புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 டிச., 2013
            தி.மு.க. பொதுக்குழு என்றதுமே நாடெங்கும் பரபரப்பு. யாருக்கும் குறை வைக்கவில்லை கலைஞர். 

டிசம்பர் 15-ம் தேதி காலை 9 மணியிலிருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்திற்குள் நுழையத் துவங்கினர். கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம் இருவரும்
உறுப்பினர் களை மட்டுமே அனுமதித்தனர். மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரைத் தவிர உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். கடந்த பொதுக்குழுவில் கலந்துகொள்ளாத நடிகை குஷ்பு இந்த முறை வந்தபோது அவருக்கு அருகில் நின்று தங்கள் மொபைல் ஃபோனில் படம் பிடித்துக்கொள்ள உ.பி.க்கள் ஆர்வம் காட்டி னார்கள்.

உடல்நலம் தேறியிருந்த பேராசிரியர் அன்பழகனை கண்டு மெய்சிலிர்த்த உ.பி.க்கள் பலர் அவரிடம் சென்று உடல் நலம் விசாரித்தனர். காலை 10 மணிக்கு கலைஞர் வர, அடுத்த 5-வது நிமிடத்தில் பொதுக்குழுக் கூடியது. முதல் நிகழ்வாக பேராசிரியரின் துணைவியார் சாந்த குமாரி, வீரபாண்டி ஆறுமுகம் தொடங்கி  திரைப் பட இயக்குநர் ராம.நாராயணனின் தாயார் மீனாட்சி வரை மறைந்த 187 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனும் அடக்கம்.இதனையடுத்து, ஒரு வருடம் மற்றும் 9 மாதத் திற்கான கட்சியின் ஆடிட்டிங் ரிப்போர்ட்டை தணிக் கைக் குழு உறுப்பினர் காசிநாதன் வாசிக்க, அதனை ஏற்று ஒப்புதல் தந்தது பொதுக்குழு. இதனைத் தொடர்ந்து 23 தீர்மானங்களை நிறைவேற்றினர். தீர்மானம் நிறைவேறியதை அடுத்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க உறுப்பினர்களை ஒவ்வொருவராக அழைத் தனர் கல்யாணசுந்தரமும் டி.கே.எஸ். இளங்கோவனும்.

முதலில் மைக் பிடித்த திருச்சி சிவா, ""காங்கிரசை தூக்கிச் சுமந்ததால் தி.மு.க. பட்ட காயங்களும் வலிகளும் அதிகம். 2ஜி வழக்கில் ராசாவையும் கனிமொழியையும் கைது செய்தார்கள். சிறையில் அடைத்தார்கள். சிறையில் இருந்தது ராசா அல்ல; தி.மு.க.! தப்பே செய்யாத ராசாவை சிறையில் அடைத்தது பற்றி காங்கிரஸ் கொஞ்சமும் கவலைப்படவே இல்லை. தன் மீதான குற்றச்சாட்டுக்கு குற்றம் சாட்டப்பட்டவரை விளக்கம் சொல்ல அனுமதிக்காத விசித்திரம் உலகத்திலேயே எங்கும் பார்க்க முடியாது. சட்டபேரவை தேர்தலுக்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை கீழே நடத்திக்கொண்டே மேலே ரெய்டு நடத்தியவர் கள் காங்கிரஸ்காரர்கள். போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை, அவர் கையெழுத் தும் போடவில்லைன்னு இப்போ சொல்ற சி.பி.ஐ. அதிகாரி, எந்த அடிப்படையில் அவரை கைது செய்தார்? தேசிய அளவில் தி.மு.க.வை களங்கப்படுத்ததானே? ஈழத்தமிழர்களுக்காக போர் நிறுத்தம் வேண்டி கலைஞர் உண்ணாவிரதம் இருந்தபோது உள்துறையிலிருந்து ஒரு கடிதம் அனுப்பி போர் நின்றுவிட்டதாக பொய் சொன் னது காங்கிரஸ். இப்படி பல வழிகளிலும் தி.மு.க.விற்கு துரோகமிழைத்த காங்கிரஸுடன் இனி எப்போதுமே கூட்டணி வைக்கக்கூடாது. எந்த ஒரு குழப்பமும் இல்லா மல் கூட்டணி கிடையாது எனத் தெளிவாக தலைவர் அறிவிக்க வேண்டும்'' என்றபோது, அரங்கத்தில் எழுந்த கைத்தட்டல் அடங்குவதற்கு சில நிமிடங்கள் பிடித்தன. 


