அவர் சொன்ன அந்த "ஒற்றை அதிகார மையம்" என்ற பிம்பம் தற்போது மெல்ல உடையத் தொடங்கியுள்ளதோ என்ற விவாதங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன. விஜய்யின் நிழலாகக் கருதப்படும் 'புஸ்ஸி' என். ஆனந்த் ஒருபுறம் இருக்க, கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரும், தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா அண்மைக்காலமாக எடுத்து வரும் விஸ்வரூபம், அவரே கட்சியின் மாற்று அதிகார மையமாக உருவெடுத்துள்ளாரோ என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ-க்களின் வரவும், ஆதவ் அர்ஜுனாவின் முக்கியத்துவமும் இதற்கு மிக முக்கிய சான்றாக, நேற்று தமிழக அரசியலில் அரங்கேறிய அதிரடி திருப்பத்தைக் குறிப்பிடலாம். அதிமுக-வில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் அதிருப்தியடைந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ பி. சத்யபாமா மற்றும் பெருந்துறை எம்.எல்.ஏ எஸ். ஜெயக்குமார் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்களை தவெக கட்சியில் இணைத்துக் கொள்ள விரும்பி நேராகச் சென்றது முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க அல்ல; மாறாக, அவர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்துத்தான் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். பொதுவாக மாற்றுக்கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் அல்லது எம்.எல்.ஏ-க்கள் இணையும் போது, கட்சியின் உச்சபட்சத் தலைவரான விஜய் முன்னிலையில்தான் வரவேற்பு இருக்க வேண்டும். ஆனால், தலைமைச் செயலகத்தில் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இந்த சந்திப்பும் இணைப்பும் நடந்தது, கட்சியில் அவரது அதிகாரம் எந்தளவுக்கு ஓங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மக்களின் குறைகளைக் கேட்கும் முன்களத் தலைவர் இதுமட்டுமன்றி, அண்மைக்காலமாக ஆதவ் அர்ஜுனா நேரடியாக களத்திற்குச் சென்று பொதுமக்களைச் சந்திப்பதும், அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்பதும் கணிசமாக அதிகரித்துள்ளது. முதலமைச்சர் விஜய் கோட்டை நிர்வாகத்திலும், கொள்கை முடிவுகளிலும் கவனம் செலுத்தி வரும் வேளையில், கட்சியின் முன்கள முகமாக ஆதவ் அர்ஜுனா செயல்பட்டு வருகிறார். தொகுதிப் பணிகள், மக்கள் குறைகேட்பு, கூட்டணிக் கட்சிகளுக்கான அழைப்பு (அண்மையில் விசிக-வை ஆட்சிமன்றக் குழுவில் இணைய அவர் விடுத்த திறந்தவெளி அழைப்பு) எனப் பல முக்கிய நகர்வுகளை ஆதவ் அர்ஜுனாவே முன்னின்று நடத்துகிறார். முன்னணி வரிசையில் முட்டி மோதும் அதிகார மையங்கள் தவெக-வின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, விஜய் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார் என்ற சூழல் மாறி, அவருக்கு அடுத்தபடியாக ஒரு வலுவான "முன்னணி வரிசை" (Front Row) தலைவர்கள் உருவாகியுள்ளனர். 'புஸ்ஸி' என். ஆனந்த்: கட்சியின் பொதுச் செயலாளராகவும், ஆரம்பகால ரசிகர் மன்றக் கட்டமைப்பை கையில் வைத்திருப்பவராகவும் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக விளங்குகிறார். ஆதவ் அர்ஜுனா: தேர்தல் வியூக வகுப்பாளர், அரசியல் நுணுக்கங்கள் தெரிந்தவர் மற்றும் கட்சியின் நிதி மற்றும் தேர்தல் மேலாண்மையைக் கவனிக்கும் அசுர பலம் கொண்டவராக வலம் வருகிறார். விஜய் ஆட்சியை தொடங்கிய போது "தவெக-வில் அதிகாரப் போட்டிக்கு இடமில்லை" என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். ஆனால், ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே, முக்கிய முடிவுகள் மற்றும் கட்சி சேர்க்கைகள் இந்த இரண்டாம் கட்டத் தலைவர்களைச் சுற்றியே நகர்வது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இன்னும் ஒற்றை அதிகார மையமாகவே நீடிக்கிறாரா அல்லது கட்சியின் சூழல் கருதி அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்துள்ளாரா? எது எப்படியோ, மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்கள் நேராக ஆதவ் அர்ஜுனாவை நாடி வருவதும், அவரே மனுக்களைப் பெற்று முன்னிலை வகிப்பதும், தமிழக வெற்றிக் கழகத்திற்குள் புதியதொரு அதிகார மையம் ஆழமாக வேரூன்றி விட்டதைத்தான் கோடிட்டுக் காட்டுகிறது. சத்தமில்லாமல் நகரும் இந்த அதிகாரப் பகிர்வு வரும் இடைத்தேர்தல்களிலும், கட்சியின் எதிர்காலத்திலும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் |