எனவும் அவர் விமர்சித்தார்.
"த.வெ.க அரசை பலப்படுத்துவதற்காக மூன்று பேரும் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். சராசரி அரசியல்கட்சியாக த.வெ.க செயல்படத் தொடங்கிவிட்டதாக இதன்மூலம் அறியலாம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் துரை கருணா.
த.வெ.கவின் நோக்கம் என்ன?
"த.வெ.க அரசை ஆதரித்த அ.தி.மு.கவின் 25 எம்.எல்.ஏக்களில் பெரும்பான்மையோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைக்கு செல்லும் முடிவில் உள்ளனர்" எனக் கூறும் துரை கருணா, "மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அது த.வெ.க அரசுக்கு ஆபத்தாக முடியும்" எனக் கூறுகிறார்.
இதனைத் தவிர்க்கும் வகையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் சிலரை ராஜிநாமா செய்ய வைத்து விசில் சின்னத்தில் போட்டியிட வைக்கும் முடிவை த.வெ.க தலைமை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"திருச்சி கிழக்கு மற்றும் ராஜிநாமா செய்யப்பட்ட மூன்று தொகுதிகளிலும் த.வெ.க வெற்றி பெற்றால் அரசை நகர்த்துவதற்கு உதவியாக இருக்கும். அந்தக் கோணத்தில் இதுபோன்ற நடவடிக்கையில் த.வெ.க ஈடுபட்டுள்ளது" என்கிறார் துரை கருணா.

தொகுதி மக்கள் ஏற்க வாய்ப்புள்ளதா?
"இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் விசில் சின்னத்தில் போட்டியிடும்போது மக்கள் ஏற்பார்களா?
"மூன்று பேரும் ஒரு முடிவை எடுத்துள்ளனர். விசில் சின்னத்தில் போட்டியிட்டால் அந்தந்த தொகுதி மக்கள் ஏற்பார்களா என்ற சந்தேகம் உள்ளது" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன்.
"தொகுதி மக்களின் விருப்பத்துடன் இவர்கள் கட்சி மாறவில்லை" எனக் கூறும் கா.அய்யநாதன், " இடைத்தேர்தல் நடக்கும்போது அ.தி.மு.க தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதனால் வாக்குகள் பிரியும். மூவருக்கும் வெற்றிவாய்ப்பு கடினமாகலாம்" என்கிறார்.
இதனை மறுத்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, "சட்டப்பேரவைத் தேர்தலில் விசில் அலை அடித்தபோதே இரட்டை இலைச் சின்னத்தில் நின்ற மூன்று எம்.எல்.ஏக்களும் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களுக்கு உள்ளூர் மக்களின் செல்வாக்கு ஓரளவுக்கு இருக்கும்" எனக் கூறுகிறார்.
"விசில் சின்னத்தில் போட்டியிடும்போது, நிலையான அரசை விஜய் அமைக்க வேண்டும் என்ற பார்வை அந்தத் தொகுதியில் உள்ள த.வெ.கவினருக்கு இருக்கும். இதனால் வெற்றி சாத்தியமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன" என அவர் குறிப்பிட்டார்.
ராஜிநாமா செய்து தேர்தலில் வெற்றி பெறுவது தங்களின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என்ற எண்ணம் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு உள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
மூன்று பேர் ராஜிநாமா செய்துவிட்டதால் த.வெ.க அரசுக்கு ஆதரவளித்த இதர அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் நிலை குறித்துப் பேசும் ஷ்யாம், "கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்" என்கிறார்.
"அவர்களைத் தகுதிநீக்கம் செய்வதற்கு சட்டப்பேரவை தலைவரால் மட்டும் தான் முடியும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
"தகுதி நீக்க நடவடிக்கையைத் தவிர்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அ.தி.மு.கவுக்கு வேலுமணி தரப்பினர் திரும்பலாம். அவர்கள் மீது அ.தி.மு.க அளித்த புகாரை வாபஸ் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.