""காங்கிரஸும் கூடாது, பா.ஜ.க.வும் கூடாது'' என எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் ஸ்டார்ட் பண்ணிய துறைமுகம் காஜா, ""காங்கிரஸ் விஷம் என்றால் பா.ஜ.க. கொடிய விஷம். சிறுபான்மை இனத்தின் பாதுகாவலராக கலைஞர் இருக்கிறார். சிறுபான்மையினர் உங்களைத்தான் நம்புகிறார்கள். தேசிய கட்சிகளை தூக்கிச் சுமக்காமல் தனித்துப் போட்டியிட வேண்டும். நடிகர் கட்சியும் வேண்டாம்'' என்றார்.  

அடுத்து மைக் பிடித்த குத்தாலம் கல்யாணம், ""காங்கிரஸ் நம் முதுகில் குத்திவிட்டது. முதுகில் குத்து பவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். தி.மு.க.வுக்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது காங்கிரஸ். அந்த காங்கிரஸை மன்னிக்கவே கூடாது. காங்கிரசை விட்டால் பி.ஜே.பி.யுடன் கூட்டணியான்னு கேட்கிறார்கள். பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் செல்வாக்கு கிடையாது. அதோடு கூட்டணி வைத்தாலும் நாம்தான் கஷ்டப்பட வேண்டும். அதனால் இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வேண்டாம்''’என்றபோதும் கைத்தட்டல் எழுந்தது.  

திருச்சி நேரு, ""ஜவகர்லால் நேரு குடும்பத்தை தூக்கி சுமப்பதே தலைவர் கலைஞர்தான். நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று இந்திராகாந்தியை ஆதரித் தார். அப்புறம், இந்திராவின் மருமகளே வருக. இந்தியா வில் நல்லாட்சி தருக என்று சோனியாவை ஆதரித்தார். ஆனால், இதனால் நாம் கண்ட பலன் என்ன? தி.மு.க.வை காங்கிரஸ் கேவலப்படுத்தியதுதான் மிச்சம். துரோகி காங்கிரஸையும் புறக்கணிக்க வேண் டும், தமிழகத்தில் ஓட்டு வலிமை இல்லாத பா.ஜ.க.வையும் புறம் தள்ளவேண்டும்'' என்றார். காங்கிரஸுடன் கூட்டணி கூடாது என்று வார்த்தைகள் வரும் போதெல்லாம் பொதுக்குழு அதனை வரவேற்று ஆர்ப்பரித் தது. இதனை கலைஞரும் பேராசிரியரும் உன்னிப்பாக கவனித்தனர்.

இதற்கிடையே, பொதுக்குழுவில் கலந்து கொண்ட கனிமொழி திடீரென்று கூட்டத்திலிருந்து வெளியேறி வீட்டிற்குப் புறப்பட்டு விட்டார். ஏதோ கோபம் போல அவரே கிளம்பிவிட்டார் என்று செய்தி பறக்க, "கனி மொழியின் மகனுக்கு பிறந்த நாள். அதனால்  கலைஞரிடம் அனுமதி பெற்றே கிளம்பினார்' என்கிற செய்தியறிந்தே அமைதியானது பொதுக்குழு.

""எந்தக் கூட்டணியும் வேண்டாம்... தனித்துப் போட்டியிடுவோம்'' என்று பேசிய மதுரை முனியாண்டி, ""எம்.பி.தேர்தலின் போது தென்மாவட்டங்களில் வேட்பாளர் களை அறிவிப்பதற்கு முன்பு அஞ்சாநெஞ்சன் அழகிரியிடம் தலைவர் கலந்தாலோசிக்க வேண்டும்'' என்று சொன்னது தான் தாமதம், ""டேய் உட்கார்டா……பேசாதே... பேசாதே...'' என்று ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எதிர்ப்பு குரல் கொடுக்க, டி.கே.எஸ். ஓடிப் போய் முனியாண்டியின் பேச்சை நிறுத்தினார். உடனே கலைஞர், ""அவரை கீழே போகச் சொல்லுங்கள்'' என்று சொல்ல, பதட்டத் துடன் நடையை கட்டினார் முனியாண்டி. 

