புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

முஸ்லிம்களின் கொலை: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை

புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்

வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் விரட்டப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்தமை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக் குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை
அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரேரணை கொண்டுவருபவர்கள் மேற்படி விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித பள்ளிவாசலில் இருந்து உலகிற்கு இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேகாலை மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று காலை இடம்பெற்ற முஸ்லிம் சமய வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. மேலும் குறிப்பிடுகையில் :-
நாட்டின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் மிகவும் மதிப்பளிக்க கடமைப்பட்டுள்ளனர். சுதந்திர வேட்கையை இந்த நாட்டில் சுடர்விட்டு பிரகாசிக்க செய்த பெருமை இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தை சாரும்.
ஏனெனில் சேர் மாக்கான் மாக்கார், டி. பி. ஜாயா, எம். எம். எம். அப்துல் காதர், சேர் ராசிக் பரீத், டொக்டர் எம். சி. எம். கலீல், முதலியார் எம். எஸ். காரியப்பர், எச். எஸ். இஸ்மாயில் போன்றவர்கள் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தரும் போராட்டத்திற்கு முன்னிலையில் நின்று செயற்பட்டவர்கள்.
சுதந்திர அணியின் இனிமையை காணும் உரிமை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பூரணமாக உண்டு. நாம் இந்த நாட்டில் பிறந்தவர்கள், இந்த நாட்டு மண் எமக்கும் உரித்தானது எனவே ஏனையவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை முஸ்லிம்களும் பூரணமாக அனுபவிக்க வேண்டும். அந்த உரிமையை எந்த சக்தியும் தட்டிக்களிக்க முடியாது.
இந்த மண்ணில் பிறந்த நாம் இந்த மண்ணிலே அடக்கம் செய்யப்படுவோம். நாம் மரணித்த பிறகு சவூதியிலோ, பாகிஸ்தானிலோ, மலேசியாவிலோ கொண்டு சென்று அடக்கம் செய்யப் போவதில்லை. விசேடமாக கொழும்பில் உள்ளவர்கள் அடக்கம் செய்யப்படும் இடங்கள் நான்கு உண்டு மாளிகாவத்தை, குப்பியாவத்தை, ஜாவத்தை மற்றும் மாவத்தை ஆகிய மையவாடிகளிலேயே தான் அடக்கம் செய்யப்படுவார்கள் என்பதை உணர வேண்டும்.
வளிநாட்டு சக்திகளான போர்த்துக்கீசர்கள், ஒல்லாந்தர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை இந்த மண்ணில் இருந்து விரட்டுவதற்கு முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பை வகித்தனர் என்று வரலாறு பெருமையாக பேசுகிறது.
சீத்தாவக்கை இராச்சியத்தில் மாயாதுன்னவின் படையின் முன்னணி வீரர்களாக போராடியவர்கள் பிச்சை மரிக்கார், குஞ்செலி மரிக்கார், அலி மரிக்கார், இப்றாஹிம் மரிக்கார் போன்றவர்கள் என்பதை இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்கள் கூட மறுப்பதில்லை.
இந்தியாவிலிருந்து வெள்ளையனே வெளியேறு என்று காந்தி மகான் போராடியது போன்று இலங்கையிலும் வெள்ளையனை விரட்டுவதற்கு சிங்கள, தமிழ் தலைவர்களுடன் இணைந்து போராடிய வீரமிக்க தேசிய தலைவர்தான் டொக்டர் டி. பி. ஜாயா என்பதை இன்றைய சமுதாயம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
ஜெனீவாவில் மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள் வடக்கிலிருந்து 70 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே இரவில் விரட்டப்பட்டமை, காத்தான்குடி, ஏறாவூர், பள்ளியகொடெல்ல அளிஞ்சிப்பொத்தான பகுதிகளில் பள்ளிவாசல்களில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஆணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும்.
1948 ல் நாம் பெற்ற சுதந்திரம் 30 ஆண்டுகளாக இழந்த நிலையில் அதனை மீண்டும் பெற்றுத் தந்த மாபெரும் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் வியாபாரம், விவசாயம் செய்ய முடியாது இருந்தனர். தற்போது அந்த நிலை மாற்றம் அடைந்துள்ளது. நவீன வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்புக்கு வந்து வியாபாரம் செய்கின்றனர் இவற்றை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
சுதந்திரம் இருந்தால்தான் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட முடியும், பாங்கு ஒலிக்க முடியும். கல்வி கற்க முடியும். எனவே நாம் பிறந்த நாடு இது. நாமே இதனை பாதுகாக்க வேண்டும் என்றார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜித், முஸ்லிம் விவகாரத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஹஸன் மெளலானா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் எம். எச். எம். ஸமீல், ஜித்தாவிலுள்ள இலங்கை வெளிநாட்டு நலன்புரி சங்க தலைவர் டொக்டர் எச். எம். ரபீக் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

ad

ad