புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


ராஜீவ் கொலையாளிகள் நால்வர் விடுதலை விவகாரம்: மத்திய அரசின் மனு மீது பிப்ரவரி 27-இல் விசாரணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் தமிழக அரசு தன்னிச்சையாக விடுதலை செய்ய அனுமதிக்கக் கூடாது
என்று உத்தரவிடக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) விசாரிப்பதாக தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை கூறியது.
இது தொடர்பான மனுவை தாக்கல் செய்த பிறகு நீதிபதிகள் முன் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, "ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவுரை கோரியும் மறு ஆய்வு செய்யக் கோரியும் இரண்டு மனுக்களை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அந்த மூவரையும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும்  நால்வரையும் (நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்) மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் தமிழக அரசு விடுதலை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையிலிருந்து ஆயுள் சிறை தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், மத்திய அரசு ஒப்புதலின்றி தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது. அம் மனு மீதான விசாரணை, மார்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தூக்கு தண்டனைக் குறைப்புத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரியும் மத்திய அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
இரு மனுக்களும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தொடர்புடையவை என்பதால் ராஜீவ் வழக்கி ல் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு எதிராக தற்போது மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம்: முதல்வர் ஜெயலலிதாராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளின் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு நீதிமன்றத்தில் உரிய பதிலை தமிழக அரசு அளிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியின் விவரம்:
கேள்வி: ராஜீவ் கொலை வழக்கில் மேலும் 4 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதே...
பதில்: இந்த விஷயத்தில் மத்திய அரசு நீதிமன்றத்துக்குச் செல்லும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழக அரசு தரப்பு பதில்களை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். மேலும் என்னென்ன வாதங்களை முன்வைக்க முடியுமோ அவற்றை நீதிமன்றத்தின் முன்வைப்போம் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

ad

ad