தென்சென்னை ஜெ.அன்பழகன், ""காங்கிரஸ் நமக்கு துரோகம் செய்துள்ளது. அதன் பலனை அவர்கள் அனுபவிப்பார்கள். பி.ஜே.பி. நம்முடைய கூட்டணியை விரும்பி அவர்களாகவே வந்தால் அதை தட்டிக் கழித்திட வேண்டாம். ஒரு வேளை பி.ஜே.பி.யுடன் கூட்டணி ஏற்பட்டால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்கக்கூடாது. 4 மந்திரி இல்லைன்னா தி.மு.க.வுக்கு ஒன்றும் ஆகிவிடாது. மந்திரியாவதால் மந்திரியாகிறவர்களுக்கு வேண்டுமானால் பிரயோஜனமாக இருக்கலாமே தவிர அவர்களால் கட்சிக்கோ கட்சிக்காரர்களுக்கோ எந்த பிரயோஜனமும் இல்லை'' என்றார் ஆவேசமாக. மந்திரிகளால் பிரயோஜனம் இல்லை என்ற வார்த்தைக்கும் பொதுக்குழுவில் ஏக கைத்தட்டல்கள்.

மதிய உணவிற்காக 1 மணிக்கு இடைவேளை விட்டார் கலைஞர். மீண்டும் மாலை 4.30 மணிக்கு பொதுக்குழு கூடிய போது, மைக் பிடித்த பொன்முடி, ""நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரு பக்கம், தி.மு.க. ஒரு பக்கம் நிற்கட்டும். ஒண்ணு அவங்க ஜெயிக்கணும் இல்லைன்னா நாம ஜெயிக்கணும். தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் என்ன வேலை? கூட்டணி உறவு வேண்டாம். தனித்து போட்டியிடுவோம். தமிழகத்தில் 4 முனைப்போட்டி வரட்டுமே. அப்பத்தான் மற்ற கட்சி களுக்கும் தங்களின் உண்மை பலம் தெரியவரும். அதிக இடங்களில் தி.மு.க. போட்டியிட்டாலே எந்த கூட்டணியுமில் லாமல் நல்ல வெற்றியை பெறமுடியும்'' என்று அழுத்தம் திருத்தமாக அவர் பேசியது உ.பி.க்களை உற்சாகப்படுத்தியது.  

திண்டுக்கல் ஐ.பெரியசாமி பேசும்போது, ""காங்கிரசுக்கு 3-ல் இருந்து 5 சதவீதம் வரை வாக்கு வங்கி இருக்கு. அதற் கேற்ப எதிர்ப்புகளும் அதிகம் இருக்கு. எல்லாம் கூட்டிப் பார்த்து  கூட்டணி விஷயத்தை கலைஞர் முடிவு செய்வார்'' என்றார். 

சுப்புலட்சுமி ஜெகதீசன், ""பி.ஜே.பி.க்கு இமேஜ் இருப்ப தாக சொல்கிறார்கள். அது கற்பனையான இமேஜ்.  அதனால் அந்த கட்சியுடன் கூட்டணி வேண்டாம். காங்கிரஸுடன் கூட் டணி இல்லைன்னு இந்த கூட்டத்திலேயே உறுதியாக தெரி விக்க வேண்டும். அந்த உறுதியை தலைவர் கொடுத்தால்தான் நாங்களெல்லாம் சந்தோஷமாக ஊருக்குப் போய் சேருவோம். தி.மு.க. மட்டும்தான் களத்தில் நிற்கிறது என்று நீங்கள் சொல் லுங்கள். அந்த ஒற்றை வார்த்தை போதும். நாளையி      லிருந்தே தேர்தல் களத்திற்குள் இறங்கிவிடுகிறோம்''’என்றார் ஆக்ரோஷமாக.


""நான் எந்த கருத்தையும் சொல்ல வேண்டாம் என்று தான் கடைசியில் போய் உட்கார்ந்தேன். ஆனாலும் தளபதி என்னை பேச வைத்து விட்டார்''’’என்று ஆரம்பித்த டி.ஆர்.பாலு, ""முரசொலி மாறன் உடல்நலம் குன்றிய நிலையில் ஹாஸ்பிடலில் இருந்தபோது 3 முறை சென்னை வந்த அத்வானி, ஒரு முறை கூட எட்டிப் பார்க்கவில்லை. அதே போல, கலைஞர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது சென்னை வந்த ராகுல்காந்தி யும் ஒரு முறைகூட பார்க்க வரவில்லை. இதை ராகுல்காந்தியிடமே நேருக்கு நேராக நான் கேட்டேன். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. பி.ஜே.பி.க்கும் பெரிய செல்வாக்கு இருப்பது போலத் தெரிய வில்லை. லோக்சபா தேர்தலில் 115 சீட்டை பி.ஜே.பி. பிடிக்கலாம். காங்கிரசுக்கு அதை விட குறைவாகத்தான் கிடைக்கும். எப்படி பார்த்தாலும் 250 லிருந்து 300 சீட்டுகளை மாநில கட்சிகள்தான் பிடிக்கப்போகிறது. அதனால் கூட்டணி பற்றி தலைவர் முடிவு செய்யட்டும்'' என்றதோடு முடித்துக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின் பேச வந்தபோது, பொதுக் கூட்டங்களில் எழும் கைத்தட்டல்களை போல இரண்டு மடங்கு அதிகமாக எழுந் தது. ஏற்காடு இடைத்தேர்தலிலிருந்து பேச்சைத் துவங்கிய ஸ்டாலின், ""ஏற்காடு தேர்தலில் சோர்ந்து போயிடுவோம்னு ஜெயலலிதா கணக்குப் போட்டார். ஆனா, நம்முடைய டஃப் ஃபைட்டை பார்த்து அவர் மிரண்டு விட்டார். எதிர்க்கட்சி மீது ஆளும் கட்சி புகார் கொடுக்க வேண்டிய அளவுக்கு ஜெயலலிதா வுக்கு பயத்தை ஏற்படுத்தியது நமது தேர்தல் பணி. தலைவர் ஜனநாயகவாதியாக இருக்கட்டும். தேர்தல் சமயத்தில் அவர் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும். கூட்டணியைப் பத்தி பேச 10 நாள், சீட் எண்ணிக்கையை பேச 10 நாள், தொகுதியை அடையாளம் காண 10 நாள்னு இழுத்துக் கிட்டே இருக்கிறதெல்லாம் கூடாது. ஜெயலலிதா மாதிரி சர்வாதிகாரமாக கையாள வேண்டும். கொடுக்கிறதை ஒத்துக்கிட்டா கூட்டணி, இல் லைன்னா இல்லைங்கிறது ஜெயலலிதா பாணி. அதனால்தான் ஆட்சிக்கு வந்தாலும் ஜெயலலிதா பெரும்பான்மையாக உட்காருகிறார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அசுர பலத்துடன் இருக்கிறார். ஆனா, நாம  கூட்டணி கட்சிகளுக்கு எல்லாத்தை யும் தூக்கிக் கொடுத்திட்டு ஆட்சி அமைத்தாலும் 90 சீட்டுகளோடு மைனாரிட்டியாக இருக்கிறோம். இதெல்லாம் ஒத்துவராது. இனி அதிகப்படியான இடங்களில் தி.மு.க. போட்டியிட வேண்டும். நாம் போட்டி போடுற இடங்களை முடிவு செய்து விட்டு மீதி இருப்பதைத்தான் பகிர்ந்தளிக்க வேண் டும்'' என்றார் உரத்த குரலில் ஸ்டாலின். ஸ்டாலினின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆரவாரமாக  கையொலி எழுப்பினார்கள் உறுப்பினர்கள் உணர்ச்சிப்பூர்வமாக.

இதனையடுத்து பேசிய பேராசிரியர் அன்பழகன், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை சிலாகித்துப் பேசிவிட்டு ""நாளைய நம்பிக்கை ஸ்டாலின்தான். 75 லட்சம் தொண்டர்கள் கழகத்தில் இருக்கிறார்கள். அவர்களின் வலிமையில் தனியாகவே தேர்தலில் நிற்கலாம். மற்றபடி கூட்டணி விஷயத்தை கலைஞர் பார்த்துக்கொள்வார்'' என்றார் இயல்பாக. 

கூட்டணி தொடர்பாக இத்தகைய கருத்துகள் எதிரொலித்த நிலையில்... கூட்டணி குறித்து முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அதன் அறிக்கையை வைத்து கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் புதிதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனையடுத்து பேசிய கலைஞர், நெல்சன் மண்டேலா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுவிட்டு, ""கழகத்தைப் பொறுத்தவரை தனித்தே நின்றாலும் கூட வெற்றிபெற முடியும்'' என்று சொல்லும்போதே ஏகத்துக்கும் கைதட்டல்கள் அதிர, ""அவசரப்பட்டு கைதட்டாதீர்கள். தனித்து நின்றே கூட நாம் வெற்றிபெற முடியும் என்று சொன்னால் ஒருவர் இருவருடைய உதவி இருப்பதும் நல்லது என்று அர்த்தம். நரேந்திர மோடிக்கு கிடைக்கிற விளம்பரங்களைக் கண்டு நீங்கள் அதிர்ச்சியடைந் திருக்கிறீர்கள். ஆனால் நானோ, பேராசிரியரோ, ஸ்டாலினோ அதிர்ச்சியடையவில்லை. 

பா.ஜ.க., பா.ஜ.க. என்கிறீர்களே... பா.ஜ.க. என்பது வாஜ்பாய் பொறுப்பில் இருந்ததோடு முடிந்துவிட்ட வரலாறு. வாஜ்பாய் போன்ற மனிதாபிமானமிக்க தலைவர்கள் பா.ஜ.க.வில் இப்போது இல்லை. வாஜ்பாய் பா.ஜ.க. வேறு, இப்போதைய பா.ஜ.க. வேறு'' என்று பா.ஜ.க.வுடன் கூட்டணி இருக்க வாய்ப்பில்லை என்பதை இப்படி சுட்டிக்காட்டிவிட்டு காங்கிரஸ் விஷயத்தை கையில் எடுத்த கலைஞர், ""தேர்தலில் தி.மு.க. தனியாக நின்றாலும் நிற்குமே தவிர நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்துகின்ற, நன்றி மறந்து செயல்பட்ட காங்கிரஸ்காரர்களையெல்லாம் மறந்துவிட முடியாது'' என்றபோது ஏகத்துக்கும் ஆர்ப்பரித்தார்கள் உடன்பிறப்புகள். 

தொடர்ந்து பேசிய கலைஞர், ""ராசாவை சிறையில் அடைத்தார்கள். ராசாவை மட்டுமல்ல என் மகள் கனிமொழியையும் கைது செய்தார்கள். எட்டு மாதம் சிறையில் வாட்டி வதைத்தார்கள். இன்னமும் அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. குற்றமே செய்யாதவர்களை குற்றவாளி களாக சி.பி.ஐ. மூலமாக கூண்டிலேற்றினார்கள். இதையெல்லாம் நாம் மறந்துவிடுவதற் கில்லை (கைத்தட்டல்). இதையெல்லாம் மறந்துவிட்டு காங்கிரஸோடு கூட்டணி சேர்வோம் என நீங்கள் எண்ண வேண்டாம்'' என்று கலைஞர் அழுத்தமாகச் சொல்லியபோது எழுந்த கைத்தட்டல்கள் நிற்க வெகுநேரமானது. 

இரவு 7 மணிக்கு பொதுக்குழு முடிந்து, வெளியே வந்த உடன்பிறப்புகள் ஒவ்வொருவரிட மும் இவ்வளவு காலமும் இல்லாத உற்சாகம் பொங்கி வழிந்ததைக் காண முடிந்தது. அவர்களிடம் நாம் பேசியபோது, ""இதுவரை எங்களை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை தலைவர் இறக்கி வைத்துவிட்டார்'' என்றனர் நெஞ்சை நிமிர்த்தியபடி.